டீ, காஃபி பிரியர்களே: ஒருநாளைக்கு எத்தனை டீ, காஃபி குடிக்கலாம்? தெரிந்து கொள்ளுங்கள்!
தினசரி வாழ்வில் நம் மக்கள் எதை மறந்தாலும் டீ, காஃபி குடிக்க மறப்பதில்லை. பல நேரங்களில் பலரின் சோர்வை போக்கும் சிறந்த பானமாக உள்ளது இந்த டீ, காஃபி. ஆனால், இதனை தினசரி அதிக அளவில் உட்கொள்வதும் தவறான செயல். காபியோ அல்லது டீயோ ஒரு நாளைக்கு ஒன்று முதல் இரண்டு கப் அளவுக்கு பருகலாம். ஒரு கப் என்பது 100 முதல் 150 மில்லி வரை இருக்கலாம். இப்படியாக அளந்து குடிப்பது தான் சிறந்தது.
டீ, காஃபி
வெகு சிலரோ பெரிய மக் நிறைய காபியோ அல்லது டீயோ குடிப்பார்கள். அந்தப் பழக்கத்தை தவிர்ப்பது தான் மிகவும் நல்லது. கஃபைன் கலந்துள்ள பானங்களை குடிப்பதில் சில சாதகங்கள் உள்ளது போல சில பாதகங்களும் உள்ளன என்பதை நாம் உணர வேண்டும். தவிர ஒவ்வொரு முறையும் நீங்கள் குடிக்கும் காபி மற்றும் டீயில் சேரும் சர்க்கரையின் அளவும் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.
எடுத்துக்காட்டாக, தினசரி முறையாக உடற்பயிற்சி செய்யும் பழக்கமுள்ள நபர்கள், உடற்பயிற்சிக்கு முன்பாக பால் சேர்க்காத பிளாக் காபி குடிப்பது மிகவும் நல்லது. இது உடற்பயிற்சிக்கு தேவையான ஆற்றலைத் தர வல்லது. அதுவே களைப்பு மற்றும் படபடப்பு போன்றவை உள்ளவர்கள் கஃபைன் அளவை குறைக்க வேண்டியது மிகவும் அவசியம்.
தினசரி 4 முதல் 5 கப்புக்கும் அதிகமாக காஃபி, டீ குடிக்கும் போது நம் உடலில் நீர்ச்சத்து வறண்டு போகிறது. இதனால், சிலருக்கு பற்கள் கறையாகவும் வாய்ப்புள்ளது. வேறு சிலருக்கு செரிமானம் தொடர்பான பிரச்சினைகள் வரவும் வாய்ப்புள்ளது. காஃபி குடித்த அடுத்த 10 நிமிடங்களில் வயிறு வலிப்பதாக உணர்வார்கள். இது தொடர்ந்து ஏற்பட்டால் அவர்களின் உடலானது, பால் அல்லது கஃபைனை ஏற்றுக் கொள்ளவில்லை என்று அர்த்தம். எனவே அதைத் தவிர்ப்பது தான் மிகவும் நல்லது.
Masala Bath : சுவையான மகாராஷ்டிரா மசாலா பாத்! எப்படி செய்வது?
அதிக அளவில் காஃபி, டீ குடிப்பவர்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு ஏற்படும் வாய்ப்புகளும் அதிகம் உள்ளதால், காஃபியின் அளவை குறைத்துக் கொள்வது நல்லது. காஃபியில் உள்ள டானின், நம் உடலில் இரும்புச்சத்து கிரகிக்கப்படுவதைத் தடுப்பதால், ஹீமோகுளோபின் குறைபாட்டுக்கு காரணமாக அமைகிறது. குறிப்பாக பெண்களுக்கு, பொதுவாகவே ரத்த சோகை பாதிப்பு அதிகமாக இருக்கும் என்பதால், அவர்கள் காஃபி, டீயின் அளவை குறைப்பது அல்லது அறவே தவிர்ப்பது மிகவும் அவசியமாகும்.
செரிமானம் தொடர்பான பிரச்னைகள் இருப்பவர்கள், பால் தவிர்த்து பிளாக் காஃபி, பிளாக் டீ எடுத்துக் கொள்ளலாம். இப்போது பல கடைகளில் நட்ஸ் வைத்து தயாரிக்கப்பட்ட பால் வகைகள் கிடைக்கின்றன. அவற்றை மாட்டுப் பாலுக்கு மாற்றாகச் சேர்த்துக் கொள்ளலாம்.