குறட்டை விட்டுத் தூங்குபவர்கள் என்னவோ நன்றாகத் தான் தூங்குகிறார்கள். ஆனால் அவர்கள் அறையைப் பகிர்ந்து கொள்கிறவர்களின் நிலைதான் கவலைக்கிடம். இதனால் மறுநாள் காலை தூக்கத்தைத் தொலைத்த கணவனோ, மனைவியோ அல்லது சக நண்பரோ வெளிப்ப்படுத்தும் வெறுப்பானது குறட்டை விடுபவர்களுக்கு தர்மசங்கடத்தையும் தாழ்வு மனப்பான்மையையும் ஏற்படுத்தும்.

குரல் வளையின் காற்றானது, அளவுக்கு அதிகமாக செல்லும் போது, அதிகப்படியான ஒலியை உண்டாக்குகிறது. இது காற்றானது வாய் மற்றும் மூக்கு வழியாக செல்லும் போது அது பலத்த ஒலியை உண்டாக்குகிறது.

சளியினால் ஏற்படும் மூக்கடைப்பின் போது இந்த மாதிரியான குறட்டை சத்தம் வரும். இது தவிர, வயது, சைனஸ், அதிகப்படியான உடல் எடை மற்றும், புகைப்பிடித்தம் ஆகியவற்றின் காரணமாகவும் ஏற்படும்.

இவ்வாறு குறட்டை விடுவது அது நமது உடல் நலத்தைப் பாதிப்பதோடு நம்மோடு இணைந்து வாழ்பவர்களுக்கும் கஷ்டத்தை ஏற்படுத்தி விடும்.

குறட்டையைத் தவிர்க்க சில வழிமுறைகள்.

1.. படுக்கும் போது, சாதாரணமாகப் படுக்காமல் தலையணையைக் கொஞ்சம் உயரமாக வைத்து படுத்து தூங்கினால், குறட்டையைத் தவிர்க்கலாம்.

2.. ஒரு இரவு முழுவதும் பக்கவாட்டில் தூங்குவது சாத்தியமில்லை என்றாலும், பக்கவாட்டில் தூங்குவது குறட்டையைத் தவிர்க்கும்.

3.. நீராவி பிடிப்பதன் மூலம், மூக்கடைப்புகள் நீக்கப்பட்டு காற்று எளிதாகச் செல்லும்.

4.. இரவில் தூங்கச் செல்வதற்கு முன் பிட்சா, பர்கர், சீஸ், பாப்கார்ன், போன்ற உணவுகளை உண்டால் அது சளியின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து, குறட்டைக்கு வழிவகுக்கும். எனவே இரவு வேளைகளில் கொழுப்புச் சத்து மிக்க உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.

5.. புகைப்பிடிப்பதால் உடலுக்குப் பல்வேறு பிரச்சனைகள் வரும் என்பது நீங்கள் அறிந்ததே. அதில் குறட்டையையும் சேர்த்துக்கொள்ளலாம். புகைப்பிடிக்கும் போது அது தொண்டையில் புண் மற்றும் வீக்கங்களை உருவாக்குவதால் அது மூச்சு விடுவதில் சிரமத்தை ஏற்படுத்தி விடும்.

6.. சளிபிடித்தால் உடனடியாக சிகிச்சை பெற்றால் குறட்டை விடுவதைத் தவிர்க்கலாம்.