மாசு படர்ந்த சூழல்களுக்கு மத்தியில்தான் நாம் வாழ வேண்டியிருக்கிறது. எனவே இன்றைய நாளில் காதில் அழுக்கு சேருவது இயல்பாகிவிட்டது. 

சாதாரணமாக காதில் அழுக்கு சேருவது வேறு அதனால் ஆபத்தில்லை. ஆனால், அதிகப்படியான அழுக்கு சேருவதுதான் ஆபத்தானது. எனவே, காதில் சேரும் கட்டிப் போன்ற அழுக்கை  அடிக்கடி காது மூக்கு தொண்டை மருத்துவரிடம் சென்று சுத்தப்படுத்திக் கொள்வது நல்லது.

அழுக்கு சேர்ந்து கட்டியாக உள்ள நிலையில் டாக்டரிடம் சென்றால் அவர் சொட்டு மருந்து போடுவார். மூன்று அல்லது நான்கு தினங்கள் சொட்டு மருந்தைப் பயன்படுத்திய பிறகு மருத்துவரிடம் மீண்டும் சென்றால் கருவிகள் மூலம் அழுக்கை வெளியே எடுத்து விடுவார் அல்லது சிரிஞ்ச் மூலம் தண்ணிரைப் பீய்ச்சி அழுக்கை வெளியே எடுத்து விடுவார்.

காதில் அழுக்கு சேர்ந்தால் மருத்துவரிடம் செல்கிற போது  காதுகளில் உள்ள அழுக்கை டாக்டருடன் சேர்ந்து நோயாளியும் பார்க்கும் நவீன வசதி தற்போது உள்ளது.

‘இயர் எண்டோஸ் கோபி” என்கின்ற சாதனம்தான் அது. அக்கருவி மூலம் டாக்டருடன் சேர்ந்து நோயாளியும் நடுக்காது வரை உள்ள காதின் நிலைமையை நேரடியாகப் பார்க்கலாம்.

இந்த நவீன வசதி காரணமாக அழுக்கு உள்பட காதின் தன்மையை முழுமையாக ஆய்வு செய்ய முடியும். செவிப்பறையில் ஓட்டை இருந்தால்கூட அழுக்கை வெளியேற்ற சிரிஞ்ச் மூலம் நீரைப் பீய்ச்சுவது ஆபத்தாகும். இதுபோன்ற வேளையில் எண்டாஸ் கோப்தான் பெரிய உதவியாக இருக்கும்.