என்ன சாப்பிட வேண்டும்? என்ன சாப்பிடக் கூடாது? குறித்த விழிப்புணர்வு பரவலாக ஏற்பட்டு வரும் இச்சூழலில், என்ன சாப்பிட்டாலும் அதை எப்படிச் சாப்பிட வேண்டும் என்பதிலும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

எல்லாத்துக்கும் ஒரு முறை இருப்பதுபோல சாப்பிடுவதற்கும் ஒரு முறை உண்டு. அந்த முறைக்குள் சாப்பிடுவதுதான் சிறந்தது என்பதை நம் முன்னோர் வகுத்து வைத்திருக்கிறார்கள்.

மேலைநாட்டுக் கலாசாரத்தின் தாக்கம் நம் உண்ணும் முறையைக் கூட மாற்றி விட்டது. பஃபே சிஸ்டமும் சரி, தெருவோர தள்ளுவண்டி உணவகங்களிலும் சரி நின்று கொண்டுதான் சாப்பிடுகிறோம்.

வாயில் முழுமையாக அரைக்காமலேயே விழுங்கி விடுகிறோம்.

பேசிக்கொண்டே சாப்பிடுவது, சாப்பிடும்போது தண்ணீர் குடிப்பது ஆகியவற்றையெல்லாம் மருத்துவம் முற்றிலும் புறக்கணிக்கிறது.

சாப்பிடும் முறைதான் என்ன?

‘‘சித்தர் மரபுப்படி சாப்பிடுவதற்கென ஒரு முறை இருக்கிறது. சித்தர்கள் வகுத்து வைத்தனவற்றின் மகத்துவத்தை இன்றைக்கு நம்மால் உணர முடியவில்லை என்றாலும் என்றைக்காவது உணர்வோம்.

‘அள்ளித் திணிச்சா அற்பாயிசு... நொறுங்கத் தின்னா நூறாயிசு’ என்றொரு பழமொழி இருக்கிறது. நன்றாக மென்று சாப்பிடாமல் வெறுமனே உணவை அள்ளித் திணித்தால் ஆயுள் குறையும். அதுவே உணவை பற்களால் நொறுக்கி சாப்பிடும்போது நூறு ஆண்டுகள் ஆரோக்கியத்துடன் வாழ முடியும் என்பதுதான் அதன் பொருள்.

வாயில் பற்கள் இருப்பதற்கான காரணம் உணவை நன்கு மென்று சாப்பிடுவதற்குத்தான். மென்று சாப்பிடும்போது வாயில் சுரக்கும் உமிழ்நீர் உணவுடன் கலந்து அதைக் கூழாக்க உதவும். அப்படி கூழான உணவு இரைப்பைக்குச் செல்லும்போது செரிமானம் சுலபமாக நடைபெறும்.

நன்றாக மெல்லாமல் அவசர அவசரமாக சாப்பிட்டோம் என்றால், அதை கூழாக்க இரைப்பையில் அமிலச் சுரப்பு அதிக அளவில் சுரக்கும். இரைப்பை நமது உணவை செரிக்க வைப்பதற்காக அதிகம் இயங்க வேண்டி வரும்.

அசிடிட்டி தொந்தரவு ஏற்படுவது கூட உணவைக் கூழாக்குவதற்காக அமிலச் சுரப்பு அதிகம் சுரப்பதனால்தான்.

தொண்டைக்குக் கீழே செல்வதெல்லாமே மலம் என்றொரு பழமொழி உண்டு. ஏனென்றால், தொண்டைக்குள்ளாகவே செரிமானம் முடிந்து விட வேண்டும் என்பதுதான் அதன் பொருள். அதனால்தான் நன்றாக மென்று சாப்பிட வேண்டும் என்பதையே அனைத்து மருத்துவங்களும் வலியுறுத்துகின்றன.

பேசிக்கொண்டே சாப்பிட்டோம் என்றால் உணவை நன்றாக மெல்ல முடியாது. பேசாமல் வாயை மூடிக்கொண்டு சாப்பிடும் போதுதான் உமிழ்நீர் சுரக்கும் என்பதோடு, அப்போது ஏற்படும் வெப்பம் உணவைக் கூழாக்க உதவி புரியும்.

கையால் சாப்பிடுவதுதான் சரியான முறை. கையிலெடுக்கும்போது நாம் எவ்வளவு உட்கொள்ள முடியுமோ அந்த அளவைத்தான் எடுப்போம். உணவின் ருசி, மணம் மற்றும் அளவுக்கு ஒப்ப நாக்கு, வயிறு மற்றும் உமிழ்நீர் சுரப்பிகள் தன்னை தகவமைத்துக் கொள்ளும். ஸ்பூன் மூலம் எடுத்துச் சாப்பிடும்போது இது நிகழ்வதில்லை.

கையால் சாப்பிடும்போதுதான் சாப்பிட்ட மன நிறைவே கிடைக்கிறது என்று பலர் சொல்வதற்கான காரணமும் இதுதான்.

சம்மணமிட்டு அமர்ந்து குனிந்து சாப்பிடுவதுதான் சரியான முறை. இன்று நடுத்தர மற்றும் பணக்கார வர்க்கமோ டைனிங் டேபிளில் அமர்ந்தும், பஃபே சிஸ்டத்தில் நின்று கொண்டும்தான் சாப்பிடுகிறார்கள்.

சம்மணமிட்டு அமர்தல் என்பது ஒரு ஆசன நிலை. அந்த நிலையில் அமர்ந்து குனிந்து சாப்பிடும்போதுதான் வயிற்றின் இயக்கு தசைகள் வேலை செய்யும்.

இரைப்பைக்குள் உள்ள காற்று வெளியேறி வாயுத் தொந்தரவுகள் ஏற்படாது. முக்கால் வயிறு நிறைந்ததுமே போதும் என்கிற நிலைக்கு வந்து விடுவோம்.

நின்று கொண்டு சாப்பிடும்போது குனிந்து நிமிர மாட்டோம். அதனால் இயக்கு தசைகள் வேலை செய்யாது என்பதால் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவோம். இரைப்பையில் இருக்கும் வாயு வெளியேறாது.

ஆசுவாசமடைதல் என்பது அமர்ந்த நிலையில்தான் முடியும். நின்று கொண்டு சாப்பிடும்போது ஆசுவாசமே இல்லாமல் அவசரமாகத்தான் சாப்பிடுவோம்.

சம்மணமிட்டு அமரும்போது உடலின் ரத்த ஓட்டம் இரைப்பையை நோக்கிப் பாயும். எந்த ஒரு உறுப்பும் சரியாக வேலை செய்ய ரத்த ஓட்டம் தேவை. நின்று கொண்டும், இருக்கையில் காலைத் தொங்கப் போட்டபடி அமர்ந்தும் சாப்பிடும்போது ரத்த ஓட்டம் இரைப்பைக்கு சரியான அளவு கிடைக்காமல், கால்களுக்குச் சென்று விடும்.

இரைப்பைக்கு ரத்த ஓட்டம் கிடைத்து அது சரியாக இயங்கினால்தான் செரிமானத் தொந்தரவு வராது.

சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கக் கூடாது. உணவைச் செரிப்பதற்கான அமிலத்தின் வீரியத்தை தண்ணீர் இளக்கி விடும். சாப்பிடுவதற்கு முன் ஒரு மடக்கு வெந்நீர் அருந்தலாம். குளிர்ச்சியின் தன்மை சுருங்க வைப்பது, வெப்பத்தின் தன்மை விரிய வைப்பது. வெந்நீர் ஒரு மடக்கு அருந்துவதால் உணவுப்பாதை விரிந்து உணவு உட்செல்லுவதற்கு ஏதுவாக இருக்கும்.

‘‘சோற்றைப் பொங்கி வடித்துச் சாப்பிடுவார்கள். அப்படி வடிக்கும்போது சோற்றில் இருக்கும் மிகையான சத்துகள் எல்லாம் வடிநீருடன் போய் அளவான சத்துகள் மட்டும் கிடைக்கும்.

காய்கறியைக் கூட சுடுநீரில் ஒரு கொதி விட்டு வடித்து அதன் பின்னர்தான் சமைத்தார்கள். காய்கறிகளின் சத்து நமக்குத் தேவையானதுதான் என்றாலும் அதற்கும் ஒரு அளவு இருக்கிறது. அதன் ஒட்டுமொத்த சத்துகளையும் நம் உடலால் கிரகித்துக் கொள்ள முடியாது.

காய்கறிகளை அதிகமாக உட்கொள்வதும் ஆபத்துதான். பீர்க்கங்காயை அதிகம் சாப்பிட்டால் பித்தம் அதிகமாகி, ரத்த அழுத்தம் அதிகரிக்கும். முள்ளங்கி அதிகம் சாப்பிட்டால் வயிற்றுப் பிரச்னை மற்றும் அதிகம் சிறுநீர் வெளியேறுதல் நடக்கும். கொதி விட்டு தண்ணீரை வடிக்கும்போது அதன் சத்துகள் சமநிலைக்கு வந்துவிடும்.