பூச்சிகளிலேயே கொசுக்கள் மிகவும் ஆபத்தானவை. ஏனெனில் கொசுக்களினால் ஏற்படும் காய்ச்சல்களால், உயிருக்கே ஆபத்து ஏற்படும். அதிலும் டெங்கு, மலேரியா போன்ற உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் காய்ச்சல்கள் கொசுக்களின் மூலம் தான் ஏற்படுகிறது.

குறிப்பாக தற்போது நகரங்களில் சுற்றுச்சூழல் மிகவும் மோசமான நிலையில் ஆங்காங்கு நீர் தேங்கிய நிலையில் இருப்பதால், கொசுக்களானது எளிதில் உற்பத்தியாகின்றன. ஆகவே பலர் வீட்டில் கொசுக்களை விரட்டும் மருந்துகளை பயன்படுத்துகின்றனர்.

இத்தகைய கொசு மருந்துகளால், சிலருக்கு அலர்ஜி கூட ஏற்படும். எனவே அத்தகையவர்கள் வீட்டில் கொசுக்களை விரட்டக்கூடிய செடிகளை வளர்க்கலாம். இதனால் அந்த செடிகளின் நறுமணத்தால், அவை வீட்டையே அண்டாது.

மேலும் கொசுக்களை விரட்டுவதற்கு பயன்படும் பெரும்பாலான செடிகள் கொசுக்களை விரட்டுவதோடு, அலங்காரத்திற்கும் பயன்படுகிறது. வீட்டையும், குடும்பத்தையும் இயற்கையான முறையில் பாதுகாப்பதற்கு,

கீழே குறிப்பிட்டுள்ள சில கொசு விரட்டி செடிகளை வளர்த்து பயன்பெறுங்கள்.

சாமந்தி:

சாமந்திப் பூவின் நறுமணத்தினால், வீட்டில் கொசுக்கள் வராமல் தடுக்க முடியும். இந்த செடிக்கு நிறைய சூரியவெளிச்சமானது தேவைப்படும். ஆகவே இதனை தொட்டியில் வளர்த்து, காலையில் தோட்டத்திலும், மாலையில் வீட்டின் உட்பகுதியில் வைத்து வளர்க்கலாம்.

சிட்ரோநல்லாபுல் (Citronella):

இது ஒரு புல் வகையைச் சேர்ந்தது. இதன் ஸ்பெஷல் என்னவென்றால், இதிலிருந்து எலுமிச்சை வாசனை வரும். மேலும் இந்த புல் கொத்தாக, நீளமான கிளைகளை கொண்டது.

துளசி:

அனைவரது வீடுகளிலும் வளர்க்கும் செடி தான் துளசி. இந்த நறுமணமிக்க மூலிகைச் செடியை வீட்டில் வளர்த்தால், கொசுக்கள் வருவதை தவிர்க்கலாம்.

ஹார்ஸ்மிண்ட் (Horsemint):

இது ஒரு வகையான புதினா செடியாகும். இந்த செடியை வீட்டில் வளர்த்தால், அதன் நறுமணத்தினால், கொசுக்கள் வீட்டையே அண்டாது.

கேட்னிப் (Catnip):

இந்த செடியில் உள்ள டீட் என்னும் கெமிக்கல், கொசுவர்த்தி மற்றும் ஸ்ப்ரே போன்றவற்றை விட அதிக அளவில் இருப்பதால், இதனை வீட்டில் வளர்த்தால், இதன் வாசனையால் கொசுக்கள் வீட்டில் வருவதைத் தவிர்க்கலாம்.

லெமன் பாம் (Lemon Balm):

லெமன் பாம் செடியும் புதினா செடியின் வகையைச் சேர்ந்தது. ஆனால் இதில் எலுமிச்சை வாசனை வரும். இந்த செடியை வாசனை திரவியங்கள் தயாரிக்கவும் பயன்படுத்துவார்கள். எனவே இத்தகைய செடியை வீட்டில் வளர்த்தால், வீடே வாசனையுடன் இருப்பதோடு, கொசுக்கள் வராமலும் இருக்கும்.