நான்கு முறை தும்மல் வந்தாலே மருத்துவமனைக்கு ஓடுவார்கள் சிலர். டாக்டரும் பத்து டெஸ்ட்டுகளுக்கு பரிந்துரைச்சீட்டு எழுதித் தருவார். மூன்று நாள் ஆஸ்பத்திரி வாசத்தில் கணிசமான தொகை காலியாகி, வீடு திரும்பும்போது தெரியும்… அது சாதாரண ஜலதோஷம் என்று!
இன்றைய யதார்த்தம் இது. நோய் குறித்த எச்சரிக்கை அவசியப்படும் அதே வேளை, ‘எதற்கெடுத்தாலும் மருத்துவமனையா’ என்கிற கேள்வியையும் தவிர்க்க முடிவதில்லை.
‘‘இதற்கெல்லாம் ஒரு தீர்வு அதுவும் எளிமையான தீர்வு இருக்கிறது’’.
‘‘ஒரு புதிய டி.என்.ஏ பரிசோதனைத் தொழில்நுட்பத்தின் மூலம், வரக்கூடிய நோயை முன்கூட்டியே தெரிந்துகொண்டு அதைத் தடுத்துக் கொள்ளலாம்’’. அதற்காக நம்மிடம் வேண்டி நிற்பது, எச்சில்!
‘‘டி.என்.ஏ பரிசோதனையை அடிப்படையா வச்சு, வரக்கூடிய நோய்களை முன்னாடியே கண்டுபிடிக்கிற கான்செப்ட் இது. அமெரிக்காவுலயும் கனடாவுலயும் எப்பவோ வந்துடுச்சு. ‘மாஸ்டர் ஹெல்த் செக்கப்’னு பண்றாங்களே அதுக்கு இது ஒரு படி மேலன்னு சொல்லலாம்.
பரம்பரையா நம்மைத் தாக்கக் கூடிய பிரச்னைகள் எல்லாம் டி.என்.ஏ மூலம்தான் தொடருது. அந்த டி.என்.ஏவை கொஞ்சம் ஆராய்ஞ்சு பார்த்தா, நம்மளைத் தாக்குறதுக்காக கடைசி வரிசையில நிக்கிற நோயைக் கூட கண்டுபிடிச்சிடலாம்.
இந்த டெஸ்ட்டுக்கு ரத்தம் எடுக்க வேண்டிய அவசியமெல்லாம் இல்ல. வெறும் எச்சிலை டெஸ்ட் பண்ணினாலே போதும். அமெரிக்காவுல இந்த முறைக்கு நல்ல வரவேற்பு இருக்கு.
முதல் கட்டமா சர்க்கரை நோய், உடல் பருமன், வலிப்பு, மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட ஒன்பது வகை நோய்களுக்கான சாத்தியக் கூறுகளை முன்கூட்டியே கண்டுபிடிச்சு அதைத் தடுக்கத் தேவையான ஆலோசனைகளைத் தர்றோம்’’ என்கிறார் ‘லைஃப்லாங் வெல்நெஸ்’ என்னும் பெயரில் இந்த முறையை சென்னையில் அறிமுகப்படுத்தியிருக்கும் டாக்டர் சலீம் முகமது.
பரிசோதனை, ஆலோசனை என எல்லாமே ஆன்லைனில் நடக்கும் இந்த மொபைல் மருத்துவ சேவைக்கு இப்போதைய கட்டணம் பத்தாயிரம் ரூபாயாம்.
‘‘விருப்பப்படறவங்க எங்களோட வெப்சைட்ல போய் ஆர்டரைப் பதிவு பண்ணணும். உடனடியா அவங்களுக்கு ஒரு கிட் அனுப்பி வைக்கப்படும். அதுல இருக்கற சின்ன கண்டெய்னர்ல கொஞ்சம் எச்சிலைத் துப்பி அதை எங்களுக்கு அனுப்பி வச்சிடணும்.
மனித எச்சிலை ஏழு வருஷம் வரைக்கும் அறை வெப்பநிலையிலயே வச்சிருக்க முடியும்ங்கிறதால அப்படியே அனுப்பலாம். எந்தவிதப் பக்குவப்படுத்தலும் தேவையில்ல. அந்த எச்சிலானது எங்களோட லேப்ல இருக்கிற டாக்டர்களால பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, முடிவுல ஒரு ரிப்போர்ட் ரெடியாகும்.
அந்த ரிப்போர்ட்டை, மரபுரீதியான நோய்களால பாதிக்கப்பட்டவங்க / படாதவங்கன்னு ரெண்டு தரப்புல இருந்தும் நிறைய பேரோட டி.என்.ஏ.க்களை ஆய்வு பண்ணி நாங்க தயார் பண்ணி வச்சிருக்கிற ஒரு சாஃப்ட்வேரோட ஒப்பிட்டு ஃபைனல் அறிக்கை தயாராகும்.
முதல் டெஸ்ட் நோய்களை அடையாளப்படுத்துதுன்னா, ரெண்டாவது ஒப்பீடு அந்த நோய்களோட கடந்தகால செயல்பாடுகளை, எதிர்கால பாதிப்புகளைக் கண்டுபிடிக்க உதவுது.
தொடர்ந்து டயட் மற்றும் உடற்பயிற்சி மூலமா நோயைத் தடுக்குற ட்ரீட்மென்ட்’’ என்கிற சலீம், ‘‘பரிசோதனை முடிஞ்ச பிறகும் ஒவ்வொருத்தரோட எச்சிலையும் பாதுகாத்து வைக்கற ‘பயோ பேங்கிங்’ வசதியும் இருக்கு.
அதே நேரம் ஒருத்தருடைய பிரச்னை இன்னொருத்தருக்குத் தெரியாதபடி ரகசியமும் காக்கப்படும்’’ என்கிறார்.
