Medical benefits of banana flower
பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத்தோன்றும். ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க மாட்டோம்.
பூக்களின் மருத்துவக் குணங்களைக் கொண்டு பல நோய்களைக் குணப்படுத்தியுள்ளனர் சித்தர்கள். தற்போது மலர் மருத்துவமாகவே மேல் நாடுகளில் சிகிச்சை செய்து வருகின்றனர்.
பூக்களில் நாம் பலவற்றை அறந்திருப்போம். அவற்றில் வாழைப்பூவைப் பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது. வாழையை இந்தியாவில் வீட்டு மரமாக வளர்க்கின்றனர். வாழைமரத்தில் மொத்தம் 14 வகைகள் உள்ளன.
முன்னோர்கள் பொதுவாக வாழையை பெண் தெய்வமாகவே வணங்கி வந்தனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த வாழையின் அனைத்துப் பாகங்களுமே மருத்துவப் பயன் கொண்டவை.
வாழைப் பூவின் மருத்துவக் குணங்கள்
இரத்தத்தைச் சுத்தப்படுத்த:
வாழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து உண்டு வந்தால் இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும். இதனால் இரத்தத்தின் பசைத்தன்மை குறைந்து, இரத்தம் வேகமாகச் செல்லும்.
மேலும் இரத்த நாளங்களில் ஒட்டியுள்ள கொழுப்புகளைக் கரைத்து இரத்தத்தை சுத்தப்படுத்தும். இதனால் இரத்தமானது அதிகமான ஆக்ஸிஜனை உட் இரப்பதுடன், தேவையான இரும்பு சத்தையும் உட்கிரகிப்பதுடன். இரத்த அழுத்தம், இரத்த சோகை போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.
சர்க்கரை நோயாளிகளுக்கு:
இரத்தத்தில் கலந்துள்ள அதிகளவு சர்க்கரைப் பொருளைக் கரைத்து வெளியேற்ற வாழைப்பூவின் துவர்ப்புத்தன்மை அதிகம் உதவுகிறது. இதனால் இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவு குறைகிறது.
வயிற்றுப்புண் நீங்க:
இன்றைய உணவுமுறை மாறுபாட்டாலும், மன உளைச்சலாலும் வயிற்றில் செரியாமை உண்டாகி அதனால் அபான வாயு சீற்றம் கொண்டு வயிற்றில் புண்களை ஏற்படுத்துகிறது. இந்த புண்களை ஆற்ற வாழைப் பூவை வாரம் இருமுறை உணவில் சேர்த்து வந்தால் வயிற்றுப் புண்கள் ஆறும். செரிமானத்தன்மை அதிகரிக்கும்.
மூலநோயாளிகளுக்கு:
மூலநோயின் பாதிப்பினால் மலத்துடன் இரத்தம் வெளியேறுதல், உள்மூலம், வெளிமூலப் புண்கள் இவற்றுக்கு சிறந்த மருந்தாக வாழைப் பூவைப் பயன்படுத்தலாம். வாழைப்பூ மூலக்கடுப்பு, இரத்த மூலம் போன்றவற்றைக் குணப்படுத்தும்.
மலச்சிக்கலைப் போக்கும் . சீதபேதியையும் கட்டுப்படுத்தும். வாய்ப் புண்ணைப் போக்கி வாய் நாற்றத்தையும் நீக்கும்.
பெண்களுக்கு:
பெண்களுக்கு உண்டாகும் கருப்பைக் கோளாறுகள். மாதவிலக்கு காலங்களில் அதிக இரத்தப்போக்கு, அல்லது இரத்த போக்கின்மை, வெள்ளைப்படுதல் போன்ற நோய்களுக்கு வாழைப்பூவை உணவில் சேர்த்துக்கொண்டு வந்தால் நோய்கள் நீங்கும்.
இத்தகைய சிறப்பு மிகுந்த வாழைப்பூவை நாமும் சமைத்து உண்டு நோயில்லா பெருவாழ்வு வாழ்வோம்
