It is not enough to go to the gym to reduce body weight

அதிக எடையுள்ள மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதற்குக் காரணம் வாழ்க்கை முறையும் உணவுப்பழக்கமும் தான்.

பருமனானவர்கள் அதிகம் உள்ள நாடுகளின் வரிசையில் இந்தியா மூன்றாமிடத்தில் உள்ளது. உடல்பருமன் மற்ற நோய்களுக்கு ஒரு திறவுகோலாக அமைகிறது. 

மக்களும் தங்களுடைய அதிகமான உடல் எடை்யைக் குறைப்பதற்கு தொடர்ந்து முயற்சி செய்கிறார்கள். ஆனால், எவ்வளவு முயற்சி செய்தாலும் பெரும்பாலான பெண்களுக்கு எடை குறையவேயில்லை என்ற பெரும் கவலை உண்டு.

அதற்கு உங்கள் அணுகு முறையில்கூட பிரச்சனை இருக்கலாம். சின்ன சின்ன மாற்றங்களை செய்து பாருங்கள் உடல்பருமனில் நல்ல மாற்றம் கிடைக்கும். 

** தினசரி ஜிம்முக்கு சென்று சற்று கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். 

** அதே சமயம் உங்கள் உணவிலும் கவனம் தேவை. ஜிம்முக்கு போய் உடற்பயிற்சி செய்கிறோம் என்பதற்காக இஷ்டம்போல எதை வேண்டுமானாலும் சாப்பிடக்கூடாது.

** உடற்பயிற்சியும் செய்துகொண்டு துரித உணவுகளையும் சாப்பிட்டால் உங்கள் முயற்சி வீணாகும். எடை குறையாது. 

** உடற்பயிற்சி மூலம் உடலில் சேரும் கலோரி அளவைக் குறைக்கலாம். ஆனால் துரித உணவால் அதிகரித்த கலோரிகளைக் குறைக்க கொஞ்சம் தாமதமாகும்.

** தினசரி வேலைகளைத் தொடங்கும்முன் தக்காளி அல்லது கேரட் ஜூஸ் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த ஜுஸ் உங்கள் உடலுக்குத் தேவையான பீட்டாகரோட்டீன், ஆன்டி- ஆக்ஸிடென்ட், எலக்ட்ரோலைட்ஸ், பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் கால்சியம் ஆகியவற்றைத் தருகிறது.

** மேலும், உங்கள் தினசரி உணவில் ஓட்ஸ், சப்பாத்தி, பழங்கள், அதிக அளவு காய்கறிகளை எடுத்துக்கொள்ளுங்கள். இது உங்கள் வயிற்றை நிரப்புவதோடு, உடலில் கொழுப்பு சேராமல் பார்த்துக்கொள்ளும்.

** முடிந்தவரை உங்கள் மாலை உணவை சீக்கிரமாக சாப்பிடுங்கள். மாலை நேர உணவை தாமதமாக உட்கொள்ளும்போது அவை ஜீரணமாக அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். இரவில், எளிதாக ஜீரணமாகும் உணவுகளையே சாப்பிட வேண்டும்.

** எடையைக் குறைப்பதற்காக நீங்கள் உணவைத் தவிர்த்துவந்தால், உங்கள் உடலில் உள்ள நீர்ச்சத்து குறைந்து மெலிந்து விடுவீர்கள். அதனால் எடை குறையாது. நீர்ச்சத்து அவசியம் தேவை. எனவே தேவையான அளவு உணவை சாப்பிடுங்கள்.

** நீங்கள் சாப்பிடும் உணவு விகிதாசாரத்தை 80:20 என வகுத்துக் கொள்ளுங்கள். 80 சதவீதம் ஊட்டச்சத்துள்ள உணவுகளையும் 20 சதவீதம் உங்களுக்குப் பிடித்த உணவுகளையும் என எடுத்துக் கொள்ளுங்கள்.