மூளை சிறப்பாக செயல்பட ஒருசில உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். 

அத்தகைய உணவுகள் இதோ...

சர்க்கரை, மாவு, சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள் மற்றும் உணவு பதார்த்தங்களை கூடுமானவரை தவிர்க்க வேண்டும். அவை எளிதில் ஜீரணமாகும். அதேவேளையில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவையும், இன்சுலின் அளவையும் அதிகப்படுத்திவிடும். மூளையின் செயல்பாட்டுக்கும் இடையூறு ஏற்படுத்தும். 

சுத்திகரிக்கப்பட்ட தானியங்களுக்கு மாற்றாக முழு தானியங்கள், பருப்பு வகைகள், காய்கறிகள், பழ வகைகளை சாப்பிட வேண்டும்.

மது அருந்துவது மூளையின் இயக்கத்திற்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். தொடர்ந்து மது அருந்துவது நரம்புக் கடத்திகளின் செயல்பாட்டை சீர்குலைக்கும். அதிலிருக்கும் ரசாயனங்கள் மூளையின் தகவல் தொடர்புக்கு இடையூறு ஏற்படுத்தும். மூளை சார்ந்த நோய் பாதிப்புகளுக்கும் வித்திடும்.

சர்க்கரை கலந்த பழச்சாறுகள், குளிர்பானங்கள் மூளைக்கு தீங்கு விளைவிக்கக்கூடியவை. அவை எடை அதிகரிப்புக்கு வழிவகுப்பதோடு அல்சைமர் நோய், மறதி போன்ற ஆரோக்கிய குறைபாடுகளையும் தோற்றுவிக்கும்.

சர்க்கரை கலந்த பானங்களில் பிரக்டோஸ் அதிகமாக கலந்திருக்கும். அதன் தாக்கமாக உயர் ரத்த அழுத்தம் ஏற்படக்கூடும். அதிகமாக சர்க்கரை பானங்களை அருந்துவது நீரிழிவையும் ஏற்படுத்தும். சர்க்கரை பானங்களுக்கு மாற்றாக ஐஸ் டீ, காய்கறிகள், பழங்கள், இனிப்பு சேர்க்காத பால் பொருட்களை சாப்பிட்டு வரலாம்.

பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். அவைகளில் உப்பு, சர்க்கரை, கொழுப்பு ஆகியவை அதிகம் கலந்திருக்கும். நூடுல்ஸ், நொறுக்கு தீனிகள், துரித உணவுகள், சாஸ் வகைகள் போன்றவைகளும் மூளையின் செயல்பாட்டுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடியவை. இவைகளில் கலோரிகள் அதிகம் கலந்திருக்கும். ஆனால் ஊட்டச்சத்துக்கள் குறைவாகவே இருக்கும். 

இந்த உணவுகள் உடல் எடையை அதிகப்படுத்தும். மூளையின் செயல்பாட்டையும் மந்தப்படுத்தும். இந்த உணவுகளுக்கு மாற்றாக மீன்கள், பருப்பு வகைகள், முழு தானியங்களை சாப்பிடலாம். 

பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகள், பிஸ்கெட்டுகள், கேக்குகள் போன்றவை உடல் ஆரோக்கியத்திற்கும், மூளைக்கும் தீங்கு விளைவிப்பவை. அவற்றுள் அபரிமிதமான கொழுப்பு கலந்திருக்கும். இதயத்திற்கும் கேடு தரும்.