அஜீரணம் என்பது அனைத்து வயதினருக்கும் வரும் ஓர் வயிற்றுத் தொல்லை.நாம் உண்ணும் உணவு சரியாக செரிமானம் ஆகாமல் போகும் போது அஜீரணம் உண்டாகும். நாம் உண்ணும் உணவை செரிக்க செரிமான நீர் சுரப்பதில் பிரச்சனை ஏற்பட்டாலும் இந்த வயிற்று கோளறு ஏற்படும். பொதுவாகவே வயது ஏற ஏற செரிமான நீர் சுரப்பது குறைந்து கொண்டே வரும். சில சமயங்களில் உண்ணும் உணவை சரியாக வாயில் அரைத்து மென்று சாப்பிடாவிட்டாலும் அஜீரணம் வரும். செரிமான நீரின் வேலையை குறைக்க உண்ணும் போதே உணவை நன்றாக அரைத்து சாப்பிட வேண்டும்.

அதிகமான காரம், அதிகமான புளிப்பு மற்றும் எண்ணெயில் வறுத்த உணவுகளை உண்ணும் போது இயல்பாக சுரக்கும் செரிமான நீர் சுரப்பதில் பிரச்சனை ஏற்படுவதால் அஜீரணம் வர வாய்ப்புண்டு. இந்த வகையான உணவுகளை உண்ணும் போது உடலுக்குள் உணவு செல்லும் பாதையில் உள்ள உறுப்புகள் எரிச்சலுக்கு ஆளாகும். அப்போது உணவு பாதை உறுப்புகளால் செரிமான நீரை சரிவர சுரக்க இயலாது.

வீட்டு சாப்பாடு சாப்பிடுபவர்களுக்கு அஜீரண பிரச்சனை அவ்வளவாக வராது. அதிக உணவு உண்ணும் போதோ கடைகளில் உணவு வாங்கி உண்ணும் போதோ அஜீரணம் ஏற்படும். பொதுவாக சுற்றுலா தளங்கள் சென்றாலே அஜீரண பிரச்சனை கண்டிப்பாக வரும். அங்கே கண்ட கண்ட உணவுகளை உண்பதால் அனைத்து வயதினருக்கும் அஜீரணம் ஆக வாய்ப்புண்டு.

கீழே பலவகையான அஜீரண மருந்துகள் கொடுக்கப்பட்டுள்ளன, உங்கள் வீட்டில் உள்ள பொருட்களுக்கு ஏற்றவாறான மருந்தை எடுத்து கொள்ளுங்கள்.

அஜீரணம் குணமாக கருவேப்பிலை, இஞ்சி, சீரகம் மருந்து

சுற்றுலா மற்றும் விழாகால சமயங்களில் வீட்டில் இருக்க கூடிய கருவேப்பிலை, இஞ்சி, சீரகம் கையில் வைத்துக் கொள்வது சாலசிறந்த முன்எச்சரிக்கை நடவடிக்கை ஆகும்.

மிக எளிய மருத்துவமாக ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம் மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.

சுற்றுலா செல்லும் போது எளிதில் எடுத்து செல்ல கூடிய இந்த வீட்டு பொருட்களை மறக்காமல் எடுத்து செல்லுங்கள்.

அஜீரணம் குணமாக ஓமம், கருப்பட்டி மருந்து

அஜீரணம் குணமாக ஓமம் மற்றும் கருப்பட்டி கலந்து நம் வீட்டிலேயே கஷாயம் செய்து குடிக்கலாம்.

ஓர் சிறிய பாத்திரத்தில் நீர் ஊற்றி சுட வைக்க வேண்டும். அதில் கருப்பட்டி போட்டு கருப்பட்டி கரையும் வரை கலக்க வேண்டும். கருப்பட்டி கரைந்ததும் பாத்திரத்தை அடுப்பில் இருந்து இறக்கி விடலாம். அதில் ஓமம் கலந்து குடித்தால் வயிற்று கோளாறு மட்டுப்படும். குடிக்க இதமாகவும் இருக்கும்.

அஜீரணம் குணமாக கருப்பட்டி, சுக்கு, மிளகு மருந்து

கருப்பட்டியுடன் சிறிது சுக்கு சேர்த்து அவற்றுடன் 4 மிளகும் சேர்த்து நன்கு பொடியாக அரைத்து வைத்து கொள்ள வேண்டும். இந்த மருந்தை தயார் செய்து காற்று போகாத ஒரு டப்பாவில் போட்டு வைத்து கொள்ளலாம். அஜீரணம் ஏற்படும் சமயங்களில் இரண்டு வேளை சாப்பிட்டால் அஜீரணம் குணமாகி நல்ல பசி ஏற்படும்.

அஜீரணம் குணமாக சீரகம் மருந்து

அஜீரணத்திற்க்கு வெறும் சீரகத்தை மட்டும் நீரிலிட்டு நன்கு கொதிக்க வைத்து, அந்த சீரக நீரை குடித்து வர நன்கு ஜீரணம் ஆவதோடு, உடலும் குளிர்ச்சியடையும். உடல் உஷ்ணத்தினால் அஜீரணம் ஏற்பட்டிருந்தால் உடனே சரியாகிவிடும்.

அஜீரணம் குணமாக கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் மருந்து

அஜீரணத்திற்காக நாம் உண்ணும் உணவில் ஒரு பாகமாக சேர்த்து கொள்ள கூடிய மருந்து இது. அஜீரணம் குணமாக கறிவேப்பிலை, சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் போல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும். அஜீரணம் ஏற்படும் சமயங்களில் சாப்பிட தோணாது. எளிதில் ஜீரணம் ஆக கூடிய இட்லியுடன் இந்த துவையல் சேர்த்து சாப்பிடலாம்.