Asianet News TamilAsianet News Tamil

இதோ சில இயற்கை ஃபேஷியல் உத்திகள்; பயன்படுத்தி ஜொலிங்க…

Here are some natural fashions Shine using ...
Here are some natural fashions Shine using ...
Author
First Published Jul 31, 2017, 1:01 PM IST


பப்பாளி ஃபேஷியல்

செலவில்லா ஃபேஷியலைப் பப்பாளி பழம் தரும். பப்பாளிப் பழக் கூழை பத்து முதல் பதினைந்து நிமிடங்கள்வரை முகத்தில் பூசி வைத்து, பிறகு இளஞ்சூடான வெந்நீரில் முகத்தைக் கழுவினால் போதும். பழத்தில் உள்ள பப்பாயின் தோலில் உள்ள இறந்த செல்களை நீக்கி, முகத்தைப் பளிச்சிட வைக்கும்.

வறண்ட சருமத்தைக் கொண்டவர்கள் பப்பாளித் தோலின் அடிப்பகுதியைத் தோலில் பூசிவர, சருமம் நீரோட்டம் பெற்றுப் பொலிவடையும்.

வெள்ளரி ஃபேஷியல்

வெள்ளரிக் காய்களை நறுக்கிக் கண்களில் வைத்துக் கட்டக் கண்கள் பிரகாசம் அடைவதோடு, கண் எரிச்சலும் மட்டுப்படும். கணினி முன்னால் அதிக நேரம் குடியிருக்கும் மென்பொருள் இளைஞர்கள் ‘கண்களின் மேல் வெள்ளரி’யை வைத்துக்கொள்வது சிறந்தது. அதேபோல, வெள்ளரிக்காயை அரைத்துப் பூசினால் தோலில் உள்ள இணைப்பு திசுக்கள் ஊட்டம் பெறுவதோடு, சூரிய வெப்பத்தால் உண்டாகும் எரிச்சலும் குறையும்.

கண்களின் கீழ் உள்ள கருவளையம் மறைய வெள்ளரிக்காய் வளையத்தை வைப்பதோடு, விளக்கெண்ணெயையும் தடவலாம். நல்ல தூக்கமும் தேவையான அளவு தண்ணீர் குடிப்பதும் கருவளையத்தைப் போக்குவதற்கான சிறந்த ஆயுதங்கள்.

கற்றாழை ஃபேஷியல்

முகத்தில் கற்றாழைக் கூழைத் தடவிவந்தால் பருக்கள் வராமல் தடுக்கலாம். கிருமிநாசினி செய்கையும் வீக்கமுறுக்கி செய்கையும் கொண்ட கற்றாழை, தோலில் உண்டாகும் சுருக்கங்களைத் தடுக்கிறது.

வணிகச் சந்தையில் உலாவரும் `ஆன்டி-ஏஜிங்’ கிரீம்களில் கற்றாழைக்கு இலவச அனுமதி உண்டு. முகச்சவரம் செய்து முடித்த பிறகு ரசாயனம் கலந்த செயற்கை கிரீம்களுக்குப் பதிலாக, `தேங்காய் எண்ணெய் – கற்றாழைக் கலவையை தடவுவதால் சவரம் செய்யும்போது உண்டான சிறு சிராய்ப்புகள் விரைவாகக் குணமடையும்;

முகமும் பிரகாசமடையும். எண்ணெய்ப் பசை சருமத்தைக் கொண்டவர்களுக்குக் கற்றாழை முகப்பூச்சு சிறந்த தேர்வு. இன்றும் கிராமத்துச் சிறுவர்களின் இயற்கை ஒப்பனைப் பொருள் குளுகுளு கற்றாழைதான்!

சந்தனம் ஃபேஷியல்

சந்தனச் சாந்தை நெற்றியில் தடவும் (‘தொய்யில் எழுதுதல்’) வழக்கம், சங்க கால மக்களிடம் இருந்துள்ளது என்னும் செய்தியைப் பரிபாடல் நமக்குத் தெரிவிக்கிறது. முகத்தை மெருகேற்ற நம் மரபோடு பயணித்த சந்தனத்தை மிஞ்ச, எந்த சிந்தடிக் கிரீம்களாலும் முடியாது. பாக்டீரியாவை அழிக்கும் தன்மையுடைய சந்தனத்தை நீருடன் கலந்து முகப்பருக்களில் தடவிவந்தால், விரைவில் குணம் கிடைக்கும். தோலுக்கு அடியில் உள்ள ரத்தத் தந்துகிகளில் செயல்புரிந்து தோலை மென்மையாக்குகிறது சந்தனம்.

தக்காளி ஃபேஷியல்

முகத்தில் உள்ள சுருக்கங்களைக் குறைக்கவும் தடுக்கவும் தக்காளி ஃபேஷியல் உதவுகிறது. இதிலுள்ள ஆன்டி-ஆக்சிடன்ட் தோலுக்கு ஊட்டம் தருகிறது. விளம்பரங்களில் வரும் ஆறு வாரச் சிவப்பழகைத் தர முடியாவிட்டாலும், வாரத்துக்கு இரண்டு முறை தக்காளியை மசித்துத் தயிரோடு சேர்த்துத் தடவிவந்தால், விரைவில் முகப்பருக்கள் நீங்கி முகத்தில் களிப்பு உண்டாகும்.

Follow Us:
Download App:
  • android
  • ios