சர்க்கரை வள்ளிக்கிழங்கை குளிர்காலத்தில் சாப்பிடலாமா?
சர்க்கரை வள்ளிக் கிழங்கு, பல சத்துக்கள் நிறைந்த ஒரு அருமருந்து. குடல் ஆரோக்கியம், கண் நோய், புற்றுநோய், இருதய நலம், நுரையீரல் பிரச்சனைகள் மற்றும் உடல் எடை கட்டுப்பாடு என பல நன்மைகளை அளிக்கிறது. சர்க்கரை நோயாளிகள் கூட இதனை சாப்பிடலாம்.
சர்க்கரை வள்ளிக் கிழங்கு உடலுக்கு எந்தளவிற்கு ஆரோக்கியமானது என்று பார்க்கலாம். சர்க்கரை வள்ளிக் கிழங்கு ஆரஞ்சு, மஞ்சள், சிவப்பு ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.
சர்க்கரை வள்ளிக் கிழங்கு பற்றிய புரிதல் தற்போது இருக்கும் தலைமுறையினருக்கு தெரிவதில்லை. அது ஒரு உணவா என்று கேள்வி கேட்கும் அளவிற்கு நிலைமை உள்ளது. ஆனால், சர்க்கரை வள்ளிக் கிழங்கு ஒரு அருமருந்து என்று கூறினால் தவறில்லை. அந்தளவிற்கு மாவுச்சத்து, கார்போஹைட்ரேட், வைட்டமின் சி, வைட்டமின் ஏ, புரதம், பொட்டாசியம், மக்னீசியம், இரும்புச் சத்து என கொட்டிக் கிடைக்கிறது.
சர்க்கரை வள்ளிக் கிழங்கு குடல் ஆரோக்கியம்:
இதில் கார்போஹைட்ரேட் 26 கிராம், புரோட்டீன் 2 கிராம், கொழுப்பு 0.07 கிராம், நார்சத்து 309 கிராம் உள்ளன. இதில் இருக்கும் நார்ச்சத்து குடல் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. செரிமானத்தை அதிகரிக்கிறது. மலச்சிக்கல் இருப்பவர்களுக்கு இது சிறந்த உணவாகும். மூட்டு வலி, வயிறு பிரச்சனை இருப்பவர்களுக்கும் இது நல்ல உணவாகும். அல்சர் மற்றும் அசிடிட்டி இருந்தால் இந்தக் கிழங்கை தொடர்ந்து சாப்பிட்டு வரும்போது இந்த தொந்திரவுகள் நீங்கும்.
கண் நோய், புற்றுநோய் குணமாக்கும்:
இதில் இருக்கும் வைட்டமின் ஏ கண் நோய்க்கு உதவுகிறது. இதில் இருக்கும் பீடா கரோட்டீன் கண்களில் குறைபாடு, கண்களில் வறட்சி ஆகியவற்றை குறைக்கிறது. வைட்டமின் ஏ நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது. இந்தக் கிழங்கில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியால் செல்கள் புத்துணர்ச்சி பெற்று இளமை தோற்றத்தைக் கொடுக்கும். இதில் இருக்கும் சத்துக்கள் புற்றுநோய் செல்களை அழிக்கும் வல்லமை கொண்டது. ஆதலால் தான் சர்க்கரை வள்ளிக் கிழங்கை பவர் ஹவுஸ் என்றே கூறுகின்றனர்.
சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை வள்ளிக் கிழங்கு சாப்பிடலாமா?
சர்க்கரை நோய் இருப்பவர்களும் சர்க்கரை வள்ளிக் கிழங்கு சாப்பிடலாம். இதில் இருக்கும் நார்ச்சத்து நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் என்று தெரிய வந்துள்ளது. உடலில் இருக்கும் குளுகோஸ் சத்தை மெதுவாக ரத்தத்தில் கலக்கச் செய்யும். இதனால், சாப்பிட்டவுன் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்காது. சர்க்கரை நோயாளிகளும் தைரியமாக சாப்பிடலாம்.
இருதயத்திற்கு நல்லது:
இதில் இருக்கும் மெக்னீசியம் படபடப்பு, மன உளைச்சல், டென்சனை குறைக்கும். இருதயத்திற்கு இதில் இருக்கும் மெக்னீசியம் மிகவும் நல்லது. உடலில் மெக்னீசியம் குறைவாக இருந்தால் படபடப்பு ஏற்படும். சர்க்கரை வள்ளிக் கிழங்கை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடலுக்கு தேவையான மெக்னீசியம் கிடைக்கும். இதில் இருக்கும் வைட்டமின் ஏ, பி, இரும்புச்சத்து ஆகியவை உடலுக்கு தேவையான ஹீமோகுளோபினை அதிகரிக்க செய்யும். மேலும் எழும்புகளுக்கு வலு சேர்க்கும். எலும்பு தொடர்பான பிரச்சனை இருப்பவர்கள் சர்க்கரை வள்ளிக் கிழங்கை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். வேகவைத்தும் சாப்பிடலாம். பொரியல் செய்தும் சாப்பிடலாம்.
சர்க்கரை வள்ளிக் கிழங்கில் கொழுப்பு இருக்கிறதா?
கொழுப்பு பிரச்சனை இருப்பவர்கள் இந்த உணவை சாப்பிடலாமா என்ற கேள்வி எழலாம். தாரளமாக சாப்பிடலாம். இதில் கொஞ்சம் கூட கொழுப்பு இல்லை. பெண்கள் கருத்தரிக்க போலேட் என்ற சத்து உடலுக்கு மிகவும் முக்கியம். குழந்தை பாக்கியம் கிடைக்காதவர்கள் மருத்துவரிடம் செல்லும்போது போலேட் சத்து நிறைந்த மாத்திரையை மருத்துவர்கள் பரிந்துரை செய்வார்கள். அப்படி குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் சத்தான உணவுகளுடன் சர்க்கரை வள்ளிக்கிழங்கையும் சாப்பிடலாம்.
நுரையீரலுக்கு நல்லது:
கொரோனா காலங்களில் கூட சர்க்கரை வள்ளிக்கிழங்கு சாப்பிடுமாறு பரிந்துரை செய்து வந்தார்கள். இதற்குக் காரணமே இந்தக் கிழங்கு நுரையீரலுக்கு நல்லது என்பதுதான். நுரையீரலில் பிரச்சனை இருப்பவர்கள் தொடர்ந்து சர்க்கரை வள்ளிக்கிழங்கை சாப்பிட்டு வந்தால் நுரையீரல் காற்றுப் பை பிரச்சனை சீராகி சுவாசித்தலை அதிகரிக்கிறது.
சர்க்கரை வள்ளிக் கிழங்கு குளிர்காலத்தில் சாப்பிடலாமா?
இந்தக் கிழங்கை குளிர்காலத்திலும் சாப்பிடலாமா என்ற கேள்வி எழலாம். தாராளமாக சாப்பிடலாம். இது குளிர்ச்சியை கொடுக்காது. இதில் வைட்டமின் சி இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தியை குளிர்காலத்தில் கொடுக்கும். உடம்புக்கும் சூட்டை கொடுக்கும்.
உடல் எடை கூடுமா?
குளிர்காலத்தில் உடற்பயிற்சி செய்வதற்கு சோம்பேறித்தனமாக இருக்கும். தொடர்ந்து பயிற்சி செய்துவிட்டு, உணவு கட்டுப்பாடு இல்லை என்றால், உடல் எடை கூடிவிடும். எனவே, குளிர்காலத்தில் சர்க்கரை வள்ளிக்கிழங்கை உணவில் எடுத்துக் கொண்டால் இதில் இருக்கும் நார்ச்சத்து உங்களுக்கு பசியை தூண்டாது. சாப்பிட வேண்டும் என்ற ஆர்வத்தை குறைத்து விடும். அதிகமாக சாப்பிடுவதும் கட்டுப்படுத்தப்படும். உடல் எடை கட்டுப்படுத்தப்படும்.
இரவில் சர்க்கரை வள்ளிக் கிழங்கு சாப்பிடலாமா?
இரவில் சர்க்கரை வள்ளிக்கிழங்கு சாப்பிடக் கூடாது. குறிப்பாக சர்க்கரை நோய் இருப்பவர்கள், உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் சாப்பிடக் கூடாது. மதியம் 12 மணியில் இருந்துபிற்பகல் 3 மணி வரை மட்டுமே சாப்பிட வேண்டும். வேகவைத்து, ஆவியில் வைத்து சாப்பிடலாம். சத்தும் வீணாகாமல் இருக்கும். குளிர்காலங்களில் சூப் செய்தும் சுவைக்கலாம்.