கடுகும், கறிவேப்பிலையும் சமையலில் சேர்க்கும் பொருள் மட்டுமல்ல அதற்கான தனித்துவமான மருத்துவ குணங்கள் உண்டு.

அவற்றுள் சில:

வயிற்றுப்போக்கு நீங்க:

கடுகு 200 கிராம்

கசகசா 100 கிராம்

அதிமதுரம் 100 கிராம்

செய்முறை:

கடுகை சுத்தமான நீரில் கழுவி நிழலில் உலர்த்தவும். கசகசாவை இளம் வறுவலாக வறுத்துக் கொள்ளவும். அதிமதுரத்தை ஒன்றிரண்டாக தட்டி ஒரு மண் சட்டியில் போட்டு 200 மில்லி லிட்டர் தயிரை ஊற்றி ஆறு மணி நேரம் ஊற வைத்து எடுக்கவும். நிழலில் நன்றாக உலர்த்தவும். நன்றாக உலர்ந்த கடுகு, மற்றும் அதிமதுரத்துடன் வறுத்த கசகசாவையும் சேர்த்து நன்றாக மாவாக இடித்து வடிகட்டி, பாட்டிலில் போட்டு வைக்கவும்.

பயன்கள்:

சீதபேதி, அஜீரண பேதி, வயிற்றுப் பொறுமல் நீங்க ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பொடியைக் கொடுத்தால் உடனே நிவாரணம் கிடைக்கும்.

கறுவேப்பிலை தைலம்

தலைச்சுற்று நீங்க:

கறிவேப்பிலை 200 கிராம்

பச்சை கொத்தமல்லி 50 கிராம்

சீரகம் 50 கிராம்

நல்லெண்ணை 600 கிராம்

பசுவின் பால் 200 மில்லி

செய்முறை:

கறிவேப்பிலையை காம்புகள் நீக்கி நன்றாக அரைத்துக் கொள்ளவும். பச்சைக் கொத்துமல்லியையும் மையாக அரைத்துக் கொள்ளவும். சீரகத்தை சுத்தம் செய்து மண் சட்டியில் போட்டு 200 மி.லி. பாலை ஊற்றி ஆறு மணி நேரம் மூடி வைத்திருந்து சீரகத்தை எடுத்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

ஒரு மண்பானையில் நல்லெண்ணையை ஊற்றி அடுப்பில் வைத்து சிறிது சூடேறியதும் அரைத்து வைத்துள்ள கறிவேப்பிலையை போடவும். ஐந்து நிமிடங்கள் மேலும் சூடேறியப் பிறகு பச்சை கொத்துமல்லியைப் போடவும். அதன் பின் ஐந்து நிமிடங்கள் கழித்து சீரகத்தையும் போட்டு, தைலப்பதம் வந்ததும் இறக்கி ஆறவிடவும். ஆறியதும் மெல்லிய துணியில் வடிகட்டிக் கொள்ளவும்.

எப்படி பயன்படுத்தனும்?

நான்கு நாட்களுக்கு ஒரு முறை நல்லெண்ணைக்கு பதிலாக கறிவேப்பிலைத் தைலத்தை தேய்த்து குளிக்கலாம். தைலத்தை தேய்த்து குளிக்கும் அன்று குளிர்ந்த உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்.

மயக்கம், தலைசுற்று, அசதி, வாய்வுத் தொல்லை

கொத்தமல்லி 200 கிராம்

சீரகம் 20 கிராம்

ஓமம் 20 கிராம்

மிளகு 20 கிராம்

சுக்கு 20 கிராம்

அதிமதுரம் 20 கிராம்

செய்முறை

கொத்தமல்லியை மண் சட்டியில் போட்டு இளம் வறுவலாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். சீரகத்தையும் இளம் வறுவலாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். ஓமத்தை சிறிது நெய்யிட்டு இளம் வறுவலாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். மிளகையும் சட்டியில் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும். சுக்கை தோல் நீக்கி குறிப்பிட்ட அளவு எடுத்துக் கொள்ளவும். அதிமதுரத்தை ஒன்றிரண்டாக இடித்து ஒரு மண் சட்டியில் போட்டு 100 மில்லி லிட்டர் பால் ஊற்றி மூன்று மணி நேரம் ஊற வைத்து எடுத்து நிழலில் உலர்த்தவும். பின்னர் எல்லாவற்றையும் ஒன்றாகப் போட்டு இடித்து நன்றாக வடிகட்டவும். வடிகட்டிய தூளை ஒரு மணி நேரம் வெய்யிலில் வைத்து எடுத்து பத்திரப் படுத்தலாம்.

எப்படி பயன்படுத்தணும்:

காலை உணவு முடிந்தவுடன், முப்பது நிமிடங்கள் கழித்து அரை ஸ்பூன் தூளுடன், ஒரு ஸ்பூன் பனைவெல்லமும் சேர்த்து உட்கொண்டு சிறிது வெந்நீர் அருந்த வேண்டும். குறைகள் நீங்கினாலும் தொடர்ந்து சாப்பிட்டு வரலாம். ஒரு தீங்கும் வராது.