USA Lifestyle: அமெரிக்காவுல வீதிக்கு வந்தா ஏன் ஆளையே காணோம்? அவங்க என்னதான் பண்ணுவாங்க?
USA Lifestyle: அமெரிக்கா பத்தி படங்களிலேயோ வீடியோக்களிலேயோ பார்க்கும்போது ஒரு விஷயம் ஆச்சரியமா இருக்கும். நம்ம ஊர்ல இருக்குற மாதிரி வீதிக்கு வந்தா ஆட்களையே பார்க்க முடியாது. இதுக்கு என்ன காரணம்னு தெரியுமா? வாங்க தெரிஞ்சிக்கலாம்.

வீடுகளுக்கு நடுவே அதிக இடைவெளி!
அமெரிக்காவுல மக்கள் தொகை அடர்த்தி ரொம்ப கம்மி. அதனால புறநகர் பகுதிகள்ல (Suburbs) வீடுகளை ரொம்ப தள்ளித் தள்ளி பெருசா கட்டுவாங்க. நம்ம ஊர்ல இருக்குற மாதிரி தெரு முனையில பெட்டிக்கடை, டீக்கடை, காய்கறி வண்டின்னு அங்க பார்க்க முடியாது. ஷாப்பிங் மால், சூப்பர் மார்க்கெட், ரெஸ்டாரண்ட் போகணும்னா கூட ரொம்ப தூரம் பயணிக்கணும். சின்ன தேவைக்குக் கூட மக்கள் காரைத்தான் பயன்படுத்துவாங்க. அதனாலதான் ரோட்டுல நடந்து போறவங்களை விட கார்கள் அதிகமா தெரியுது.
அன்றாட வாழ்க்கையில் கார் ரொம்ப முக்கியம்!
அமெரிக்க புறநகர் பகுதிகள்ல மக்களோட வாழ்க்கை முறையே காரை நம்பித்தான் இருக்கு. ஆபீஸ், ஸ்கூல், சூப்பர் மார்க்கெட்னு எங்க போகணும்னாலும் நடந்து போறதை விட கார்ல போறதுதான் அவங்களுக்கு ஈஸி. சில இடங்கள்ல பப்ளிக் டிரான்ஸ்போர்ட் இருந்தாலும், எல்லா இடங்களுக்கும் அது கிடைக்காது. அதனாலதான் வீடுகளுக்கு வெளிய ஆட்களைப் பார்க்க முடியலன்னாலும், ரோடுகள்ல, பார்க்கிங் ஏரியாக்கள்ல, ஷாப்பிங் சென்டர்கள்ல மக்கள் கூட்டமா இருப்பாங்க. மக்கள் வெளியவே வர்றதில்லைன்னு அர்த்தம் கிடையாது, அவங்க கார்ல பயணிக்கிறாங்கன்னு அர்த்தம்.
வேலை, ஸ்கூல்னு எப்பவும் பிஸி!
அமெரிக்காவுல பெரும்பாலான குடும்பங்கள்ல பெரியவங்க வேலைக்கும், குழந்தைங்க ஸ்கூலுக்கும் போயிடுவாங்க. வாரத்துல முக்காவாசி நாட்கள் காலையில இருந்து சாயந்திரம் வரைக்கும் அவங்க வேலைகள்ல பிஸியா இருப்பாங்க. நம்ம ஊர்ல சாயந்திரம் வீட்டு வாசல்ல உக்காந்து பக்கத்து வீட்டுக்காரங்ககிட்ட பேசுறது, குழந்தைங்க தெருவுல விளையாடுறதுன்னு ஒரு வாழ்க்கை முறை இருக்கும். ஆனா, அமெரிக்க புறநகர் பகுதிகள்ல இது வேற மாதிரி இருக்கும். அவங்க வீட்டுக்குள்ளேயே டிவி பார்க்குறது, ஆன்லைன்ல நேரம் செலவிடுறதுன்னு இருப்பாங்க. நண்பர்களைப் பார்க்கணும்னா கூட ரெஸ்டாரண்ட், காபி ஷாப்னு வெளியிலதான் மீட் பண்ணுவாங்க.
காலநிலையும் ஒரு முக்கிய காரணம்!
அமெரிக்கா முழுக்க ஒரே மாதிரி கிளைமேட் இருக்காது. சில இடங்கள்ல குளிர் காலத்துல வெப்பநிலை ரொம்ப குறைஞ்சிடும். பனி கொட்டுறப்ப வெளிய நடந்து போறது ரொம்ப கஷ்டம். அதே மாதிரி கோடை காலத்துல சில இடங்கள்ல வெயில் சுட்டெரிக்கும். இந்த மாதிரி நேரங்கள்ல வெளிய சுத்துறதை விட வீட்டுக்குள்ளேயே இருக்கத்தான் மக்கள் விரும்புவாங்க. வாக்கிங் போறவங்க கூட வீட்டுக்குள்ளேயே ட்ரெட்மில் யூஸ் பண்ணுவாங்க, இல்லைன்னா கார்ல ஜிம்முக்கு போயிட்டு வருவாங்க. அமெரிக்காவுல வாக்கிங் போற பழக்கமே இல்லைன்னு சொல்ல முடியாது, கிளைமேட்டுக்கு ஏத்த மாதிரி அவங்க பழக்கவழக்கங்கள் மாறும்.
நகரங்கள்ல நிலைமையே வேற!
அமெரிக்கா முழுக்க ஆட்களே இருக்க மாட்டாங்கன்னு நினைக்கிறது தப்பு. நியூயார்க் மாதிரி பெரிய சிட்டிகள்ல ரோட்டுல நடந்து போறவங்க, பப்ளிக் டிரான்ஸ்போர்ட் யூஸ் பண்றவங்கன்னு பெரிய கூட்டமே இருக்கும். டவுன்டவுன் ஏரியாக்கள், டூரிஸ்ட் ஸ்பாட்கள்ல மக்கள் நடமாட்டம் அதிகமா இருக்கும். ஆனா, சிட்டிக்கு வெளிய இருக்குற புறநகர் பகுதிகள்ல நிலைமை வேற. ஆன்லைன் ஷாப்பிங், ஃபுட் டெலிவரி, வொர்க் ஃப்ரம் ஹோம் மாதிரி விஷயங்களும் மக்கள் வெளிய வர்றதை குறைச்சிடுச்சு. அதனால, அமெரிக்காவுல ஒரு தெரு காலியா இருக்குறதைப் பார்த்துட்டு மக்கள் எப்பவும் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்காங்கன்னு நினைக்கக் கூடாது. அவங்க வாழ்க்கை முறை நம்மளை விட கொஞ்சம் வித்தியாசமா இருக்கு, அவ்வளவுதான்

