மீண்டும் ஆப்பு வைத்த டிரம்ப்! அமெரிக்காவில் இந்தியர்களின் வேலைக்கு ஆபத்து!
டிரம்ப் நிர்வாகம் H-1B விசா கட்டணத்தை கடுமையாக உயர்த்தியுள்ளதுடன், வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணங்களின் (EAD) தானியங்கி நீட்டிப்பு முறையையும் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளனர்.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஆப்பு வைத்த டிரம்ப்
அமெரிக்காவில் வெளிநாட்டினர் வேலை செய்வதற்கு வழங்கப்படும் H-1B விசா கட்டணத்தை டிரம்ப் நிர்வாகம் கடுமையாக உயர்த்தியுள்ள நிலையில், தற்போது வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணங்களை (Employment Authorization Documents - EAD) தானாகவே நீட்டித்துக்கொள்ளும் நடைமுறையை அமெரிக்கா முடிவுக்குக் கொண்டு வந்துள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த முடிவு அங்கு பணிபுரியும் ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கும் அவர்களைப் பணியமர்த்தும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது.
H-1B விசா கட்டணம் உயர்வு
அமெரிக்காவில் புதிதாக வேலைக்குச் செல்லும் வெளிநாட்டினர் இனிமேல் H-1B விசா பெற ஆண்டுதோறும் $1,00,000 (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 88 லட்சம்) செலுத்த வேண்டும் என டிரம்ப் அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தக் கட்டண உயர்வு புதிய விசா விண்ணப்பங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், விசா புதுப்பித்தல் அல்லது ஏற்கெனவே விசா வைத்திருப்பவர்களுக்குப் பொருந்தாது என்றும் அமெரிக்கா தெளிவுபடுத்தியுள்ளது.
இந்த அதிகப்படியான கட்டண உயர்வு, அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்களை நியமிப்பதற்குப் பதிலாக, அமெரிக்கப் பணியாளர்களை அதிக அளவில் வேலைக்கு அமர்த்த ஊக்குவிக்கும் என டிரம்ப் நிர்வாகம் நம்புகிறது.
ஒவ்வொரு ஆண்டும் அனுமதிக்கப்பட்ட H-1B விண்ணப்பங்களில் 70 சதவீதத்துக்கும் அதிகமானவை இந்தியர்களுக்கே கிடைத்து வந்த நிலையில், இந்தக் கட்டண உயர்வு இந்தியப் பணியாளர்கள் மற்றும் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுக்குப் பெரிய நிதிச் சுமையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேலை அங்கீகாரத்தில் தானியங்கி முறை நீக்கம்
அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டினருக்கு மற்றொரு முக்கிய அறிவிப்பையும் அமெரிக்க அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
இதுவரை, வெளிநாட்டுப் பணியாளர்கள் தங்கள் வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணங்கள் (EAD) புதுப்பித்தல் ஒப்புதலுக்காகக் காத்திருக்கும் காலத்தில், 540 நாட்கள் வரை தங்கள் வேலையைத் தொடர்ந்து செய்யலாம் என்ற ஒரு தானியங்கி நீட்டிப்பு முறை நடைமுறையில் இருந்தது.
இன்று முதல் (அக்டோபர் 30) இந்த தானியங்கி நீட்டிப்பு முறை முடிவுக்கு வருகிறது. புதிய விதியின் கீழ், தற்போதைய EAD ஆவணங்கள் காலாவதியாகும் முன் புதுப்பித்தல் பெறாத எவரும் உடனடியாக வேலை செய்வதை நிறுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயம்
இந்த வேலை அங்கீகார ஆவணத்தைப் புதுப்பிக்கும் நடவடிக்கைக்கு 3 முதல் 12 மாதங்கள் வரை ஆகலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இதனால், சரியான நேரத்தில் புதுப்பிக்காத ஆயிரக்கணக்கான வெளிநாட்டுப் பணியாளர்கள், குறிப்பாகப் பெரும்பாலான இந்தியர்கள், உடனடியாக வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
EAD ஆவணங்கள் காலாவதி ஆவதற்கு 180 நாட்களுக்கு முன்பு புதுப்பித்தல் விண்ணப்பத்தை முறையாகத் தாக்கல் செய்வதன் மூலம், வெளிநாட்டினர் தங்கள் ஆவணங்களைச் சரியான நேரத்தில் புதுப்பித்துக் கொள்ள இயலும் என்றும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க அரசின் இந்த திடீர் முடிவுகள், அங்குப் பணிபுரியும் இந்தியத் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் கவலையையும், தங்கள் எதிர்காலம் குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.