டிரம்ப் நோபல் பரிசு 'கனவு' சுக்குநூறானது.. பேரதிர்ச்சி கொடுத்த நோபல் கமிட்டி.. வட போச்சே!
தனக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என சிறு குழந்தையை போல் தொடர்ந்து அடம்பிடித்து வந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு நோபல் கமிட்டி அதிர்ச்சி கொடுத்துள்ளது. இது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

டொனால்ட் டிரம்பின் நோபல் பரிசு கனவு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என அடம்பிடித்து வருகிறார். இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல், ஹமாஸ் உள்ளிட்ட 8 போர்களை தான் நிறுத்தியதாகவும் தனக்கு கண்டிப்பாக நோபல் பரிசு வழங்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
இவ்வாறு டிரம்ப் நோபல் பரிசுக்காக அடம்பிடித்து வரும் நிலையில், அவருக்கு ஷாக் கொடுக்கும் விதமாக 2025ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொலினா மச்சாடோவுக்கு வழங்கப்பட்டது.
மரியா கொலினா மச்சாடோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு
வெனிசுலாவில் ஜனநாயகத்திற்காக அயராத போராட்டங்களை முன்னெடுத்ததற்காக டிரம்பை முந்தி மரியா கொலினா மச்சாடோ நோபல் பரிசை தட்டிச்சென்றார். இதனால் ஏமாற்றம் அடைந்த டிரம்ப், 8 போர்களை நிறுத்திய எனக்கு நோபல் பரிசு இல்லையா? என புலம்பி வந்தார்.
இதற்கிடையே வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொலினா மச்சாடோ தான் பெற்ற நோபல் பரிசை தனக்கு வழங்க முன்வந்தால் அதை ஏற்றுக்கொள்வேன் என டிரம்ப் கூறியிருந்தார்.
மரியாவிடம் இருந்து நோபலை வாங்க விரும்பிய டிரம்ப்
மரியா கொலினா மச்சாடோ இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக ஏதும் கருத்து தெரிவிக்காத நிலையில், டிரம்ப் இப்படி கூறியது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 'நோபல் கமிட்டி தான் நோபல் பரிசு கொடுக்க மறுக்கிறது. மரியா கொலினா மச்சாடோவிடம் இருந்தாவது வாங்கிக் கொள்வேம். நோபல் எப்படி வந்தால் என்ன?' என சந்தோஷ கனவில் டிரம்ப் மிதந்து வந்தார்.
டிரம்புக்கு நோபல் கமிட்டி பேரதிர்ச்சி
இந்த நிலையில், டிரம்பின் கனவை சுக்குநூறாக உடைத்த நோபல் பரிசு கமிட்டி, நோபல் பரிசை ஒருவர் பெற்றால் அதை மற்றவரிடம் பகிர்ந்து கொள்ள முடியாது என்று அதிரடியாக தெரிவித்துள்ளது. 'நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட பிறகு, அதைத் திரும்பப் பெறவோ, மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவோ அல்லது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு மாற்றிக் கொள்ளவோ முடியாது.
இந்த முடிவு இறுதியானது. எப்போதும் மாறாதது” என்று நார்வே நோபல் கமிட்டி மற்றும் நோபல் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது. இதனால் 'வட போச்சே' என்ற விரக்தியின் உச்சத்துக்கு டிரம்ப் சென்று விட்டார்.

