அமெரிக்க ராணுவ நடவடிக்கையால் வெனிசுலா அதிபர் மதுரோ சிறைபிடிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவி மரியா கொரினா மச்சாடோ தனது நோபல் பரிசை டிரம்பிற்கு அர்ப்பணித்தாலும், டிரம்ப் அவரை வெனிசுலாவின் அடுத்த தலைவராக ஏற்கத் தயங்குகிறார்.

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்காவின் அதிரடி ராணுவ நடவடிக்கையால் சிறைபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவியும் நோபல் பரிசு வென்றவருமான மரியா கொரினா மச்சாடோ (Maria Corina Machado) தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார்.

நோபல் பரிசை டிரம்பிற்கு அர்ப்பணித்த மச்சாடோ

கடந்த 2025 அக்டோபரில் அமைதிக்கான நோபல் பரிசை வென்ற மச்சாடோ, தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 'பாக்ஸ் நியூஸ்' (Fox News) ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:

"எனக்குக் கிடைத்த இந்த நோபல் பரிசை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஜனவரி 3-ஆம் தேதி (மதுரோ பிடிபட்ட நாள்) வரலாற்றில் நீதிக்காகக் கொடுங்கோன்மை வீழ்ந்த நாளாகக் குறிக்கப்படும். இது வெனிசுலா மக்களுக்கு மட்டுமன்றி, ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கே கிடைத்த மிகப்பெரிய வெற்றி."

மேலும், மதுரோ சிறைபிடிக்கப்பட்டபோது, "சுதந்திரத்தின் மணி ஒலித்துவிட்டது" என அவர் எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டிருந்தார்.

மச்சாடோவை புறக்கணிக்கும் டிரம்ப்?

மச்சாடோ ட்ரம்பிற்குப் புகழாரம் சூட்டி வந்தாலும், அதிபர் டிரம்ப் அவரை வெனிசுலாவின் அடுத்த தலைவராக ஏற்கத் தயங்குவதாகத் தெரிகிறது. மச்சாடோ குறித்து டிரம்ப் பேசுகையில்:

"அவர் ஒரு நல்ல பெண்மணி, ஆனால் அவருக்கு வெனிசுலா நாட்டிற்குள் போதுமான ஆதரவோ அல்லது மரியாதையோ இல்லை," என அதிரடியாகக் கூறியுள்ளார்.

தற்போது மதுரோவின் உதவியாளராக இருந்த டெல்சி ரோட்ரிக்ஸ் (Delcy Rodriguez) இடைக்கால அதிபராகப் பதவியேற்றுள்ளார். இவருக்கு அமெரிக்கா நிபந்தனையுடன் கூடிய ஆதரவை வழங்கியுள்ளது.

பின்னணி என்ன?

வெனிசுலாவில் பல ஆண்டுகளாக நீடித்த மதுரோவின் ஆட்சியை ஒழிக்க டிரம்ப் கொடுத்த ராணுவ அழுத்தம் மற்றும் பொருளாதாரத் தடைகளை மச்சாடோ ஆதரித்து வந்தார். கடந்த ஆண்டு நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நாளன்று (அக்டோபர் 10) மச்சாடோ டிரம்புடன் தொலைபேசியில் பேசியுள்ளார்.

ஆனால், மச்சாடோ நோபல் பரிசை ஏற்றது டிரம்பிற்குப் பிடிக்கவில்லை என்றும், அவர் அந்தப் பரிசை மறுத்து டிரம்பிற்கு விட்டுக் கொடுத்திருந்தால் இன்று அவரே வெனிசுலாவின் அதிபராகி இருப்பார் என்றும் வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.