Wi-Fi க்கு தடை! ஆப்கானிஸ்தானில் தலைவரித்து ஆடும் தாலிபன் அராஜகம்!
ஆப்கானிஸ்தானின் பல்க் மாகாணத்தில் ஃபைபர் ஆப்டிக் இணையதள சேவையை தாலிபன் அரசு தடை செய்துள்ளது. ஒழுக்கக்கேட்டைத் தடுப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என தாலிபன் அரசு கூறுகிறது.

ஆப்கானிஸ்தான் தாலிபன் அரசு
ஆப்கானிஸ்தானில் உள்ள பல்க் மாகாணத்தில் ஃபைபர் ஆப்டிக் இணையதள சேவையைத் தாலிபன் தலைவர் தடை விதித்துள்ளார். ஒழுக்கக்கேட்டைத் தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிர்வாகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் Wi-Fi தடை
ஆகஸ்ட் 2021-இல் தாலிபன்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, இத்தகைய தடை விதிக்கப்படுவது இதுவே முதல் முறை. இந்தத் தடையால், அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், பொது நிறுவனங்கள், மற்றும் பல்க் மாகாணத்தில் உள்ள வீடுகள் அனைத்திலும் வைஃபை இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. எனினும், மொபைல் இணைய சேவை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
மாகாண அரசு செய்தித் தொடர்பாளர் ஹாஜி அட்டாவுல்லா ஜைத், தாலிபன் தலைவர் ஹிபத்துல்லா அகுந்த்ஸாதாவின் உத்தரவின் பேரில், பல்க் மாகாணத்தில் கேபிள் இணைய சேவைக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
வைஃபை பயன்பாட்டால் ஒழுக்கக்கேடு?
"இந்த நடவடிக்கை ஒழுக்கக்கேட்டைத் தடுப்பதற்காக எடுக்கப்பட்டது. அத்தியாவசியத் தேவைகளுக்காக நாட்டிற்குள் ஒரு மாற்று ஏற்பாடு உருவாக்கப்படும்," என்று ஜைத் அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். எனினும், ஏன் பல்க் மாகாணம் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டது அல்லது இந்தத் தடை மற்ற மாகாணங்களுக்குப் பரவுமா என்பது குறித்து அவர் எந்தத் தகவலையும் அளிக்கவில்லை.
தாக்குதல்களைத் தடுப்பதற்காக?
பாதுகாப்பு காரணங்களுக்காக, குறிப்பாக மதப் பண்டிகைகளின் போது, வெடிகுண்டு தாக்குதல்களைத் தடுப்பதற்காக ஆப்கானிய அதிகாரிகள் சில சமயங்களில் மொபைல் போன் நெட்வொர்க்கை இடைநிறுத்தம் செய்வது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.