மனதை உலுக்கும் உறங்கும் இளவரசரின் மரணம்! சோகத்தில் மூழ்கிய சவுதி!
சவுதி அரேபியாவின் 'உறங்கும் இளவரசர்' என அறியப்பட்ட இளவரசர் அல் வலீத் பின் காலித் பின் தலால் அல் சவுத், 2005ஆம் ஆண்டு லண்டனில் ஏற்பட்ட கார் விபத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் கோமா நிலையில் இருந்த நிலையில், தனது 36 வயதில் காலமானார்.

மீளாத் துயலில் உறங்கும் இளவரசர்
சவுதி அரேபியாவின் 'உறங்கும் இளவரசர்' என அறியப்பட்ட இளவரசர் அல் வலீத் பின் காலித் பின் தலால் அல் சவுத், தனது 36 வயதில் இன்று காலமானார். 2005ஆம் ஆண்டு லண்டனில் ஏற்பட்ட கார் விபத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் கோமா நிலையில் இருந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்தார்.
கோமாவில் தள்ளிய சாலை விபத்து
1990ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிறந்த இளவரசர் அல் வலீத், சவுதி அரச குடும்பத்தின் முக்கிய உறுப்பினரும், கோடீஸ்வரர் இளவரசர் அல் வலீத் பின் தலாலின் மருமகனுமான இளவரசர் காலித் பின் தலால் அல் சவுத்தின் மூத்த மகன் ஆவார்.
ராணுவக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது, தனது 15 வயதில் ஏற்பட்ட கோரமான சாலை விபத்தில் சிக்கினார். அவருக்கு கடுமையான மூளை காயங்களும், உள் இரத்தப்போக்கும் ஏற்பட்டன. அமெரிக்கா, ஸ்பெயின் நாடுகளின் சிறப்பு மருத்துவர்களின் சிகிச்சை அளித்தபோதும் அவர் முழுமையாக சுயநினைவுக்குத் திரும்பப் பெறவில்லை.
அசைவுகள் அளித்த நம்பிக்கை
விபத்திற்குப் பிறகு, அவர் ரியாத்தில் உள்ள கிங் அப்துல்அஜிஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக தொடர்ச்சியான மருத்துவ கவனிப்புடன் இருந்தார். அவரது தந்தை, இளவரசர் காலித் பின் தலால், நம்பிக்கையை விடாமல், மகனுக்கு உயிர் காங்கும் ஆதரவை நிறுத்துவதற்கான அனைத்து பரிந்துரைகளையும் பகிரங்கமாக எதிர்த்தார்.
அல் வலீத் பல ஆண்டுகளாக, 'உறங்கும் இளவரசர்' என்று அறியப்பட்டார். அவரது விரல்களில் ஏற்படும் லேசான அசைவுகளைக் காட்டும் அரிய வீடியோக்கள் ஆன்லைனில் வெளியாகி, அவரது குடும்பத்திற்கும் ஆதரவாளர்களுக்கும் நம்பிக்கையை அளித்தன.
இளவரசர் காலித் அறிவிப்பு
இளவரசரின் மரணத்தை உறுதிப்படுத்திய இளவரசர் காலித், ஒரு அறிக்கையில், "அல்லாஹ்வின் நியதி மற்றும் விதி மீது முழு நம்பிக்கை கொண்ட இதயங்களுடன், ஆழ்ந்த வருத்தத்துடனும் துக்கத்துடனும், எங்கள் அன்பான மகன் இளவரசர் அல்-வலீத் பின் காலித் பின் தலால் பின் அப்துல்அஜிஸ் அல் சவுத் இன்று அல்லாஹ்வின் கருணையை நாடி மறைந்த துக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம்" என்று கூறினார்.
இமாம்கள் கவுன்சில் இரங்கல்
உலகளாவிய இமாம்கள் கவுன்சிலும் இரங்கல் தெரிவித்து, "கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் நீடித்த ஒரு துயர விபத்திற்குப் பிந்தைய நீண்ட போராட்டத்திற்குப் பிறகு காலமான இளவரசர் அல்வலீத் பின் காலித் பின் தலால் அல் சவுத்தின் மறைவுக்கு, ... அவரது அரச மாட்சிமைக்குரிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் மதிப்பிற்குரிய அரச குடும்பத்திற்கு உலகளாவிய இமாம்கள் கவுன்சில் தனது ஆழ்ந்த இரங்கலையும் மனமார்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறது," என்று கூறியது.
இறுதி பிரார்த்தனைகள் ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 20 அன்று, ரியாத்தில் உள்ள இமாம் துர்கி பின் அப்துல்லா மசூதியில் அஸ்ர் தொழுகைக்குப் பிறகு நடைபெறும்.