கெத்து காட்டும் சீனா... 26 நாடுகளின் தலைவர்கள் ஒரே இடத்தில்... மாஸான ராணுவ அணிவகுப்பு!
இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் சரணடைந்ததன் நினைவாக சீனாவில் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு நடைபெற உள்ளது. ரஷ்யா, வட கொரியா உட்பட 26 நாடுகளின் தலைவர்கள் இதில் பங்கேற்கின்றனர். இந்த அணிவகுப்பு சீனாவின் ராணுவ பலத்தையும் பன்னாட்டு உறவையும் எடுத்துக்காட்டும்.

பிரமாண்டமான ராணுவ அணிவகுப்பு
சீனத் தலைநகர் பெய்ஜிங்கில், இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் சரணடைந்ததைக் குறிக்கும் வகையில் பிரமாண்டமான ராணுவ அணிவகுப்பு நடைபெற உள்ளது. இந்த அணிவகுப்பில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் உட்பட 26 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
26 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பு
சீன வெளியுறவுத் துறை உதவி அமைச்சர் ஹாங் லெய், செய்தியாளர் சந்திப்பில் இத்தகவலைத் தெரிவித்தார். பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ, ஈரான் அதிபர் மசூத் பெசாஷ்கியான், இந்தோனேசியா அதிபர் பிரபோவோ சுபியாண்டோ, தென் கொரிய தேசிய அவை சபாநாயகர் வூ வோன்-ஷிக் உள்ளிட்டோரும் இந்த அணிவகுப்பில் கலந்துகொள்வார்கள்.
சீனாவின் ராணுவ பலம்
செப்டம்பர் 3-ஆம் தேதி நடைபெறும் இந்த அணிவகுப்பு, சீனாவின் வளர்ந்து வரும் ராணுவ பலத்தையும், சீனா, ரஷ்யா மற்றும் தெற்குலக நாடுகளுக்கு இடையிலான ராஜதந்திர ஒற்றுமையையும் உலகிற்கு பறைசாற்றும் வகையில் அமையும். இந்த நிகழ்வில், சீன அதிபர் ஷி ஜின்பிங், தியனன்மென் சதுக்கத்தில் பல்லாயிரக்கணக்கான வீரர்களை ஆய்வு செய்வார். அப்போது அவருடன் வெளிநாட்டுப் பிரமுகர்களும், சீன மூத்த தலைவர்களும் இருப்பார்கள்.
மிகப் பெரிய ராணுவ அணிவகுப்பு
இது சீனாவில் சமீப ஆண்டுகளில் நடக்கும் மிகப் பெரிய ராணுவ அணிவகுப்புகளில் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் போர் விமானங்கள், ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் அதிவேக ஆயுதங்கள் போன்ற அதிநவீன ராணுவ உபகரணங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.