பெட்ரோல் விலை மீண்டும் உயர்வு... பேருந்து கட்டணம் அதிகரிப்பு.. பொதுமக்கள் ஷாக்!
பயணிகள் போக்குவரத்து மட்டுமல்ல, சரக்கு போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. டீசல் விலை உயர்வால், சரக்கு லாரிகள் மற்றும் மினி மஸ்தா வேன்களின் உரிமையாளர்கள் சுமார் 5 சதவீதம் கட்டணத்தை உயர்த்தியுள்ளனர்.

பாகிஸ்தானில் பெட்ரோல் விலை மீண்டும் உயர்வு
பாகிஸ்தானில் பெட்ரோல் விலை மீண்டும் உயர்ந்ததால், நாடு முழுவதும் போக்குவரத்து கட்டணங்கள் அதிகரித்துள்ளன. ஏற்கனவே பணவீக்கத்தால் அவதிப்பட்டு வரும் பொதுமக்களுக்கு இது பெரும் சுமையாக மாறியுள்ளது என Samaa TV செய்தி வெளியிட்டுள்ளது. Samaa TV தகவல்படி, லாகூரில், பிராந்திய போக்குவரத்து ஆணையமும் (RTA) போக்குவரத்து உரிமையாளர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், 3 முதல் 4 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்திக்கொள்ள ஒப்புக்கொள்ளப்பட்டது.
டிரான்ஸ்போர்ட் ஹவுஸில் நடந்த இந்த கூட்டத்தில், எரிபொருள் விலை உயர்வை காரணம் காட்டி, உரிமையாளர்கள் அதிக கட்டண உயர்வை கேட்டனர். ஆனால், RTA செயலாளர் ராணா மோஷினின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, குறைந்த அளவுக்கே அனுமதி வழங்கப்பட்டது. மேலும், அனுமதியின்றி கட்டணத்தை உயர்த்தக் கூடாது என்றும் அதிகாரிகள் எச்சரித்தனர்.
பேருந்து கட்டணம் அதிகரிப்பு
ராணா மோஷின் பேசுகையில், "அனுமதிக்கப்பட்டதை விட யாரும் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது. மீறினால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரித்தார். புதிய கட்டணப் பட்டியல் உடனடியாக அமலுக்கு வரும் என்றும் அவர் உறுதிப்படுத்தினார். பெட்ரோல் விலை 7 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளதால் இந்த கட்டண மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். அதிகாரிகள் கட்டுப்பாடு விதித்தாலும், சில வழித்தடங்களில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சுமார் 5 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்தியுள்ளதாக பயணிகள் கூறுகின்றனர். இதனால் அன்றாட மற்றும் வெளியூர் பயணச் செலவுகள் அதிகரித்துள்ளன.
அடிக்கடி ஏற்படும் இந்த கட்டண உயர்வால் பயணம் செய்வது மிகவும் கடினமாகி வருவதாக பயணிகள் வேதனை தெரிவித்தனர். வெளியூர் பேருந்து கட்டணங்களும் கணிசமாக உயர்ந்துள்ளன. லாகூரிலிருந்து ராவல்பிண்டிக்கு கட்டணம் PKR 2,340 ஆகவும், பெஷாவருக்கு PKR 3,100 ஆகவும் அதிகரித்துள்ளது.
அதேபோல, ஃபைசலாபாத் மற்றும் சர்கோதாவுக்கு கட்டணம் PKR 1,260 ஆக உயர்ந்துள்ளது. லாகூர்-கராச்சி வழித்தடத்தில் கட்டணம் PKR 9,720 ஆக அதிகரித்துள்ளது.
சரக்கு போக்குவரத்தும் பாதிப்பு
பயணிகள் போக்குவரத்து மட்டுமல்ல, சரக்கு போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. டீசல் விலை உயர்வால், சரக்கு லாரிகள் மற்றும் மினி மஸ்தா வேன்களின் உரிமையாளர்கள் சுமார் 5 சதவீதம் கட்டணத்தை உயர்த்தியுள்ளனர். கராச்சியில், பாகிஸ்தான் சரக்கு போக்குவரத்து கூட்டமைப்பு 10 சதவீதம் கட்டண உயர்வை அறிவித்துள்ளதாக Samaa TV குறிப்பிட்டுள்ளது. இந்த கூட்டமைப்பின் தலைவர் மாலிக் ஷாஜாத் அவான், அரசின் எரிபொருள் கொள்கையை கடுமையாக விமர்சித்தார். அரசு வழங்கும் PKR 80,000 மானியம் போதாது என்று அவர் கூறினார். ஒரு ட்ரிப்புக்கு ஆகும் செலவு PKR 2,00,000 வரை அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

