- Home
- Business
- தேர்தல் முடியட்டும், அப்புறம் இருக்கு கச்சேரி! பெட்ரோல், டீசல் விலை ரூ.28 வரை உயர வாய்ப்பு?
தேர்தல் முடியட்டும், அப்புறம் இருக்கு கச்சேரி! பெட்ரோல், டீசல் விலை ரூ.28 வரை உயர வாய்ப்பு?
ஐந்து மாநில தேர்தல் முடிந்த பிறகு, பெட்ரோல், டீசல் விலைகள் கடுமையாக உயர வாய்ப்புள்ளதாக கோடக் இன்ஸ்டிடியூஷனல் ஈக்விட்டிஸ் அறிக்கை எச்சரித்துள்ளது. அதைப்பற்றி பார்க்கலாம்.

Petrol Diesel Price Hike
நாட்டில் பெட்ரோல், டீசல் விலை விரைவில் கடுமையாக உயர வாய்ப்புள்ளது. ஐந்து மாநில தேர்தல் முடிந்தவுடன் விலை உயரும் என 'கோடக் இன்ஸ்டிடியூஷனல் ஈக்விட்டிஸ்' அறிக்கை கூறுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால், லிட்டருக்கு ரூ.25 முதல் ரூ.28 வரை விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால், மக்களின் சுமையைக் குறைக்க, ஒரேடியாக இல்லாமல் படிப்படியாக விலையை உயர்த்தலாம்.
விலை உயர்வுக்கு காரணம் என்ன?
மேற்கு ஆசியாவில் நடக்கும் மோதல், 'ஹார்முஸ் ஜலசந்தி' வழியான எண்ணெய் வர்த்தகத்தை மோசமாக பாதித்துள்ளது. இதனால், கச்சா எண்ணெய் விலையில் பெரும் ஏற்ற இறக்கம் காணப்படுகிறது. ஸ்பாட் விலைக்கும் ஃபியூச்சர்ஸ் விலைக்கும் இடையிலான வித்தியாசம் அதிகரித்து, எண்ணெய் விநியோகத்தில் கடும் அழுத்தம் இருப்பதை இது காட்டுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால், இந்தியாவின் இறக்குமதி செலவு கணிசமாக அதிகரித்துள்ளது.
எப்போது உயரும்?
மார்ச், ஏப்ரல் மாதங்களில் இந்தியாவின் 'க்ரூட் பாஸ்கெட்' விலை மிகவும் ஏறியது. இறக்குமதி அளவில் 13-15% சரிவு ஏற்பட்டாலும், இறக்குமதி செலவில் தினமும் 190 முதல் 210 மில்லியன் டாலர் வரை கூடுதல் சுமை விழுகிறது. தற்போதைய சூழலில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும், இந்தியாவில் எரிபொருள் விலையை மாற்றி அமைக்கவில்லை. இது எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு (Refineries) பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்துகிறது. நிறுவனங்களுக்கு ஒவ்வொரு மாதமும் சுமார் ரூ.27,000 கோடி கூடுதல் நஷ்டம் ஏற்படுகிறது.
எவ்வளவு உயரும்?
அரசு கலால் வரியில் ரூ.10 விலக்கு அளித்தாலும், அது நிறுவனங்களின் இந்த பெரும் நஷ்டத்தை ஈடுகட்ட போதுமானதாக இல்லை. அரசியல் காரணங்களுக்காகவே விலை உயர்வை தற்போதைக்கு நிறுத்தி வைத்துள்ளதாக கோடக் ஈக்விட்டிஸ் பகுப்பாய்வு செய்கிறது. ஏப்ரல் 29 அன்று இறுதிக்கட்ட தேர்தல் முடிந்த பிறகு, எரிபொருள் விலையை மாற்றி அமைக்க வாய்ப்புள்ளது. கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு சுமார் 120 டாலரை எட்டியுள்ளதால், பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு, சிறிய அளவுகளில் விலை உயர்வைச் செய்ய நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

