போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறவில்லை! இந்தியாவை தாக்கவில்லை! பாகிஸ்தான் மறுப்பு!
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்தியா மீது தாக்குதல் நடத்தவில்லை என்று பாகிஸ்தான் விளக்கம் அளித்துள்ளது.

Pakistan denies violating ceasefire
பஹல்காமில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட பிறகு பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளை இந்தியா களையெடுத்தது. இதனால் ஆத்திரம் அடைந்த பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் அப்பாவி மக்களை குறி வைத்தது. ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப் என மாநிலங்களை கண்மூடித்தனமாக தாக்கியது. இந்திய ராணுவம் இதற்கு தகுந்த பதிலடி கொடுத்தது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய பாகிஸ்தான்
இந்தியாவின் தாக்குதலால் நிலைகுலைந்த பாகிஸ்தான், அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் அழுத்தத்தின் பேரில் போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தது. இந்தியாவும் இதற்கு சம்மதம் தெரிவித்தது. ஆனால் போர் நிறுத்த ஒப்பநதம் மேற்கொள்ளப்பட்ட அடுத்த 3 மணி நேரத்தில் நேற்று இரவு இந்தியாவின் எல்லையோர மாநிலங்கள் மீது ட்ரோன்கள் மூலம் பாகிஸ்தான் தாக்க முயற்சித்தது. நமது ராணுவம் பாகிஸ்தான் படைக்கு தக்க பதிலடி கொடுத்தது.
பாகிஸ்தானை குற்றம்சாட்டிய இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, ''போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்துகிறது. ஜம்மு காஷ்மீரில் சர்வதேச எல்லை மற்றும் கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஓசி) ஆகியவற்றில் மீண்டும் மீண்டும் எல்லை மீறல்கள் ஏற்பட்டால், அவற்றை வலுவாகக் கையாள ஆயுதப்படைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது'' என்றார்.
இந்தியா குற்றச்சாட்டுக்கு பாகிஸ்தான் மறுப்பு
ஆனால் இந்தியாவின் குற்றச்சாட்டை பாகிஸ்தான் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்தியாவுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய சில மணி நேரங்களுக்குப் பிறகு, பாகிஸ்தான் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அட்டாவுல்லா தரார், ''பாகிஸ்தான்எந்த போர் நிறுத்த மீறல்களையும் செய்யவில்லை'' என்று மறுத்துள்ளார்.
“பாகிஸ்தானால் எந்த போர் நிறுத்த மீறலும் செய்ய முடியாது, அதைப் பற்றி அது யோசிக்கவும் இல்லை. இது கொண்டாட்டத்தின் தருணம், இது எங்களுக்கு கிடைத்த வெற்றி என்பதால் மக்கள் மகிழ்ச்சியடைகிறார்கள்,” என்று ஜியோ நியூஸுக்கு அளித்த பேட்டியின் போது அட்டாவுல்லா தரார் கூறியுள்ளார். போர் நிறுத்தம் செய்யப்பட்டவுடன், பாகிஸ்தான் அதை மீறுவது என்ற கேள்விக்கே இடமில்லை என்று தரார் தெரிவித்தார்.
இந்திய எல்லையோர மாநிலங்களை தாக்கியது யார்?
இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு பதிலாக நல்லறிவு மேலோங்க வேண்டும் என்று இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரியையும் அவர் கடுமையாக சாடினார். போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எந்த தாக்குதலும் நடத்தவில்லை என்று பாகிஸ்தான் மறுத்துள்ளதால் எல்லையில் நேற்று இரவு தாக்குதல் நடத்தியது யார்? எனற கேள்வி எழுந்துள்ளது. இது பயங்கரவாதிகளின் தாக்குதல் என்று ஒரு சிலரும், தாக்குதல் நடத்தி விட்டு பாகிஸ்தான் பொய் சொல்வதாகவும் வேறு சிலரும் தெரிவித்துள்ளனர்.