- Home
- உலகம்
- ஆசிய நாடுகளில் பெருவெள்ளம்.. பலி எண்ணிக்கை 1,230 ஆக உயர்வு! இலங்கை, இந்தோனேசியாவில் அதிக பாதிப்பு!
ஆசிய நாடுகளில் பெருவெள்ளம்.. பலி எண்ணிக்கை 1,230 ஆக உயர்வு! இலங்கை, இந்தோனேசியாவில் அதிக பாதிப்பு!
ஆசிய நாடுகளில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 1,230-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இலங்கை மற்றும் இந்தோனேசியா மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. காலநிலை மாற்றமே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

ஆசிய நாடுகளில் வெள்ளம்
கனமழை காரணமாக ஆசிய நாடுகளில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,230 ஆக உயர்ந்துள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக இராணுவ வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ள நிலையில், மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளான இலங்கை மற்றும் இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் பலி எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.
அதிக பாதிப்புகளைச் சந்தித்த நாடுகள்
கடுமையான வானிலைக் காரணமாகக் கொட்டித் தீர்த்த கனமழை இலங்கையின் பெரும்பகுதியை வெள்ளத்தில் மூழ்கடித்தது. அதே சமயம், இந்தோனேசியா மற்றும் மலேசியாவிலும் கனமழையால் கணிசமான இழப்புகள் ஏற்பட்டுள்ளன.
இந்தோனேசியாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 659 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 475 பேர் இன்னும் காணவில்லை. இலங்கையில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 390 பேர் உயிரிழந்துள்ளதுடன், 352 பேர் காணவில்லை. தாய்லாந்து நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தில் 182 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தோனேசிய அதிபரின் கருத்து
வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சுமத்ரா தீவுக்கு திங்களன்று வருகை தந்த இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியான்டோ, "மோசமான நிலை கடந்துவிட்டது என்று நம்புகிறேன்," என்று தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், "தற்போது தேவையான உதவிகளை உடனடியாக அனுப்புவதுதான் அரசின் முதன்மைப் பணியாகும்," என்றார். குறிப்பாக வெள்ளத்தால் துண்டிக்கப்பட்ட பகுதிகளுக்கு கவனம் செலுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பாதிப்பு உள்ள பகுதிகளில் அவசரநிலையை அறிவிக்க வேண்டும் என அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன.
காலநிலை மாற்றம், பொருளாதார இழப்புகள்
தற்போது தென்கிழக்கு ஆசியாவின் பல பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை காலம் நிலவி வந்தாலும், காலநிலை மாற்றம் காரணமாக மழையின் வடிவங்கள் மாறி, தீவிரமான புயல்களால் மிக அதிக கனமழை ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.
நவம்பர் 2025-ன் மத்தியப் பகுதி முதல் ஆசியாவில் ஏற்பட்ட இந்த வெள்ளப் பெருக்கு மட்டும் சுமார் 6 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.50,000 கோடிக்கும் அதிகம்) அளவில் பொருளாதார இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக முதற்கட்ட மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
வீட்டை இழந்த மக்கள்
2025 ஆம் ஆண்டில், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, இந்தோனேசியா மற்றும் சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் ஏற்பட்ட கனமழை மற்றும் மேக வெடிப்பினால் உண்டான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஆயிரக்கணக்கானோரின் உயிரைப் பறித்துள்ளது. இதனால் கோடிக்கணக்கான டாலர் பொருளாதார இழப்பும் ஏற்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து இடம்பெயர வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

