ஈரான் வான்வெளி மூடிட்டாங்க! ஏர் இந்தியா விமானம் இப்போ எப்படி போகுது தெரியுமா?
ஈரான்-அமெரிக்கா பதற்றம் காரணமாக, ஈரான் தனது வான்வெளியை பகுதியளவில் மூடியுள்ளது. இதனால், ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ விமானங்கள் பாதுகாப்பு கருதி மாற்றுப் பாதைகளில் இயக்கப்படுகின்றன.

ஏர் இந்தியா மாற்றுப் பாதை
அமெரிக்காவின் தாக்குதல் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் சூழலில், ஈரான் தனது வான்வெளியை பகுதியளவில் மூடுவதாகஅறிவித்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஈரான் தரப்பு விளக்கமளித்துள்ளது. வான்வழியாக தற்போது அதிகாரபூர்வ அனுமதி பெற்ற விமானங்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சர்வதேச விமான போக்குவரத்தில் திடீர் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த அறிவிப்பு வெளியான உடனேயே, ஏர் இந்தியா, இண்டிகோ உள்ளிட்ட விமானங்கள் ஈரான் வான்வெளியைத் தவிர்த்து மாற்றுப் பாதைகளில் சேவைகளை இயக்கத் தொடங்கின. சில விமானங்கள் நீண்ட சுற்றுப்பாதையில் செல்ல வேண்டியதால் பயண நேரம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
ஈரான் வான்வெளி மூடல்
இதன் காரணமாக விமானங்கள் தாமதமாகலாம் என்றும், பயணிகள் தங்கள் விமானத்தின் நேர அட்டவணையை நிறுவன இணையதளம் அல்லது செயலியில் சரிபார்க்க வேண்டும் என்றும் விமான நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன. விமான நிலையத்திற்குச் செல்லும் முன் நிலவரத்தை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளன.
ஏர் இந்தியா அறிவித்தது, "பயணிகளின் பாதுகாப்பை முதன்மையாகக் கொண்டு எங்கள் விமானங்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படுகின்றன. இதனால் சில சேவைகள் தாமதமாகின்றன பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருத்தமும் தெரிவித்தார். இண்டிகோவும் இதே போன்று பயண அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.
இண்டிகோ பயண அறிவுறுத்தல்
மற்றொரு புறம், ஈரான்-அமெரிக்கா இடையே பதற்றம் தீவிரமடைந்த நிலையில், கத்தாரில் உள்ள அல் உதெய்த் (Al Udeid) விமானப்படை தளத்தில் இருந்து சில வீரர்கள் மற்றும் அதிகாரிகளை அவசரமாக வெளியேறுமாறு அமெரிக்க ராணுவம் அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.
அமெரிக்கா தாக்குதல் நடத்தியது, கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் துருக்கியில் உள்ள அமெரிக்கத் தளங்கள் தாக்கப்படும் என ஈரான் முன்பே எச்சரித்திருந்தது. கடந்த ஜூன் மாதம் நடந்த தாக்குதல்களுக்குப் பிறகான அனுபவங்களையும் கருத்தில் கொண்டு, தற்போதைய நிலவரத்தை கண்காணிக்க கத்தார் அரசு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது.

