ஐஸ்லாந்தில் முதல் முறையாக கொசுக்கள் கண்டுபிடிப்பு! காலநிலை மாற்றம் காரணமா?
உலகிலேயே கொசுக்கள் இல்லாத நாடாக இருந்த ஐஸ்லாந்தில், முதல் முறையாக 'குலிசெட்டா அன்யூலேட்டா' வகை கொசுக்கள் கண்டறியப்பட்டுள்ளன. கப்பல்கள் அல்லது சரக்குகள் மூலம் இவை வந்திருக்கலாம் என்றும், காலநிலை மாற்றம் இதற்குக் காரணம் அல்ல என்றும் கூறப்படுகிறது.

ஐஸ்லாந்தில் கொசு
உலகிலேயே கொசுக்கள் இல்லாத இடங்களில் ஒன்றாக நீண்ட காலமாக இருந்து வந்த தீவு நாடான ஐஸ்லாந்தில், முதல் முறையாகக் கொசுக்கள் கண்டறியப்பட்டுள்ளது.
ஐஸ்லாந்தின் இயற்கை அறிவியல் நிறுவனத்தைச் சேர்ந்த பூச்சியியல் வல்லுநர் மத்தியாஸ் ஆல்ஃப்ரெட்ஸன் (Matthias Alfredsson), தலைநகர் ரேக்ஜாவிக்கில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் (20 மைல்) வடக்கே, மூன்று கொசுக்கள் கண்டறியப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். 'குலிசெட்டா அன்யூலேட்டா' (Culiseta annulata) வகையைச் சேர்ந்த இந்தக் கொசுக்கள் இரண்டு பெண் என்றும் மற்றொன்று ஆண் என்றும் கூறியுள்ளார்.
கண்காணிப்பு தேவை
அண்டார்டிகாவுடன் சேர்த்து, ஐஸ்லாந்து நீண்ட காலமாக கொசுக்கள் இல்லாத சில இடங்களில் ஒன்றாக இருந்து வந்தது. இந்நிலையில், அங்கு கொசுக்கள் உருவாகியிருப்பதை மத்தியாஸ் ஆல்ஃப்ரெட்ஸன் கண்டுபிடித்துள்ளார்.
இது குறித்து செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அவர் அளித்த மின்னஞ்சல் அறிக்கையில், "இந்தக் கொசுக்கள் அந்துப்பூச்சிகளைக் கவரும் நோக்கத்துடன் வைக்கப்பட்ட வைன் கயிறுகளில் தென்பட்டன" என்று தெரிவித்துள்ளார்.
ஐஸ்லாந்தின் இயற்கைச் சூழலில் கொசுக்கள் காணப்படுவது இதுவே முதல் பதிவு என்ற ஆல்ஃப்ரெட்ஸன், பல ஆண்டுகளுக்கு முன்பு கெஃப்லாவிக் விமான நிலையத்தில் ஒரு விமானத்தில் இருந்து 'ஏடிஸ் நிக்ரிப்ஸ்' (Aedes nigripes) என்ற ஆர்க்டிக் இனத்தைச் சேர்ந்த கொசுவின் மாதிரி சேகரிக்கப்பட்டது. ஆனால், அந்த வகை கொசு இப்போது இல்லை" என்று குறிப்பிட்டார்.
இந்தக் கொசுக்கள் சமீபத்தில் வந்த கப்பல்கள் அல்லது சரக்குப் பெட்டகங்கள் வழியாக ஐஸ்லாந்திற்குள் வந்திருக்கலாம் என்று அவர் கருதுகிறார். மேலும், இந்த இனம் பல இடங்களில் பரவியுள்ளதா என்பதை அறிய, வசந்த காலத்தில் (Spring) கண்காணிப்பைத் தொடர வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறுகிறார்.
காலநிலை மாற்றம் காரணமல்ல
காலநிலை மாற்றத்தால் ஏற்படும் வெப்பநிலை உயர்வு, நீண்ட கோடைக்காலம் மற்றும் மிதமான குளிர்காலம் ஆகியவை கொசுக்கள் செழித்து வளரச் சாதகமான சூழலை உருவாக்குகின்றன. எனினும், ஐஸ்லாந்தில் கொசுக்கள் தென்பட்டதற்கு வெப்பமான காலநிலைதான் காரணம் என்று தான் நம்பவில்லை என ஆல்ஃப்ரெட்ஸன் சொல்கிறார்.
இந்தக் கொசு இனம் குளிர்காலச் சூழ்நிலைகளுக்கு நன்கு தகவமைத்துக் கொண்டுள்ளது என்றும், இந்தக் கொசு வெப்பநிலை உறைநிலைக்குக் கீழே செல்லும் கடுமையான குளிர்காலத்திலும் தாக்குப்பிடிக்கின்றன என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
இதனால், ஐஸ்லாந்தின் சவாலான சூழலில் நீடித்திருப்பதற்கான திறன் இந்தக் கொசுக்களுக்கு உள்ளது எனவும் அவர் தெரிவிக்கிறார்.