செம ஐடியா.. திருமணச் செலவைக் குறைக்க மணமகன் செய்த செயல்!
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மணமகன் ஒருவர், தனது திருமணச் செலவுகளைச் சமாளிக்க ஒரு புதுமையான வழியைக் கையாண்டார். அவர் தனது திருமண உடையில் 26 ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் விளம்பரங்களைப் பதித்து, அதற்கான நிதியைத் திரட்டினார்.

திருமணச் செலவைக் குறைக்கும் ஐடியா!
திருமணச் செலவுகளைச் சமாளிப்பதற்காக, தனது திருமண உடை முழுவதும் விளம்பரங்களைப் பதித்து, அதற்கான நிதியைத் திரட்டிய ஒரு பிரான்ஸ் நாட்டு மணமகனின் செயல் இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது. அவரது இந்தச் யோசனையை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
பிரான்ஸ் நாட்டில் உள்ள லில்லி (Lille) பகுதியைச் சேர்ந்தவர் டகோபர்ட் ரெனோப் (Dagobert Renouf). இவர் ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவருக்கும் இவரது மணமகள் கிளாராவுக்கும் கடந்த அக்டோபர் 25-ம் தேதி திருமணம் நடைபெற்றது.
26 நிறுவனங்களின் விளம்பரத்துடன் 'சூட்'
திருமணத்திற்கான செலவினங்களை ஈடுகட்ட வித்தியாசமான ஒரு வழியைக் கையாள ரெனோப் முடிவு செய்தார். அதன்படி, தனது திருமண ஆடையில் பல்வேறு ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் விளம்பரங்களை இடம்பெறச் செய்ய அவர் திட்டமிட்டார்.
செயற்கை நுண்ணறிவு, மென்பொருள் கருவிகள் (SaaS) உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 26 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இவரது இந்த யோசனைக்கு ஆதரவளித்து, ஸ்பான்சர்ஷிப் வழங்கின. இந்த நிறுவனங்களின் 'லோகோக்கள்' அனைத்தும் ரெனோப் அணிந்திருந்த கருப்பு நிற சூட்டில் நேர்த்தியாகப் பதிக்கப்பட்டிருந்தன.
'எக்ஸ்' தளத்தில் நெகிழ்ச்சிப் பதிவு
தனது திருமணம் முடிந்த பிறகு, ரெனோப் சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் இதுகுறித்துப் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், "எங்கள் திருமணத்துக்குப் பணம் கிடைக்க உதவிய 26 ஸ்டார்ட் அப்களுக்கு மிக்க நன்றி. அது ஒரு அழகான நாள்," என்று குறிப்பிட்டதோடு, விளம்பரங்கள் பதிக்கப்பட்டிருந்த தனது உடையின் புகைப்படத்தையும் பதிவிட்டிருந்தார்.
இந்தப் பதிவு விரைவில் இணையத்தில் வைரலானது. மணமகனின் கிரியேட்டிவ் ஐடியாவை நெட்டிசன்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
நெட்டிசன்கள் வாழ்த்து
ஒரு பயனர், "இது மிகவும் வேடிக்கையானது. ஆனால், அருமையாக உள்ளது" என்று பதிவிட்டிருந்தார். மற்றொருவர், "இந்த ஆண்டின் வெற்றிகரமான மார்க்கெட்டிங் விருது உங்களுக்குக் கிடைக்கும்" என்று வாழ்த்துத் தெரிவித்திருந்தார்.
பொதுவாகவே, திருமணச் செலவுகளைக் குறைப்பது சவாலாக இருக்கும் நிலையில், மணமகன் டகோபர்ட் ரெனோப் தனது திருமண உடையையே ஒரு விளம்பர மேடையாக்கி நிதியைத் திரட்டியது, புதுமையான வர்த்தக யோசனைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக மாறியுள்ளது.