- Home
- உலகம்
- மகா பிரபு மருந்தை கூட விட்டு வைக்க மாட்டீங்களா..? மருந்து பொருட்கள் இறக்குமதிக்கு 100% வரி விதித்து அடாவடி
மகா பிரபு மருந்தை கூட விட்டு வைக்க மாட்டீங்களா..? மருந்து பொருட்கள் இறக்குமதிக்கு 100% வரி விதித்து அடாவடி
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்து பொருட்களுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும் என்று அறிவித்து அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார்.

வெளிநாட்டு மருந்துகளுக்கு 100% வரி
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றொரு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து மருந்துகளுக்கும் 100% வரி விதிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த விதி வருகின்ற அக்டோபர் 1, 2025 முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் தயாரிக்கப்படாத எந்தவொரு மருந்துக்கும் 100% வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் சமூக ஊடகத்தில் ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார். இந்த விதி பிராண்டட் மற்றும் காப்புரிமை பெற்ற மருந்துகளுக்கும் பொருந்தும்.
வீட்டு உபயோக பொருட்களுக்கும் கூடுதல் வரி
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மருந்துகள் தவிர பல வெளிநாட்டுப் பொருட்களுக்கும் அதிக வரி விதிப்பதாக அறிவித்துள்ளார். இனி அமெரிக்காவில் சமையலறைப் பொருட்கள் மற்றும் குளியலறை வேனிட்டிகளுக்கு 50%, பர்னிச்சர்களுக்கு 30%, கனரக டிரக்குகளுக்கு 25% வரி விதிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். வெளிநாடுகளில் இருந்து வரும் இந்தப் பொருட்கள் அமெரிக்க நிறுவனங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துவதாக டிரம்ப் கூறுகிறார். கனரக டிரக்குகள் மற்றும் அவற்றின் பாகங்கள் கூட நமது சொந்த உற்பத்தியாளர்களை பலவீனப்படுத்துகின்றன. எனவே, தேசிய பாதுகாப்பு மற்றும் உள்நாட்டுத் தொழில்களைப் பாதுகாக்க வரி விதிப்பது அவசியம் என்று விளக்கம் அளித்துள்ளார்.
எதிர்மறையாக மாறும் டிரம்பின் முடிவு..?
வெள்ளை மாளிகையின் முந்தைய வர்த்தகக் கொள்கைகள் மற்றும் இறக்குமதி வரிகள் குறித்த அறிவிப்புகளுக்கு சில வாரங்களுக்குப் பிறகு, அதிபர் டிரம்ப் புதிய வரியை அமல்படுத்துவதாக அறிவித்துள்ளார். ஏபி அறிக்கையின்படி, இந்த நடவடிக்கை அமெரிக்காவின் பற்றாக்குறையைக் குறைத்து, உள்நாட்டுத் தயாரிப்புகளை ஊக்குவிக்கும் என்று டிரம்ப் நம்புகிறார். ஆனால், இந்த முடிவு எதிர்மறையாகவும் அமையக்கூடும் என்று பல நிபுணர்கள் கூறுகின்றனர். இது பணவீக்கத்தை மேலும் அதிகரித்து, பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும் என்று அவர்கள் வாதிடுகின்றனர்.
இந்தியாவுக்கு பாதிப்பு..
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்து பொருட்கள் என்று டிரம்ப் பொதுவாக குறிப்பிட்டிருந்தாலும், இதில் இந்தியாவுக்கே அதிக பாதிப்பு என்று சொல்லப்படுகிறது. ஏனெனில் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்து பொருட்களில் பெரும்பான்மையானவை இந்தியாவில் இருந்து தான். ஆகவே இந்த அறிவிப்பு இந்தியாவுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று சொல்லப்படுகிறது.