கரப்பான் பூச்சி காபி! ஒரு கப் 560 ரூபாய்.. விரும்பி ருசி பார்க்கும் இளைஞர்கள்!
சீனாவின் பெய்ஜிங்கில் உள்ள ஒரு பூச்சி அருங்காட்சியகம், கரப்பான் பூச்சி தூள் மற்றும் உலர்ந்த கோதுமைப் புழுக்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஒரு புதிய காபியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தக் காபி இளைஞர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகிறது.

சீனாவில் கரப்பான் பூச்சி காபி
சீனாவின் பெய்ஜிங்கில் உள்ள ஒரு பூச்சி அருங்காட்சியகம் (Insect Museum), கரப்பான் பூச்சி தூள் (Cockroach powder) மற்றும் உலர்ந்த கோதுமைப் புழுக்களைக் (dried wheatworm) கொண்ட காபியை அறிமுகப்படுத்தியுள்ளது.
அருங்காட்சியகத்தில் உள்ள காபி கடையில் விற்கப்படும் இந்தக் காபி ஒரு கப் 45 யுவான் (இந்திய மதிப்பில் தோராயமாக 560 ரூபாய்) விலைக்கு விற்கப்படுகிறது.
சீன ஊடகமான தி கவர் (The Cover) மற்றும் ஹாங்காங் ஊடகமான சவுத் சீனா மார்னிங் போஸ்ட் (South China Morning Post) ஆகியவற்றின்படி, இந்தக் காபி ஜூன் மாத இறுதியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. "பூச்சி சார்ந்த அருங்காட்சியகம் என்பதால், அதற்கேற்ற பானங்களை வழங்கத் திட்டமிட்டோம்" என்று அருங்காட்சியக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்தக் காபியின் மேல் அரைக்கப்பட்ட கரப்பான் பூச்சி தூள் தூவப்படுகிறது. உலர்ந்த மஞ்சள் கோதுமைப் புழுக்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
சுவையும் ஆரோக்கியமும்
இந்த வினோத காபியைச் சுவைத்தவர்கள், இதில் தீய்ந்து போனதைப் போன்ற ருசியும் லேசான புளிப்பும் இருப்பதாக் கூறியுள்ளனர். இந்தக் காபியில் பயன்படுத்தும் அனைத்துப் பொருட்களும் பாரம்பரிய மூலிகைக் கடைகளில் இருந்து வாங்கப்பட்டவை என்றும், பாதுகாப்புப் பிரச்சினை எதுவும் இல்லை என்றும் அருங்காட்சியகம் வலியுறுத்தியுள்ளது.
சீன மருத்துவக் கோட்பாட்டின்படி, கரப்பான் பூச்சி தூள் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும் எனக் கூறப்படுகிறது. புரதம் நிறைந்த உணவான கோதுமைப் புழுக்கள் (Mealworms) நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்தும் எனச் சொல்லப்படுகிறது.
"பூச்சி காபியைச் சுவைக்க இளைஞர்கள் தான் அதிக அளவில் வருகிறார்கள். கரப்பான் பூச்சிகள் மீது இருக்கும் வெறுப்பு காரணமாக, குழந்தைகளுடன் வரும் பெற்றோர்கள் இந்தக் காபியை அதிகம் குடிப்பதில்லை" என்றும் அருங்காட்சியக அதிகாரி ஒருவர் கூறுகிறார். தற்போது, ஒரு நாளைக்குச் சராசரியாக 10 கப் காபி விற்பனையாகிறது.
ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்தக் காபியைச் சுவைத்த ஒரு பிரபல வலைப்பதிவர், "நான் நினைத்தது போல் இது அருவருப்பாக இல்லை" என்று கூறியிருக்கிறார்.
பிற பூச்சி பானங்கள்
கரப்பான் பூச்சி காபியைத் தவிர, அருங்காட்சியகம் பலவகையான பூச்சிகளைப் பயன்படுத்திப் பல்வேறு பானங்களை விற்பனை செய்கிறது. ஹாலோவீன் நேரத்தில் மட்டும் விற்கப்படும் எறும்பு காபி (Ant coffee) எறும்பு காபி அதிக புளிப்புச் சுவை கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
பூச்சி உண்ணும் தாவரங்களின் செரிமான திரவங்களைப் பயன்படுத்தியும் காபி தயாரிக்கப்படுகிறது. இது வழக்கமான காபியைப் போன்ற சுவையைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.