அப்பாடா... இனி இன்சுலின் ஊசி வேண்டாம்! சீனாவின் செல் சிகிச்சையில் சாதனை!
சீன விஞ்ஞானிகள் ஸ்டெம் செல் சிகிச்சை மூலம் டைப் 2 நீரிழிவு நோயை வெற்றிகரமாகக் குணப்படுத்தியுள்ளனர். அவரது சொந்த இரத்த அணுக்களிலிருந்து உருவாக்கப்பட்ட ஸ்டெம் செல்கள், கணையத் தீவு செல்களாக மாற்றப்பட்டு, வெற்றிகரமாக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

டைப் 2 நீரிழிவு நோய் மருந்து
கடந்த பத்தாண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட தொடர் ஆய்வுக்குப் பிறகு, சீன விஞ்ஞானிகள் குழு ஒன்று, செல் சிகிச்சை மூலம் டைப் 2 வகை நீரிழிவு நோயை வெற்றிகரமாக குணப்படுத்தி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
ஷாங்காய் சாங்செங் மருத்துவமனையின் ஆய்வாளர்கள் இந்த சிகிச்சையை மேற்கொண்டனர். 25 ஆண்டுகளாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 59 வயது நோயாளிக்கு இந்த சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஸ்டெம் செல் சிகிச்சை
முதலில், ஜூலை 2021 இல், அந்த நோயாளியின் சொந்த இரத்த அணுக்களிலிருந்து ஸ்டெம் செல்கள் உருவாக்கப்பட்டன. இந்த ஸ்டெம் செல்கள், கணையத்தில் உள்ள இன்சுலின் உற்பத்தி செய்யும் கணையத் தீவு செல்களாக மாற்றப்பட்டன. மாற்றப்பட்ட இந்த கணையத் தீவு செல்கள் நோயாளிக்கு வெற்றிகரமாக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டன.
இந்த சிகிச்சை மூலம், 11 வாரங்களுக்குள் நோயாளி வெளியிலிருந்து இன்சுலின் எடுத்துக்கொள்வது முற்றிலும் நிறுத்தப்பட்டது. அடுத்த ஒரு வருடத்தில், அவர் பயன்படுத்தி வந்த வாய்வழி மருந்துகளும் படிப்படியாகக் குறைக்கப்பட்டு, முழுமையாக நிறுத்தப்பட்டன.
சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்திய ஸ்டெம் செல்கள்
இது, உலகில் முதன்முறையாக ஸ்டெம் செல்கள் மூலம் நீரிழிவு நோயை குணப்படுத்திய வெற்றிகரமான முறையாகக் கருதப்படுகிறது. இந்த ஆய்வு முடிவுகள் Cell Discovery என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளன. கணையத்தில் உள்ள இந்தச் செல்கள், ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
இன்சுலின் உற்பத்தி செய்யும் பீட்டா செல்கள்
பீட்டா செல்கள் எனப்படும் இந்த செல்கள்தான் இன்சுலினை உற்பத்தி செய்கின்றன. இன்சுலின், சர்க்கரையை நமது செல்களுக்குள் செல்ல அனுமதிக்கும் திறவுகோலாக செயல்படுகிறது. டைப் 2 நீரிழிவு நோயில், உடலின் செல்கள் இன்சுலினுக்கு சரியாக பதிலளிக்காது. இதனால் கணையம் அதிக இன்சுலின் உற்பத்தி செய்ய முயற்சிக்கும். நாளடைவில், இந்த பீட்டா செல்கள் களைப்படைந்து, இன்சுலின் உற்பத்தி குறையும். இந்த நிலையில்தான் சீன விஞ்ஞானிகள் இந்த புதிய சிகிச்சையை வெற்றிகரமாகப் பயன்படுத்தி சாதனை படைத்துள்ளனர்.