ChatGPT கொடுத்த லக்கி நம்பர்.. லாட்டரியில் ரூ.1.20 கோடி ஜாக்பாட் அடித்த பெண்!
அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தைச் சேர்ந்த கேரி எட்வர்ட்ஸ் என்ற பெண், ChatGPT அளித்த எண்களைப் பயன்படுத்தி பவர்பால் லாட்டரியில் 1,50,000 டாலர் வென்றார். இந்த எதிர்பாராத பரிசுத் தொகை முழுவதையும் தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக அளித்துள்ளார்.

நம்பரை தேர்வுசெய்த சாட்ஜிபிடி
அமெரிக்காவில், வர்ஜீனியா மாகாணத்தைச் சேர்ந்த கேரி எட்வர்ட்ஸ் என்ற பெண்மணி, சமீபத்தில் லாட்டரி சீட்டு மூலம் 1,50,000 லட்சம் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.20 கோடி) வென்றுள்ளார். இந்த வெற்றிக்கு அவர் பயன்படுத்திய வழி மிகவும் ஆச்சரியமானது. அவருக்கு எண்களைத் தேர்ந்தெடுப்பதில் குழப்பம் ஏற்படவே, பிரபல செயற்கை நுண்ணறிவு கருவியான ChatGPT-யிடம் உதவி கேட்டுள்ளார்.
சாட்ஜிபிடியின் தாக்கம்
வழக்கமாக லாட்டரியில் வென்றவர்கள் ஆடம்பரமான கார், வீடு அல்லது பயணங்கள் என கனவு காண்பார்கள். ஆனால், கேரி தனது அதிர்ஷ்டத்தை மற்றவர்களுக்கு உதவ பயன்படுத்தியுள்ளார். ChatGPT போன்ற ஒரு தொழில்நுட்பத்தின் சிறிய வழிகாட்டல், சரியான முறையில் பயன்படுத்தப்படும்போது எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதற்கு இவரது கதை ஒரு சிறந்த உதாரணமாக உள்ளது.
ChatGPT அளித்த எண்கள்
செப்டம்பர் 8 ஆம் தேதி நடந்த பவர்பால் லாட்டரி சீட்டு குலுக்கலில் பங்கேற்ற கேரி, "ChatGPT, எனக்கு சில எண்களைக் கொடு" என்று கேட்டுள்ளார். ChatGPT அளித்த எண்களைக் கொண்டு அவர் லாட்டரி சீட்டை வாங்கிய இரண்டு நாட்களுக்குப் பிறகு, "நீங்கள் லாட்டரியில் வெற்றி பெற்றுள்ளீர்கள்!" என்ற அறிவிப்பு அவரது தொலைபேசியில் வந்துள்ளது. முதலில் அது ஒரு மோசடி என நினைத்த அவர், பின்னர் அந்த எண்கள் பவர்பால் குலுக்கல் எண்களுடன் சரியாகப் பொருந்தியுள்ளது என்பதை உறுதிப்படுத்திக் கொண்டார்.
1.5 லட்சம் டாலர் பரிசுத்தொகை
கேரி எட்வர்ட்ஸின் பரிசுத் தொகை முதலில் 50,000 டாலராக இருந்தது. ஆனால், அவர் "பவர் பிளே" என்ற கூடுதல் விருப்பத்தைத் தேர்ந்தெடுத்திருந்ததால், அவரது பரிசுத் தொகை மூன்று மடங்காக அதிகரித்து 150,000 டாலராக ஆக மாறியது. இந்த எதிர்பாராத அதிர்ஷ்டம் கிடைத்தவுடன், தான் இந்த பணத்தை என்ன செய்ய வேண்டும் என்பதில் அவர் தெளிவாக இருந்தார். "இந்த அற்புதமான அதிர்ஷ்டம் எனக்குக் கிடைத்த தருணத்தில், இது மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்று நினைத்தேன்," என்று அவர் கூறினார்.
பரிசுப் பணத்தில் நன்கொடை
லாட்டரி பரிசை மூன்று பகுதிகளாகப் பிரித்த கேரி, அதை மூன்று தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக அளித்தார். ஒரு பகுதி, அவரது மறைந்த கணவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், முன்னணி தற்காலிக முதுமை மறதி நோய்க்கான (Frontotemporal Degeneration) ஆராய்ச்சிக்காக வழங்கப்பட்டது. கடந்த 2024 ஆம் ஆண்டு அவரது கணவர் இந்த நோயால் உயிரிழந்தார்.
மற்றொரு பகுதி, பசியால் வாடும் மக்களுக்கு உதவும் Shalom Farms என்ற அரசு சாரா நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இறுதியாக, கடற்படை-கடலோரப் படை நிவாரண சங்கத்திற்கு நிதி உதவி அளித்தார், இது ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு நிதி உதவி அளிக்கிறது.