- Home
- உலகம்
- Aral Sea: 60 ஆண்டுகளுக்கு முன் கடல், இன்று பாலைவனம்..! மனிதன் செய்த 'அந்த' ஒரு தவறால் வற்றிப்போன கடலின் அதிர்ச்சி வரலாறு.!
Aral Sea: 60 ஆண்டுகளுக்கு முன் கடல், இன்று பாலைவனம்..! மனிதன் செய்த 'அந்த' ஒரு தவறால் வற்றிப்போன கடலின் அதிர்ச்சி வரலாறு.!
Aral Sea Disaster: உலக வரலாற்றில் மிக மோசமான நிகழ்வு என்பது கடல் நீர் வற்றுவதுதான். அப்படி ஒரு நிகழ்வு மத்திய ஆசியாவில் நடந்துள்ளது. அது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

Aral Sea Disaster - ஆரல் கடல் பாலைவனமாக மாறிய கதை
மனித வரலாற்றின் மிக மோசமான சுற்றுச்சூழல் பேரழிவுகளில் ஒன்றான ஆரல் கடல் வறண்ட கதையை இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம். மத்திய ஆசியாவில் கஜகஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையே அமைந்திருந்த ஆரல் கடல், ஒரு காலத்தில் உலகில் நான்காவது பெரிய உள்நாட்டு கடலாக இருந்தது. ஆனால் தற்போது அது வெறும் உப்பு காற்றும், உடைந்த கப்பல்களையும் கொண்ட ஒரு பெரிய பாலைவனமாக மாறிவிட்டது. இந்த பேராபத்தின் பின்னணி மற்றும் முக்கிய காரணங்கள் குறித்து இங்கு காணலாம்.
68,000 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்ட பெருங்கடல்
1960-களுக்கு முன்பு வரை ஆரல் கடல் சுமார் 68,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டு பெருங்கடலாக காட்சியளித்தது. இங்கு ஆண்டுக்கு பல்லாயிரக்கணக்கான டன் மீன்கள் பிடிக்கப்பட்டன. இது உள்ளூர் மக்களின் வாழ்வாதாரமாகவும், கஜகஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகவும் விளங்கியது. மேலும் கடலை சுற்றியுள்ள பிற பகுதிகளின் வெப்பநிலையை சமமாக வைத்திருக்க இந்த கடல் உதவியது. கோடையில் குளிர்ச்சியையும், குளிர்காலத்தில் இதமான சூழ்நிலையையும் தந்தது. அமு தர்யா மற்றும் சிர் தர்யா ஆகிய இரு பெரும் நதிகள், பனி மலைகளில் இருந்து உருகி ஓடி வந்து இக்கடலை நிரப்பிக் கொண்டே இருந்தன.
பாலைவனமாக மாறிய ஆரல் கடல்
60 ஆண்டுகளுக்கு முன்பு கடலாக இருந்த இந்த இடம் தற்போது பற்றி பாலைவனமாக காட்சியளிக்கிறது. இது முழுக்க முழுக்க மனிதர்களால் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு சுற்றுச்சூழல் அத்து மீறலாகும். 1960 ஆம் ஆண்டுகளில் சோவியத் ஒன்றியம் மத்திய ஆசிய பகுதியை உலகில் மிகப்பெரிய பருத்தி உற்பத்தி மையமாக மாற்ற முடிவு செய்தது. பருத்தி பயிரிடுவதற்கு அதிகப்படியான தண்ணீர் தேவைப்பட்டது. எனவே ஆரல் கடலுக்குச் செல்லும் நீர் ஆதாரங்களான அமு தர்யா மற்றும் சிர் தர்யா ஆகிய ஜீவநதிகளின் பாதைகளை சோவியத் பொறியாளர்கள் அணை மற்றும் கால்வாய்கள் மூலம் திசை திருப்பினர்.
அமு தர்யா மற்றும் சிர் தர்யா நதிகள்
இந்த இரண்டு நதிகளின் நீரானது உஸ்பெகிஸ்தான் மற்றும் துர்க்மெனிஸ்தான் பகுதிகளின் வறண்ட நிலங்களில் பருத்தி மற்றும் நெல் விவசாயத்திற்காக பாய்ச்சப்பட்டது. அவசர அவசரமாக வெட்டப்பட்ட பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர் நீளம் கொண்ட கால்வாய்கள் சரியாக பூசப்படவில்லை. இதனால் நதிகளில் இருந்து திருப்பப்பட்ட நீரானது 30% முதல் 75% வரை கடலை சென்று சேர்வதற்கு முன்னரே வறண்ட மணலால் உறிஞ்சப்பட்டு வீணானது. கடலுக்கு வர வேண்டிய நீர் முழுமையாக நின்றதால் ஆரல் கடல் தன்னுடைய நீர் இருப்பை வேகமாக இழந்து ஆவியாகத் தொடங்கியது. 1980ஆம் ஆண்டுகளுக்குள் கடல் இரண்டாகப் பிரிந்து சிறு சிறு குளங்களாக சுருங்கியது.
துருப்பிடித்து நிற்கும் கப்பல்கள்
அமு தர்யா மற்றும் சிர் தர்யா ஆகிய நதிகளின் நீர்வரத்து முழுமையாக நின்று விட்டதால் ஆரல் கடலின் 90% நீர் பரப்பளவு முற்றிலும் மறைந்து விட்டது. தற்போது அங்கு உப்புக் கழிவுகளும், வறண்ட நிலமும் எஞ்சி இருக்கிறது. கடல் வற்றிய இடத்தில் 60,000 சதுர கிலோ மீட்டருக்கும் மேலாக பாலைவனம் உருவாகியுள்ளது. ஒரு காலத்தில் அலைகளின் மீது மிதந்த பிரம்மாண்ட தோணிகள் மற்றும் கப்பல்கள் இன்று வறண்ட மணலில் துருப்பிடித்து காட்சியளிக்கின்றன. இது பார்ப்போரின் நெஞ்சங்களை எல்லாம் உலுக்குகிறது. கடல் வற்றியதால் அந்த பகுதி மக்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
ஆரல் கடல் வற்றியதால் ஏற்பட்ட மோசமான விளைவுகள்
கடல் நீர் வற்றியதால் அதன் தரைப்பகுதியில் டன் கணக்கில் உப்பு மற்றும் விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகள் தேங்கி கிடக்கின்றன. பலத்த காற்று வீசும் பொழுது இந்த நச்சு படிமங்கள் காற்றில் கலந்து உப்பு புயலாக மாறி, 100 கிலோ மீட்டர் தொலைவிற்கு பரவுகின்றன. இதனால் இந்த பகுதியில் வாழும் மக்களுக்கு தொண்டை புற்றுநோய், சுவாசக் கோளாறுகள், சிறுநீரகக் கோளாறுகள் ரத்த சோகை போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. கடலின் ஈரப்பதம் இல்லாததால் இப்பகுதியின் காலநிலை கடுமையாக மாறி உள்ளது. கோடை காலம் கடுமையான வெப்பத்துடனும், குளிர் காலம் உறை பனியுடனுன் காணப்படுகிறது. விவசாயம் மேற்கொள்ள முடியாதபடி நிலங்கள் உவர்ப்புத் தன்மையாக மாறிவிட்டன.
மீட்பு முயற்சிகள்
ஆரல் கடலை முழுமையாக மீட்டெடுப்பது சாத்தியமில்லாத ஒன்று. இருந்தாலும் கஜகஸ்தான் அரசு உலக வங்கியின் உதவியோடு கோக் ஆரல் அணைத் திட்டத்தை செயல்படுத்தியது. இதன் மூலம் வடக்கு ஆரல் கடல் பகுதிக்கு வரும் சிர் தர்யா நதியின் நீர் சேமிக்கப்பட்டு அந்த பகுதியில் நீர்மட்டம் ஓரளவு உயர்ந்துள்ளது. இதனால் அங்கு மீன்பிடித் தொழில் மெதுவாக தொடங்கியுள்ளது. இருப்பினும் தெற்கு ஆடல் கடல் (உஸ்பெகிஸ்தான் பகுதி) மீட்டெடுக்க முடியாதபடி முற்றிலும் அழிந்துவிட்டது.
ஆரல் கடல் மனிதனுக்கு உணர்த்தும் பாடம்
ஆரல் கடலின் கதை இயற்கையின் சமநிலையை, மனிதன் தன் சுயநலத்திற்காக மாற்ற நினைத்தால் என்ன நடக்கும் என்பதை உலகிற்கு உணர்த்தும் ஒரு எச்சரிக்கை மணியாகும். தண்ணீரை திசை திருப்பினால் ஒரு கடலையே பாலைவனம் ஆக்க முடியும் என்கிற கசப்பான உண்மையை ஆரல் கடல் மனித குலத்திற்கு உணர்த்துகிறது. மனிதர்கள் கற்க வேண்டிய வரலாற்று சுவடாக ஆரல் கடல் மாறி நிற்கிறது.

