AI ரோபோ படையை களமிறக்கும் அமேசான்! 5 லட்சம் ஊழியர்களின் வேலை காலி!
உலகின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான், 5 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களுக்குப் பதிலாக ரோபோக்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக கசிந்த ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

5 லட்சம் ஊழியர்களுக்கு பதில் ரோபாக்கள்!
உலகின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான், வரவிருக்கும் ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களுக்குப் பதிலாக செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தையும் ரோபோக்களையும் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான நிறுவனத்தின் ரகசிய ஆவணங்கள் கசிந்துள்ளதாக நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது.
75% குடோன்கள் தானியங்கிமயமாகும்
அமேசான் நிறுவனத்தின் ரோபோட்டிக்ஸ் பிரிவின் ஆவணங்களின்படி, கிடங்குகளில் நடைபெறும் சுமார் 75 சதவிகிதம் செயல்பாடுகளை ரோபோக்களைக் கொண்டு, தானியங்கி முறைக்கு (Automation) மாற்ற அமேசான் திட்டமிட்டுள்ளது. இதனால், குடோன்கள் மனிதர்களைச் சார்ந்து இருப்பது கணிசமாகக் குறையும்.
தற்போது, அமேசான் நிறுவனத்தில் உலகளவில் சுமார் 12 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். ஆனால், தானியங்கிமயம் அதிகரிப்பதால், 2027-க்குள் அமெரிக்காவில் மட்டும் சுமார் 1.6 லட்சம் புதிய ஊழியர்கள் தேர்வு தவிர்க்கப்படும் என அமேசான் ஆவணங்களில் தெரியவந்துள்ளது.
ரோபோக்களைக் கொண்டு பணத்தைச் சேமிக்கும் அமேசான்
ரோபோக்களைப் பயன்படுத்துவதன் மூலம், அமேசான் ஒவ்வொரு பொருளையும் எடுப்பது, பேக்கிங் செய்வது, அனுப்புவது போன்றவற்றிற்கு சுமார் 30 சென்ட் (26 ரூபாய்) வரை சேமிக்க முடியும் என்று அமேசான் கணக்கிட்டுள்ளது.
2033-க்குள் விற்பனை அளவை இரட்டிப்பாக்க இலக்கு வைத்துள்ள அமேசான், அதே நேரத்தில் ரோபோட்டிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் மூலம் 6 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளைத் தவிர்ப்பதற்கும் இலக்கு வைத்துள்ளது.
இந்த அளவிற்குப் பணியாளர்களைக் குறைப்பதால், பொதுமக்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு வரலாம் என்பதையும் அமேசான் நிறுவனம் உணர்ந்துள்ளது. ஆனால், எதிர்ப்புகளை எதிர்கொள்ளவும் நிறுவனம் தயாராக இருக்கிறது என கசிந்துள்ள அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
எதிர்ப்புக்குத் தயாராகும் அமேசான்
பொதுமக்களின் எதிர்ப்பைக் குறைக்க, நிறுவனம் 'தானியங்கிமயம்' (Automation) என்ற வார்த்தைக்குப் பதிலாக "மேம்பட்ட தொழில்நுட்பம்" (Advanced Technology) என்ற வார்த்தையை பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இதேபோல, 'ரோபோக்கள்' (Robots) என்பதற்குப் பதிலாக "கோபோக்கள்" (Cobots) என்ற வார்த்தையைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது. முழுமையாக தனித்து இயங்காமல் மனிதர்களுடன் இணைந்து செயல்படும் ரோபோக்களுக்கு கோபோக்கள் எனப் பெயரிட்டுள்ளனர்.
சமூக நலத் திட்டங்களில் அதிக ஈடுபாடு காட்டுவதன் மூலம் அமேசானை சமூகப் பொறுப்புள்ள நல்ல பெருநிறுவனமாக முன்னிறுத்தவும் திட்டமிட்டுள்ளனர். இந்த வழியில் தொடர்ந்து பொதுமக்களின் ஆதரவைப் பெற அமேசான் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.