7.3 ரிக்டர் நிலநடுக்கம்: அலாஸ்காவை அச்சுறுத்திய மெகா சுனாமி மீண்டும் ஏற்படுமா?
அலாஸ்காவில் 7.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது 1958 லிதுயா விரிகுடா மெகா சுனாமியை நினைவூட்டுகிறது. அலாஸ்காவின் புவியியல் அமைப்பு மெகா சுனாமி மீண்டும் நிகழக்கூடிய அபாயத்தை சுட்டிக்காட்டுகின்றன.

அலாஸ்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
அலாஸ்காவின் அலூட்டியன் தீபகற்ப கடற்கரைக்கு அப்பால், சாண்ட் பாயிண்டின் தெற்கே நேற்று (ஜூலை 16) சக்திவாய்ந்த 7.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுமார் 700 மைல் நீளமுள்ள தெற்கு கடற்கரைப் பகுதிக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.
உள்ளூர் நேரப்படி நண்பகல் 12:37 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் மையம், சாண்ட் பாயிண்ட் என்ற சிறிய தீவுப்பகுதியில் இருந்து சுமார் 87 கி.மீ. தெற்கே, 20.1 கி.மீ. ஆழத்தில் பதிவாகியுள்ளது.
அலாஸ்காவில் சுனாமி அச்சம்
இந்த நிலநடுக்கம், 1958 இல் லிதுயா விரிகுடாவில் ஏற்பட்ட மெகா சுனாமியை நினைவூட்டியது. அப்போது ஒரு பெரிய நிலநடுக்கத்தை அடுத்து, 500 மீட்டருக்கும் அதிகமான உயரத்திற்கு ராட்சத அலைகள் எழுந்தன.
இப்போது ஏற்பட்டுள்ள சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அலாஸ்கா மற்றும் அலாஸ்கா தீபகற்பத்தின் தெற்குப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை அறிவிக்கப்பட்டிருக்கிறது. இருந்தாலும் ஒரு மெகா சுனாமி மீண்டும் ஏற்படக்கூடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அலாஸ்கா சுனாமி அபாயப் பகுதியாக இருப்பது ஏன்?
அலாஸ்கா நில அதிர்வுகள் மிகுந்த பசிபிக் நெருப்பு வளையப் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு பசிபிக் தட்டு வட அமெரிக்க தட்டுக்கு அடியில் செல்கிறது. இந்த அமைப்பு பெரும் நிலநடுக்கங்கள், சக்திவாய்ந்த நிலச்சரிவுகள் மற்றும் தொடர்ச்சியான எரிமலைச் செயல்பாடுகளுக்குக் காரணமாக உள்ளது. இவை அனைத்தும் சுனாமியை உருவாக்கும் முதன்மை காரணிகள்.
மேலும், அலாஸ்காவின் செங்குத்தான கடற்கரையும் சுனாமி அபாயத்தை அதிகரிக்கின்றன. கடலுக்கு அருகிலேயே நிலநடுக்கங்கள் அல்லது நிலச்சரிவுகள் ஏற்படும்போது, மக்கள் அங்கிருந்து வெளியேறிச் செல்ல சில நிமிடங்களே கிடைக்கும். 1964ஆம் ஆண்டின் பெரிய அலாஸ்கா நிலநடுக்கம் (9.2 ரிக்டர்), 1946 அலூட்டியன் நிலநடுக்கம், 1957ஆம் ஆண்டின் ஆண்ட்ரியனோஃப் தீவுகள் நிலநடுக்கம் ஆகியவை பசிபிக் பிராந்தியத்தில் சுனாமியின் தாக்கங்களை எடுத்துக்காட்டுகின்றன.
1958 லிதுயா விரிகுடா மெகா சுனாமி
1958ஆம் ஆண்டின் லிதுயா விரிகுடவில் ஏற்பட்டது, பதிவு செய்யப்பட்ட மிகவும் தீவிரமான மெகா சுனாமி ஆகும். 7.8-8.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம், சுமார் 30 மில்லியன் கன மீட்டர் அளவிலான பெரும் நிலச்சரிவுக்கு வழிவகுத்தது. இதனால் 524 மீட்டர் (1,720 அடி) உயரத்திற்கு மாபெரும் அலையை அனுப்பியது. அந்த அலை பல இடங்களில் ஒரு மைல் தொலைவுக்கு உள்ளே புகுந்து காடுகளையே அழித்தது.
தென்கிழக்கு மற்றும் தென்மத்திய அலாஸ்கா முழுவதும் இதே போன்ற பகுதிகள் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளன.
மெகா சுனாமி மீண்டும் நிகழக்கூடுமா?
நாசா எர்த் அப்சர்வேட்டரியின் படி, 1958 லிதுயா விரிகுடா மெகா சுனாமி போன்ற பேரழிவு மீண்டும் நிகழலாம். லிதுயா விரிகுடாவின் புவியியல் அமைப்பு காரணமாக அப்பகுதி சுனாமி அபாயத்தில் இருக்கிறது.
புவியியல் சான்றுகள் கடந்த காலத்தில் இதே போன்ற நிகழ்வுகள் நடந்துள்ளன என்பதைக் காட்டுகின்றன. மேலும் இத்தகைய நிகழ்வுகள் தோராயமாக ஒவ்வொரு 25 வருடங்களுக்கும் ஒருமுறை நிகழ்கின்றன என்று விஞ்ஞானிகள் மதிப்பிடுகின்றனர்.