30 வருஷமா இல்லாத ரகளை! போயிங் தொழிற்சாலை ஊழியர்கள் வேலைநிறுத்தம்!
போயிங் நிறுவனத்தின் 3,200 மெஷினிஸ்டுகள் திருத்தப்பட்ட ஒப்பந்தத்தை நிராகரித்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வேலைநிறுத்தம் நிறுவனத்தின் பாதுகாப்பு மற்றும் விண்வெளிப் பிரிவின் நிதி நெருக்கடியை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3,200 மெஷினிஸ்டுகள் ஸ்டிரைக்
அமெரிக்காவின் முன்னணி விமானத் தயாரிப்பு நிறுவனமான போயிங் நிறுவனத்தின் ஊழியர்கள் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தொழிற்சங்க உறுப்பினர்கள் போயிங் நிறுவனத்தின் திருத்தப்பட்ட ஒப்பந்தத்தை நிராகரித்ததைத் தொடர்ந்து வேலைநிறுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சுமார் 3,200 மெஷினிஸ்டுகள் திங்கட்கிழமை நள்ளிரவு முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஊதியத்தை 20% உயர்த்தியும், ஓய்வூதிய பங்களிப்புகளை அதிகரித்தும் அளிக்கப்பட்ட ஒப்பந்தத்தை ஊழியர்கள் நிராகரித்துள்ளனர்.
போயிங் ஊழியர்கள் வேலைநிறுத்தம்
இதற்கு முன்பு 1996-ல் நடைபெற்ற போயிங் ஊழியர்களின் வேலைநிறுத்தம் 99 நாட்கள் நீடித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த வேலைநிறுத்தம், போயிங் நிறுவனத்தின் பாதுகாப்பு மற்றும் விண்வெளிப் பிரிவின் நிதி நெருக்கடியை மேலும் அதிகரிக்கும். நிறுவனத்தின் வருவாயில் சுமார் 30% இந்தப் பிரிவில் இருந்து வருகிறது.
"நாங்கள் வேலைநிறுத்தத்திற்குத் தயாராக இருக்கிறோம். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்க, வேலைநிறுத்தம் செய்யாத ஊழியர்களை வைத்து அவசரத் திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளோம்" என்று போயிங் நிறுவனத்தின் துணைத் தலைவர் டான் கில்லியன் கூறியுள்ளார்.
F-15, T-7 பயிற்சி ஜெட், ஏவுகணைகள் மற்றும் வெடிபொருட்கள் போன்ற போர் விமானங்களை உருவாக்கும் ஊழியர்கள்தான் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். போயிங் நிறுவனத்தின் 777X வணிக ஜெட் விமானங்களுக்கான உதிரிபாகங்களையும் இவர்கள் தயாரிக்கின்றனர்.
மெக்கானிக்குகள் பற்றாக்குறை
சமீபகாலமாக, திறமையான மெக்கானிக்குகளின் பற்றாக்குறை காரணமாக, விமானத் தயாரிப்பு நிறுவனங்களில் தொழிற்சங்கங்கள் அதிக செல்வாக்கு செலுத்தி வருகின்றன. இந்த ஆண்டு, பிராட் & விட்னி நிறுவனத்திலும் மூன்று வாரங்களுக்கு வேலைநிறுத்தம் நடைபெற்றது. இது ஏர்பஸ் நிறுவனத்தில் என்ஜின்களின் பற்றாக்குறைக்கு வழிவகுத்தது.
கடந்த 2024-இன் பிற்பகுதியில், போயிங் நிறுவனத்தின் வணிகத் தொழிற்சாலைகள் இரண்டு மாதங்கள் வேலைநிறுத்தத்தால் மூடப்பட்டன.
அப்போது போயிங் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கெல்லி ஆர்ட்பெர்க், "இந்த வேலைநிறுத்தத்தின் விளைவுகளைப் பற்றி அதிகம் கவலைப்பட வேண்டாம். நாங்கள் அதைச் சமாளிப்போம்" என்றும் கூறினார்.
புதிய ஒப்பந்தத்தில் ஊதிய உயர்வு
தற்போதைய வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களின் கவலைகளைப் நிவர்த்தி செய்ய, போயிங் புதிய ஒப்பந்தத்தை உருவாக்கி இருப்பதாக ஜூலை 31ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி, IAM 837 ஊழியர்களின் சராசரி ஊதியம் இந்திய மதிப்பில் ரூ. 62,50,000-லிருந்து ரூ. 85,15,000 ஆக அதிகரிக்கும் என்று போயிங் கூறியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமைக்குள் இந்த ஒப்பந்தத்தை ஏற்கவில்லை என்றால் ரூ. 4,16,000 போனஸ் தொகை திரும்பப் பெறப்படும் என்றும், அது மீண்டும் வழங்கப்படாது என்றும் போயிங் எச்சரித்தது.