போலி தங்கத்தை அடகு வைத்து மோசடி... சின்னத்திரை நடிகை கைது - வசமாக சிக்க வைத்த வாட்ஸ் அப் குரூப்
போலி தங்கத்தால் ஆன தாலி செயினை அடமானம் வைத்து மோசடியில் ஈடுபட்டு வந்த சின்னத்திரை நடிகை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை கீழ்பாக்கம் ஏகே நகரை சேர்ந்தவர் மகாலட்சுமி 33 வயதாகும் இவர் சென்னை பெரம்பூரில் உள்ள கண்ணய்யா லால் ஜெயின் என்பவரின் அடகு கடையில் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி தாலி செயின் ஒன்றை அடகு வைத்துள்ளார். மருத்துவ தேவைக்காக அவசரமாக பணம் தேவைப்படுவதாக கூறி தாலி செயலை அடகு வைத்துள்ளார்.
மகாலட்சுமி
அப்போது அவர் அந்த நகைக்கு 40 ஆயிரம் ரூபாய் வேண்டும் என கேட்டுள்ளார். ஆனால் ஜெயின், அவர் ஆதார் கார்டை எடுத்து வராததால் தற்போது 20 ஆயிரம் தான் தர முடியும், நாளை ஆதார் கார்டை கொடுத்துவிட்டு எஞ்சியுள்ள பணத்தை வாங்கிக் கொள்ளுமாறு கூறியுள்ளார். மகாலட்சுமியும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். அது தாலி செயின் என்பதால் உரசி பார்க்க வேண்டாம் என மகாலட்சுமி சென்டிமென்டாக பேசியதால் அதனை உரசி பார்க்காமலேயே வாங்கியுள்ளார் ஜெயின்.
மறுநாள் மகாலட்சுமி ஆதார் கார்டை கொண்டு வராததால் சந்தேகம் அடைந்த ஜெயின் தாலியை உரசிப் பார்த்துள்ளார் அப்போது அது போலி தங்கம் என கண்டுபிடித்த அவர் போலீசில் புகார் அளித்ததோடு, அடகு கடை நடத்தி வரும் தன்னுடைய நண்பர்களுக்கும் வாட்ஸ் அப்பில் இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார். அப்போது அரும்பாக்கத்தில் அடகு கடை நடத்தி வரும் சுரேந்தர் குமார் என்பவரும் தன்னுடைய கடையில் இதேபோன்று ஒரு வாரத்திற்கு முன் பெண் ஒருவர் மோசடி செய்ததாக கூறியுள்ளார்.
இதையடுத்து சுரேந்தரும் இதுகுறித்து அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர் சிசிடிவி காட்சிகளை வைத்து மகாலட்சுமியை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் இதே போல் திருவிக நகர், செம்பியம் உள்ளிட்ட பகுதிகளில் இதேபோன்று போலி நகைகளை அடமானம் வைத்து மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.
இதையும் படியுங்கள்... இந்த வாரம் இத்தனை படங்கள் ரிலீஸா! மார்ச் 3-ந் தேதி தியேட்டர் மற்றும் ஓடிடியில் ரிலீசாகும் படங்களின் லிஸ்ட் இதோ
பின்னர் அவரிடம் இருந்து 2500 ரூபாய் பணம், பைக் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன 14 வருடத்திற்கு முன் திருமணம் முடிந்ததும் கணவர் பிரிந்து சென்றதால் மகனை தனியாக வளர்த்து வருவதாகவும் காசு இல்லாமல் கஷ்டப்படுவதால் இதுபோன்று செய்ததாகவும் கூறியுள்ளார்.
மகாலட்சுமி சின்னத்திரை தொடர்களிலும் விளம்பரங்களிலும் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மகாலட்சுமி மகனின் படிப்புக்காக இப்படி மோசடி செய்ததாக ஒப்புக்கொண்டதை அடுத்து அவரை நீதிபதி எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
இதையும் படியுங்கள்... விஷாலின் மார்க் ஆண்டனி பட ஷூட்டிங்கில் மீண்டும் விபத்து... ஒருவர் காயம் - மருத்துவமனையில் அனுமதி