- Home
- Cinema
- தொலைக்காட்சி
- Pandian Stores 2 Today Episode: அண்ணன்களால் அவமானப்பட்ட கோமதி; சரவணனிடம் சிக்கிய மயில்!
Pandian Stores 2 Today Episode: அண்ணன்களால் அவமானப்பட்ட கோமதி; சரவணனிடம் சிக்கிய மயில்!
'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' தொடரின் இன்றைய எபிசோடில், சரவணன் தன்னைத் தேடி வந்த தங்கமயிலை ஆவேசத்துடன் விரட்டுகிறார். மறுபுறம், பிறந்த வீட்டிற்கு விருந்துக்கு அழைக்கச் சென்ற கோமதி, தன் அண்ணன்களால் அவமானப்படுத்தப்பட்டு கண்ணீருடன் வெளியேற்றப்படுகிறார்.

அப்பாடி, விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை.!
விஜய் தொலைக்காட்சியின் முன்னணித் தொடரான 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. பொய்களைச் சொல்லி சரவணனைத் திருமணம் செய்த தங்கமயில் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட நிலையில், குடும்பத்தில் ஏற்பட்ட விரிசல்கள் இன்னும் குறைந்தபாடில்லை. ஒருபுறம் சரவணனின் ஆவேசமும், மறுபுறம் தனது பிறந்த வீட்டிற்குச் சென்ற கோமதிக்குக் கிடைத்த எதிர்பாராத அவமானமும் இன்றைய எபிசோடின் (S2 E695) மையக்கருவாக அமைந்தது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் புயல் ஓய்ந்தபாடில்லை. பொய்களைக் கூறி சரவணனை மணந்த தங்கமயிலின் உண்மை முகம் தெரிந்த பிறகு, அந்தக் குடும்பத்தின் நிம்மதியே பறிபோயுள்ளது. ஒருபுறம் மருமகளின் துரோகம், மறுபுறம் தன் பிறந்த வீட்டுச் சொந்தங்களின் பகை எனப் பலமுனைப் போராட்டங்களைச் சந்தித்து வரும் கோமதியின் வாழ்வியலை இன்றைய எபிசோட் மிக உணர்ச்சிகரமாகப் படம்பிடித்துக் காட்டியது.
கடைவீதியில் நேருக்கு நேர்: சரவணனின் ஆவேசம்
எபிசோட் துவக்கத்தில், சரவணன் தனது கடையில் வேலையில் மும்முரமாக இருக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக "மாமா" என்ற குரல் ஒலிக்கிறது. திரும்பிப் பார்க்கும் சரவணனுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது; அங்கே தங்கமயில் அழுதுகொண்டே நிற்கிறார். ஏற்கனவே தன் குடும்ப மானம் போனதற்கும், தந்தை பாண்டியனின் கோபத்திற்கும் தங்கமயிலே காரணம் என்று ஆத்திரத்தில் இருக்கும் சரவணன், அவரைக் கண்டதும் நிலைகுலைகிறார்.
"எந்த முகத்தை வைத்துக்கொண்டு இங்கே வந்தாய்?
"எந்த முகத்தை வைத்துக்கொண்டு இங்கே வந்தாய்? நல்லா இருந்த என் குடும்பத்தைச் சிதைத்துவிட்டு இப்போது எதற்காக இங்கே வந்து நிற்கிறாய்?" என்று ஆவேசத்துடன் சரவணன் கத்துகிறார். தான் சரவணனைப் பார்க்க வேண்டும் என்பதற்காக வந்ததாக மயில் கெஞ்சியும், சரவணன் அதை ஏற்கத் தயாராக இல்லை. இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற சரவணன் மயிலை அடிக்கப் பாய்கிறார்.
பாண்டியனின் தலையீடும் கறாரான எச்சரிக்கையும்.!
அந்த நேரத்தில் அங்கு வரும் பாண்டியன், சரவணனைத் தடுத்து நிறுத்துகிறார். தன் மகனை அமைதிப்படுத்திய பாண்டியன், தங்கமயிலை நோக்கி மிகத் தெளிவான ஒரு செய்தியைக் கூறுகிறார். "நமக்கு இடையே இருந்த உறவு முடிந்துவிட்டது. இனி எதைச் செய்தாலும் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி சட்டப்படிப் பார்த்துக்கொள்ளலாம்" என்று கறாராகக் கூறுகிறார்.
தனது உடமைகளை ஏன் வீட்டுக்கே திருப்பி அனுப்பினீர்கள் என்று மயில் கேள்வி எழுப்ப, அதற்குப் பாண்டியன் மிகவும் கண்ணியமாகவும் அதே சமயம் உறுதியாகவும் பதிலளிக்கிறார். "ஒரு பெண் பிள்ளையிடம் மரியாதை குறைவாக நடக்கக் கூடாது என்று நான் நினைக்கிறேன். அதற்கு மேல் என்னைப் பேச வைக்காதே, உடனே இங்கிருந்து கிளம்பு" என்று உத்தரவிடுகிறார். மயில் எவ்வளவோ மன்னிப்புக் கேட்டும், பாண்டியன் இளகவில்லை. இறுதியில் ஒரு ஆட்டோவில் ஏற்றி அவரை அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்.
பிறந்த வீட்டில் கோமதிக்குக் காத்திருந்த கசப்பான அனுபவம்
இன்னொரு புறம், கோமதி தனது அண்ணன் முத்துவேல் வீட்டிற்குச் செல்கிறார். அவருடன் ராஜியும் உடன் செல்கிறார். கோமதியைப் பார்த்ததும் அவரது தாய் பாசத்தோடு ஓடி வந்து வரவேற்கிறார். அண்ணிகளும் அன்போடு நலம் விசாரிக்கின்றனர். ஆனால், அண்ணன்கள் முத்துவேலும் சக்திவேலும் மட்டும் எவ்வித உணர்ச்சியும் காட்டாமல் டைனிங் டேபிளில் அமர்ந்திருக்கின்றனர்.
விருந்துக்கு அழைத்த கோமதி.!
தன் குடும்பப் பிரச்சினையின்போது ஆதரவாக நின்ற அண்ணன்களுக்கு, கைப்படச் சமைத்து ஒருவேளை உணவு பரிமாற வேண்டும் என்பது கோமதியின் பெரும் ஆசையாக இருந்தது. இந்தப் பாசப் போராட்டத்தைத் தனது அண்ணன் பழனியிடம் கோரிக்கையாக வைக்கிறார் கோமதி. பழனி அதற்குச் சம்மதம் தெரிவித்தாலும், முத்துவேல் மற்றும் சக்திவேலின் மௌனம் ஒரு பெரிய வெடிப்பிற்குக் காத்திருந்தது.
வெளியேற்றப்பட்ட கோமதி: உடைந்த பாசப் பிணைப்பு
கோமதியும் ராஜியும் சாப்பிட வருமாறு பலமுறை அழைத்தபோது, அதுவரை அமைதியாக இருந்த சக்திவேல் எரிமலையாக வெடிக்கிறார். "முன்பு நடந்த கசப்பான சம்பவங்கள் இன்னும் என் மனதில் நெருப்பாக எரிந்து கொண்டிருக்கிறது. எங்களை விருந்துக்கு அழைக்கும் உரிமையை நீ இழந்துவிட்டாய்" என்று கடுமையாகச் சாடுகிறார்.
நிலைமையைச் சீர்செய்ய கோமதியின் தாய் முயற்சி செய்தபோதும், முத்துவேல் குறுக்கிட்டு சக்திவேலுக்கு ஆதரவாகப் பேசுகிறார். உச்சகட்டமாக, "கோமதியை இந்த வீட்டை விட்டு வெளியே போகச் சொல்லு" என்று முத்துவேல் கூறிய வார்த்தை அங்கிருந்த அனைவரையும் உரையச் செய்தது. தன் பிறந்த வீட்டிலும், உடன் பிறந்தவர்களிடமும் தனக்கு இடமில்லை என்பதை உணர்ந்த கோமதி, "இங்கு நம்பிக்கையோடு வந்தது எனது தவறுதான்" என்று கூறி கண்ணீர் மல்க அந்த வீட்டை விட்டு வெளியேறுகிறார்.
அடுத்த வாரம் செம்மையா இருக்கும்.!
இன்றைய எபிசோட், உறவுகளுக்குள் ஏற்படும் விரிசல்களை மிகத் தத்ரூபமாகக் காட்டியது. துரோகம் செய்த ஒரு பெண்ணை மன்னிக்க முடியாத சரவணனின் கோபமும், குடும்ப கௌரவத்திற்காகத் தன் தங்கையையே வீட்டை விட்டு வெளியேற்றும் அண்ணன்களின் பிடிவாதமும் நேயர்களைக் கலங்கச் செய்தது. இனி வரும் நாட்களில், கோமதி இந்த அவமானத்தில் இருந்து எப்படி மீளப் போகிறார் என்பதும், சரவணன் - தங்கமயில் உறவின் நிலை என்ன என்பதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

