பெங்களூரு, ஹைதராபாத் கூகுள்அலுவலகங்களில் மறுசீரமைப்பு? ஊழியர்கள் கலக்கம்!
உலகளாவிய பணிநீக்கங்களைத் தொடர்ந்து பெங்களூரு மற்றும் ஹைதராபாத் கூகுள்அலுவலகங்களில் பணி மாற்றங்கள் மற்றும் மறுசீரமைப்பு ஏற்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சந்தைப்படுத்தல், விற்பனை மற்றும் விளம்பரக் குழுக்கள் பாதிக்கப்படக்கூடும்.

கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான Alphabet, உலக அளவில் மேற்கொண்ட பணிநீக்க நடவடிக்கைகளின் எதிரொலியாக, பெங்களூரு மற்றும் ஹைதராபாத்தில் உள்ள கூகுள்அலுவலகங்களில் பெரிய அளவிலான மாற்றங்களைச் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மறுசீரமைப்பு நடவடிக்கையானது, செயல்பாடுகளையும் வளங்களையும் சீரமைக்கும் நோக்கத்தில் மேற்கொள்ளப்படுவதாகவும், இதன் காரணமாக சந்தைப்படுத்தல் (Marketing), விற்பனை (Sales) மற்றும் விளம்பர (Advertising) பிரிவுகளில் பணிபுரியும் ஊழியர்கள் பாதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
பிசினஸ் ஸ்டாண்டர்ட் ஊடகத்தின் தகவலின்படி, உலகளாவிய தகவல் தொழில்நுட்ப ஊழியர்களின் மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக இந்தியாவில் இந்த மாற்றங்கள் நிகழவுள்ளன. இதற்கிடையில், தி இன்ஃபர்மேஷன் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், குரோம் உலாவி (Chrome browser), ஆண்ட்ராய்டு (Android) மற்றும் பிக்சல் சாதனைகள் (Pixel devices) போன்ற முக்கிய தயாரிப்புகளை நிர்வகிக்கும் பிளாட்ஃபார்ம்ஸ் மற்றும் டிவைசஸ் (Platforms and Devices) பிரிவில் இருந்து நூற்றுக்கணக்கான ஊழியர்கள் ஏற்கனவே பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதன் தாக்கம் விரைவில் இந்தியாவிலும் எதிரொலிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. குறிப்பாக ஹைதராபாத் மற்றும் பெங்களூரு அலுவலகங்களில் அடுத்த மாதம் முதல் சந்தைப்படுத்தல், விற்பனை மற்றும் விளம்பரப் பிரிவுகளில் பணிநீக்கங்கள் தொடங்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், கூகுள்நிறுவனத்தின் உள் திட்டங்களை நன்கு அறிந்த வட்டாரங்கள் பிசினஸ் ஸ்டாண்டர்ட் ஊடகத்திடம் கூறுகையில், "இந்தியாவில் பெரும்பாலான ஊழியர்களின் வேலைகள் பாதுகாப்பாகவே இருக்கும். அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இங்கிலாந்து போன்ற பிராந்தியங்களில்தான் அதிகப்படியான பணிநீக்கங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு பல பிரிவுகளில் தற்போது அதிகப்படியான ஊழியர்கள் உள்ளனர்" என்று தெரிவித்துள்ளனர்.
நடந்து கொண்டிருக்கும் இந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் காரணமாக, பாதிக்கப்பட்ட பிரிவுகளில் பணிபுரியும் இந்திய ஊழியர்கள் அடுத்த சில வாரங்களில் நிச்சயமற்ற நிலையை எதிர்கொள்ள நேரிடலாம். முன்னதாக, செயல்பாடுகளை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, கூகுள்நிறுவனம் இதே பிளாட்ஃபார்ம்ஸ் மற்றும் டிவைசஸ் பிரிவில் ஜனவரி 2025 இல் விருப்ப ஓய்வு திட்டத்தை ஊழியர்களுக்கு வழங்கியது. அதனைத் தொடர்ந்து தற்போது இந்த கட்டாய பணிநீக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
கூகுள்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் இந்த நடவடிக்கையை உறுதிப்படுத்தியுள்ளார். பிளாட்ஃபார்ம்ஸ் மற்றும் டிவைசஸ் குழுக்களை ஒன்றிணைத்ததில் இருந்து செயல்திறனை அதிகரிக்க நிறுவனம் முயன்று வருவதாகவும், இதன் ஒரு பகுதியாகவே விருப்ப மற்றும் கட்டாய பணிநீக்கங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கூகுள்நிறுவனம் தனது உலகளாவிய பணியாளர்களில் சுமார் 6 சதவீதம் பேரை, அதாவது 12,000 க்கும் மேற்பட்டோரை பணிநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய பணிநீக்க நடவடிக்கையானது, முக்கிய தயாரிப்புக் குழுக்களுக்கு முன்னுரிமை அளித்து வளங்களை மேம்படுத்தும் முந்தைய அணுகுமுறையின் தொடர்ச்சியாகவே பார்க்கப்படுகிறது. பெங்களூரு மற்றும் ஹைதராபாத் அலுவலகங்களில் இந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகள் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஊழியர்கள் மத்தியில் இது ஒருவித கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதில் சந்தேகமில்லை.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.