ஐயோ! உங்கள் போன் தண்ணீரில் விழுந்துவிட்டதா? கவலை வேண்டாம்.. இந்த 5 வழிகள் போதும்!
உங்கள் போன் தண்ணீரில் விழுந்துவிட்டால் கவலை வேண்டாம்! நிரந்தர சேதத்திலிருந்து காப்பாற்ற, வீட்டில் இருந்தபடியே செய்யக்கூடிய 5 எளிய வழிகள் இங்கே.

உங்கள் போன் தண்ணீரில் விழுந்துவிட்டதா? உடனடியாக காப்பாற்ற 5 எளிய வழிகள்!
மழையிலோ அல்லது குளம், குட்டையிலோ எதிர்பாராத விதமாக உங்கள் ஸ்மார்ட்போன் விழுந்துவிட்டால், அது முழுவதுமாகப் பழுதாகிவிடும் என்ற பயம் ஏற்படுவது இயல்பு. ஆனால், பதட்டப்பட வேண்டாம். சரியான சமயத்தில், சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றினால், உங்கள் மொபைலை நிரந்தர சேதத்திலிருந்து காப்பாற்றலாம்.
உடனடியாக போனை அணைக்கவும்
உங்கள் போன் தண்ணீரில் விழுந்தவுடன் செய்ய வேண்டிய முதல் முக்கியமான காரியம், அதை உடனடியாக அணைப்பதுதான். போன் ஈரமாக இருக்கும்போது, ஆன் செய்தாலோ அல்லது எந்த பட்டனையும் அழுத்தினால், அது போனின் உள்ளே ஷார்ட் சர்க்யூட்டை ஏற்படுத்தி, போனை முழுமையாகப் பழுதடையச் செய்யலாம். எனவே, போனை அணைப்பதுதான் முதல் பாதுகாப்பு.
போனைத் துடைத்து அக்சஸரீஸ்களை நீக்குங்கள்
போனை அணைத்தவுடன், ஒரு மென்மையான துணி அல்லது டிஷ்யூ பேப்பர் கொண்டு, போனின் வெளிப்பகுதியில் உள்ள நீரை முழுவதுமாகத் துடைக்கவும். அடுத்து, சிம் கார்டு, மெமரி கார்டு, பேக் கவர், ஸ்க்ரீன் கார்டு போன்ற அனைத்து அக்சஸரீஸ்களையும் நீக்கிவிடுங்கள். இது, போனுக்குள் இருக்கும் நீர் விரைவாக வெளியேற உதவும்.
ஹேர் டிரையர் அல்லது வெப்பக் கருவிகளை பயன்படுத்த வேண்டாம்
போனை உலர்த்த ஹேர் டிரையர் பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானது. நேரடி வெப்பம், போனின் உள்ளே இருக்கும் நுட்பமான சர்க்யூட்டுகள் மற்றும் பேட்டரி செல்களை சேதப்படுத்தக்கூடும். அதற்குப் பதிலாக, போனை காற்றோட்டமான இடத்தில் வைப்பது அல்லது ஃபேனின் கீழ் வைத்து உலர்த்துவது பாதுகாப்பானது. போனை நீண்ட நேரம் சூரிய ஒளியில் வைப்பதையும் தவிர்க்க வேண்டும்.
பழைய அரிசி பையில் போடும் ட்ரிக் அல்லது சிலிக்கா பாக்கெட்கள்
இது பழைய முறை என்றாலும், போனை ஒரு அரிசிப் பையில் வைப்பது இன்றும் சிறப்பாக வேலை செய்யும். அரிசிக்கு ஈரப்பதத்தை உறிஞ்சும் திறன் அதிகம். உங்கள் போனை அரிசி நிறைந்த ஒரு காற்று புகாத பையில் 24 முதல் 36 மணி நேரம் வரை வைக்க வேண்டும். அரிசியை விடவும் சிறந்தது சிலிக்கா ஜெல் பாக்கெட்டுகள் (பொதுவாகப் புதிய பொருட்களில் காணப்படும் சிறிய பாக்கெட்கள்). இவை ஈரப்பதத்தை மிக வேகமாக உறிஞ்சும் திறன் கொண்டவை.
போனை ஆன் செய்வதற்கு முன் பொறுமையாக இருங்கள்
அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றிய பிறகு, போன் காய்ந்துவிட்டதாகத் தோன்றினாலும், அதை உடனடியாக ஆன் செய்ய வேண்டாம். குறைந்தபட்சம் 24 மணி நேரமாவது காத்திருப்பது நல்லது. ஒரு நாள் கழித்து ஆன் செய்தும், போன் வேலை செய்யவில்லை என்றால், சில மணி நேரங்களுக்குப் பிறகு சார்ஜ் போட்டுப் பார்க்கலாம். இந்த முறைகளுக்குப் பிறகும் போன் வேலை செய்யவில்லை என்றால், அங்கீகரிக்கப்பட்ட சேவை மையத்திற்கு எடுத்துச் செல்வதே சிறந்த வழி.
மழைக்காலம்
மழைக்காலம் முடிந்துவிட்டாலும், எதிர்பாராமல் வரக்கூடிய மழை மற்றும் ஈரப்பதத்திலிருந்து உங்கள் போனைப் பாதுகாக்க, ஒரு நீர் புகாத பவுச் (waterproof pouch) அல்லது கேஸைப் பயன்படுத்துவது எப்போதும் சிறந்தது. "வருமுன் காப்பதே சிறந்தது" என்ற பழமொழிக்கேற்ப, முன்னெச்சரிக்கையாக இருப்பது பழுதுபார்ப்பதை விட சிறந்தது.