- Home
- டெக்னாலஜி
- சிம் கார்டை கழட்டினா அவ்ளோதான்.. டெலிகிராம், வாட்ஸ்அப் கட்! மத்திய அரசின் அதிரடி உத்தரவு - உஷார்!
சிம் கார்டை கழட்டினா அவ்ளோதான்.. டெலிகிராம், வாட்ஸ்அப் கட்! மத்திய அரசின் அதிரடி உத்தரவு - உஷார்!
WhatsApp சைபர் மோசடிகளைத் தடுக்க மத்திய அரசு புதிய உத்தரவு! வாட்ஸ்அப் பயன்படுத்த இனி போனில் சிம் கார்டு கட்டாயம். வாட்ஸ்அப் வெப் 6 மணி நேரத்திற்கு ஒருமுறை லாக்-அவுட் ஆகும். முழு விவரம் உள்ளே.

மத்திய அரசின் அதிரடி உத்தரவு!
காலையில் எழுந்ததும் பல் துலக்குகிறோமோ இல்லையோ, வாட்ஸ்அப் (WhatsApp) ஸ்டேட்டஸ் பார்ப்பதுதான் பலரின் முதல் வேலையாக இருக்கிறது. அலுவலகம் சென்றால் கணினியில் 'வாட்ஸ்அப் வெப்' (WhatsApp Web) ஓயாமல் வேலை செய்யும். இப்படி நம் வாழ்க்கையோடு இரண்டறக் கலந்துவிட்ட மெசேஜிங் ஆப்களுக்கு, மத்திய அரசு இப்போது ஒரு பெரிய 'செக்' வைத்துள்ளது.
சைபர் குற்றங்களைத் தடுப்பதற்காக, மத்திய தொலைத்தொடர்புத் துறை (DoT) பிறப்பித்துள்ள புதிய உத்தரவுகள், சாதாரண பயனர்களின் அன்றாட பயன்பாட்டில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறது.
1. சிம் கார்டு இல்லனா ஆப் வேலை செய்யாது!
இதுவரை, ஒருமுறை ஓடிபி (OTP) கொடுத்து வாட்ஸ்அப் அல்லது டெலிகிராமை ஆக்டிவேட் செய்துவிட்டால் போதும். அதன் பிறகு அந்த சிம் கார்டை போனிலிருந்து கழற்றிவிட்டாலும், வைஃபை (WiFi) உதவியுடன் வாட்ஸ்அப்பைத் தொடர்ந்து பயன்படுத்த முடியும். ஆனால், இனி அந்த ஆட்டம் செல்லாது!
• புதிய விதி என்ன? உங்கள் போனில் எந்த நம்பரில் வாட்ஸ்அப் அல்லது டெலிகிராம் இருக்கிறதோ, அந்த சிம் கார்டு கண்டிப்பாக அந்த போனிலேயே இருக்க வேண்டும்.
• காரணம்: மோசடி செய்பவர்கள் இந்திய சிம் கார்டுகளைப் பயன்படுத்தி ஆப்-களை ஆக்டிவேட் செய்துவிட்டு, பிறகு வெளிநாடுகளில் இருந்து கொண்டு வைஃபை மூலம் அந்த எண்களை மோசடிக்குப் பயன்படுத்துகிறார்கள். இதைத் தடுக்கவே, "சிம் கார்டு உள்ளே இருந்தால் மட்டுமே ஆப் வேலை செய்யும்" என்ற தொடர் இணைப்பு (Continuous Linkage) முறையைக் கொண்டு வருகிறது அரசு.
2. 6 மணி நேரத்திற்கு ஒருமுறை 'லாக்-அவுட்'
அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு இது கொஞ்சம் எரிச்சலூட்டும் செய்திதான். வழக்கமாக நாம் கணினியில் ஒருமுறை வாட்ஸ்அப் வெப் லாகின் செய்தால், நாம் லாக்-அவுட் செய்யும் வரை அது அப்படியே இருக்கும். நாட்கள் கணக்கில் கூட இருக்கும்.
• புதிய விதி: இனி, வாட்ஸ்அப் வெப் அல்லது டெலிகிராம் வெப் பயன்படுத்தும் பயனர்கள், ஒவ்வொரு 6 மணி நேரத்திற்கும் தானாகவே லாக்-அவுட் செய்யப்படுவார்கள்.
• என்ன செய்ய வேண்டும்? மீண்டும் பயன்படுத்த, கியூஆர் கோடு (QR Code) ஸ்கேன் செய்து உள்நுழைய வேண்டும்.
எந்தெந்த செயலிகளுக்கு இது பொருந்தும்?
வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் மட்டுமல்லாமல், சிக்னல் (Signal), ஸ்னாப்சாட் (Snapchat), ஜியோசாட் (JioChat), ஷேர்சாட் (ShareChat) என இந்தியாவில் இயங்கும் அனைத்து ஆப்-சார்ந்த தகவல் தொடர்பு சேவைகளுக்கும் இது பொருந்தும்.
எப்போது அமலுக்கு வருகிறது?
இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்தாலும், தொழில்நுட்ப ரீதியாக மாற்றங்களைச் செய்ய நிறுவனங்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
• 90 நாட்கள்: சிம் கார்டு இணைப்பு மற்றும் 6 மணி நேர லாக்-அவுட் வசதியை நடைமுறைப்படுத்த 90 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
• 120 நாட்கள்: புதிய விதிகளுக்கு இணங்கியது தொடர்பான அறிக்கையைச் சமர்ப்பிக்க நிறுவனங்களுக்கு 120 நாட்கள் கெடு விதிக்கப்பட்டுள்ளது.
லாக்-அவுட்
அடிக்கடி லாக்-அவுட் ஆவது மற்றும் சிம் கார்டு கட்டாயம் என்பது பயனர்களுக்குச் சற்று சிரமமாகத் தோன்றலாம். ஆனால், அதிகரித்து வரும் ஆன்லைன் மோசடிகள் மற்றும் தேசப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, இது ஒரு அவசியமான நடவடிக்கை என்றே தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறுகின்றனர்.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

