அப்பாடா!.. வாட்ஸ்அப் பயனர்களுக்கு நிம்மதி.. மெட்டா சொன்ன குட் நியூஸ்!
வாட்ஸ்அப் பயனர்கள் உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கில் உள்ளனர். அடிக்கடி அப்டேட்களை வெளியிட்டு வரும் மெட்டா நிறுவனம், தற்போது மிக முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார்கள்.

வாட்ஸ்அப் புதிய விதி
வாட்ஸ்அப் பயனர்கள் நீண்ட நாட்களாக எதிர்கொண்டு வரும் பிரச்சனையாக ஸ்பேம் மெசேஜ்கள் உள்ளன. எவ்வளவு பிளாக் செய்தாலும், புறக்கணித்தாலும் அவை தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். இதை கட்டுப்படுத்த வாட்ஸ்அப்பின் தாய் நிறுவனம் தற்போது புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது. இனிமேல் பதிலளிக்காத வாட்ஸ்அப் கணக்குகளுக்கு அனுப்பப்படும் மெசேஜ்களுக்கு வரம்பு விதிக்கப்பட உள்ளது. அதாவது, ஒரு பிசினஸ் கணக்கில் இருந்து ஒரே நபருக்கு தொடர்ந்து மெசேஜ் அனுப்பி பதில் வரவில்லை என்றால், ஒரு குறிப்பிட்ட அளவுக்கு பின் அந்த மெசேஜ் அனுப்புதல் தானாகவே நிறுத்தப்படும்.
மெட்டாவின் புதிய கொள்கை மாற்றம்
வாட்ஸ்அப்பின் சாதாரண பயனர்கள் மற்றும் பிசினஸ் கணக்குகளுக்கு இது ஒரு முக்கியமான கொள்கை மாற்றமாகும். கடந்த சில ஆண்டுகளில் வாட்ஸ்அப்பில் அதிகரித்த ஸ்பெம் மற்றும் மொத்தமாக மெசேஜ் அனுப்பும் நடைமுறையை குறைப்பதே இதன் நோக்கம். இந்த புதிய விதி வரும் வாரங்களில் பல நாடுகளில் அமல்படுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பதிலளிக்காத எண்ணுக்கு அனுப்பப்படும் ஒவ்வொரு மெசேஜும் அனுப்புநரின் மாதாந்திர ஒதுக்கீட்டில் சேர்க்கப்படும் என்றும் மெட்டா கூறினார். ஆனால், ஒரு மாதத்தில் அனுமதிக்கப்படும் மெசேஜ்களின் சரியான எண்ணிக்கை இதுவரை வெளிவரவில்லை.
எந்த பயனர்கள் பாதிக்கப்படுவர்?
தொடர்ந்து தேவையற்ற அல்லது மறுபடியும் மறுபடியும் மெசேஜ் அனுப்பும் பிசினஸ் கணக்குகள் மற்றும் சில தனிநபர்களுக்கு இந்த முடிவு பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஆனால், நண்பர்கள், குடும்பத்தினர், தனிப்பட்ட தொடர்புகளுக்கு இடையிடையே மெசேஜ் அனுப்புவது இந்தக் கட்டுப்பாட்டுக்குள் வராது என்ற மெட்டா விளக்கியுள்ளது. இதன் மூலம் ஸ்பெம் அனுப்பும் நபர்கள் தானாகவே கட்டுப்படுத்தப்படுவர் என்பது எதிர்பார்ப்பு ஆகும்.
வாட்ஸ்அப் ஸ்பேம்
உலகளவில் மூன்று பில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட வாட்ஸ்அப் தளத்தில் ஸ்பேம் கட்டுப்பாடு மெட்டாவுக்கு எளிதானது அல்ல. மார்க்கெட்டிங், அரசியல் பிரச்சாரங்கள், மோசடிகள் ஆகியவற்றில் வாட்ஸ்அப் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. இதை தடுக்க ‘ஃபார்வேர்டு’ எச்சரிக்கை, புகார் கருவி போன்றவற்றை அறிமுகப்படுத்தியும், முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. இப்போது, தொலைபேசி எண்களை வெளிப்படுத்தாமல் யூசர்நேம் மூலம் தொடர்பு கொள்ளும் புதிய அம்சங்களையும் மெட்டா உருவாக்கி வருகிறது. ஆனால் இது மீண்டும் ஸ்பேம் மெசேஜ்களுக்கு புதிய வழியாக மாறுமோ என்ற கவலையும் எழுந்துள்ளது.