- Home
- டெக்னாலஜி
- ஆன்மீக நம்பிக்கையா? அறிவியல் ஆதாரமா? இயேசுவின் புனித உடற்போர்வையில் டி.என்.ஏ கண்டுபிடிப்பு!
ஆன்மீக நம்பிக்கையா? அறிவியல் ஆதாரமா? இயேசுவின் புனித உடற்போர்வையில் டி.என்.ஏ கண்டுபிடிப்பு!
புனித உடற்போர்வையில் உள்ள டி.என்.ஏ பல நூற்றாண்டுகால ரகசியங்களை வெளிப்படுத்துகிறது! மனிதர்கள், தாவரங்கள் மற்றும் பவளப்பாறைகளின் மரபணுத் தடயங்கள் பற்றிய புதிய அறிவியல் ஆய்வை பற்றி விரிவாக பார்போம்.

வரலாற்று மர்மங்கள் டி.என்.ஏ ஆராய்ச்சி
உலகின் மிகவும் மர்மமான மற்றும் விவாதத்திற்குரிய மதக் கலைப்பொருட்களில் ஒன்றான 'புனித உடற்போர்வை (Shroud of Turin) பின்னணியில் உள்ள வியக்கத்தக்க சிக்கலான உயிரியல் வரலாற்றை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். துணியில் உள்ள டி.என்.ஏ (DNA) கூறுகளை ஆராய்ந்ததில், மனிதர்கள், பாக்டீரியாக்கள், பூஞ்சைகள், தாவரங்கள், விலங்குகள் மற்றும் மத்திய தரைக்கடல் பவளப்பாறைகளின் (Mediterranean red coral) மரபணு தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இது பல நூற்றாண்டுகளாக இந்தத் துணியுடன் தொடர்புடைய மனிதர்கள் மற்றும் சூழல்களைப் பற்றிய புதிய தடயங்களை வழங்குகிறது.
'சயின்டிஃபிக் ரிப்போர்ட்ஸ்' (Scientific Reports) இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், 1978 ஆம் ஆண்டு துணியில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளை பரிசோதிக்க அதிநவீன டி.என்.ஏ வரிசைமுறை தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. முதன்முறையாக, இந்த மாதிரிகளுக்கு 'என்ற அதிநவீன நுட்பத்தைப் ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தினர். இது புனித உடற்போர்வை நார்ப்பகுதிகளுக்குள் பாதுகாக்கப்பட்ட மரபணுப் பொருட்களை முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகத் துல்லியமாக அடையாளம் காண உதவியுள்ளது.
பாரம்பரிய டி.என்.ஏ சோதனைகளைப் போலல்லாமல், இந்த மெட்டாகெனோமிக் வரிசைமுறை (Metagenomic sequencing) தொழில்நுட்பம் ஒரே மாதிரியில் உள்ள பலதரப்பட்ட உயிரினங்களின் டி.என்.ஏ-வைக்கூட கண்டறியும் வல்லமை கொண்டது. நீண்ட காலமாகக் கையாளப்பட்ட மற்றும் பல்வேறு சுற்றுச்சூழல் மாற்றங்களுக்கு ஆளான வரலாற்றுப் பொருட்களைப் படிப்பதற்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
மனித டி.என்.ஏ & நுண்ணுயிரிகளின் உலகம்
ஆராய்ச்சியாளர்களின் முக்கிய கண்டுபிடிப்புகளில் ஒன்று, மனித மைட்டோகாண்ட்ரியல் டி.என்.ஏ-வின் (mitochondrial DNA) பல்வேறு பரம்பரைகள் இதில் இருப்பது தான். இதன் மூலம் வெவ்வேறு மனிதக் குழுக்களின் மரபணுப் பொருட்கள் இந்தத் புனித உடற்போர்வையில் படிந்துள்ளன என்பது தெரியவந்துள்ளது. தாயின் வழியில் பெறப்படும் மைட்டோகாண்ட்ரியல் டி.என்.ஏ, ஒரு சமூகத்தின் தோற்றம் மற்றும் வரலாற்றைப் படிக்கப் பெரிதும் பயன்படுகிறது.
மேலும், அங்கு எதிர்பாராத வகையில் பல்வேறு வகையான நுண்ணுயிரிகள் (Microbiome) வாழ்ந்ததற்கான சான்றுகளும் கிடைத்துள்ளன. மனித தோலில் காணப்படும் பாக்டீரியாக்கள், பல்வேறு பூஞ்சைகள் மற்றும் அதிக உப்புத்தன்மை கொண்ட சூழலில் வாழக்கூடிய நுண்ணுயிரிகள் ஆகியவை இதில் அடங்கும்.
இவற்றில் சில உயிரினங்கள் 'ஆர்க்கியா' (Archaea) என்ற தனித்துவமான ஒற்றை செல் நுண்ணுயிரி பிரிவைச் சேர்ந்தவை. பிற உயிரினங்களால் வாழ முடியாத மிகக் கடுமையான உப்புத் தன்மை கொண்ட சூழலிலும் இவை வாழக்கூடியவை. இந்த கண்டுபிடிப்புகள் அனைத்தும், சபுனித உடற்போர்வையானது பலமுறை மனிதர்களின் தொடுதலுக்கும், பல்வேறு சுற்றுச்சூழல் நிலைமைகளுக்கும் ஆளானதால் உருவான சிக்கலான உயிரியல் பதிவைக் கொண்டுள்ளது என்பதை வெளிப்படுத்துகின்றன.
தாவரங்கள், விலங்குகள் & பவளப்பாறைகளின் டி.என்.ஏ
மனித டி.என்.ஏ மற்றும் நுண்ணுயிரிகளைத் தாண்டி, பல்வேறு தாவர மற்றும் விலங்கு இனங்களின் மரபணு தடயங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன:
தாவரங்கள் - கோதுமை, கேரட், சோளம், வாழைப்பழம் மற்றும் நிலக்கடலை போன்றவற்றின் டிஎன்ஏ கண்டறியப்பட்டுள்ளது.
விலங்குகள் - பசு, பன்றி, கோழி, நாய் மற்றும் பூனை போன்ற வீட்டு விலங்குகளின் மரபணுப் பொருட்களும் இதில் உள்ளன.
பவளப்பாறை - மிகவும் விசித்திரமான கண்டுபிடிப்பாக, மத்திய தரைக்கடல் சிவப்பு பவளப்பாறையுடன் தொடர்புடைய டி.என்.ஏ-வும் இதில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த பரவலான உயிரியல் பொருட்கள், இந்தத் புனித உடற்போர்வை பலவிதமான உயிரினங்களையும் சுற்றுச்சூழல் தாக்கங்களையும் சந்ததித்துள்ளது என்பதைக் காட்டுகிறது. வெவ்வேறு புவியியல் பகுதிகளுக்கு இது கொண்டு செல்லப்பட்டதையும், சேமிக்கப்பட்டதையும் இந்த மரபணு தடயங்கள் பிரதிபலிக்கக்கூடும்.
இருப்பினும், ஒரு குறிப்பிட்ட உயிரினத்தின் டிஎன்ஏ இருப்பதால் மட்டுமே அது எந்தக் காலத்தில் துணியைச் சென்றடைந்தது என்பதை உறுதிப்படுத்த முடியாது. சில தடயங்கள் சமீபத்தில் படிந்திருக்கலாம், சில மிகவும் பழையதாக இருக்கலாம். இது புனித உடற்போர்வையின் வரலாற்றுச் சூழலை மீண்டும் கட்டமைக்க உதவினாலும், பல நூற்றாண்டுகளாக மனித நடமாட்டத்திற்கு உட்படுத்தப்பட்ட ஒரு பொருளின் டிஎன்ஏ-வை முழுமையாக விளக்குவதில் உள்ள சிக்கலையும் காட்டுகிறது.
துரின் துணியின் மர்மத்தை டிஎன்ஏ விடுவிக்குமா?
பல்வேறு மரபணுப் பொருட்கள் கண்டறியப்பட்ட போதிலும், இந்த கண்டுபிடிப்புகளால் புனித உடற்போர்வையின் துல்லியமான பழமை அல்லது அதன் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த முடியாது என்று ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
இயேசுவின் அடக்கம் செய்யப்பட்ட உடலைப் போர்த்தப் பயன்படுத்தப்பட்ட துணி என சில விசுவாசிகளால் நம்பப்படும் இந்தச் சவக்கச்சையில், ஒரு மனித உருவத்தின் மங்கலான அச்சு உள்ளது. இதன் தோற்றம் குறித்து தலைமுறை தலைமுறையாக விவாதிக்கப்பட்டு வருவதால், உலகின் மிகவும் விரிவாக ஆராயப்பட்ட வரலாற்று மற்றும் மதக் கலைப்பொருட்களில் ஒன்றாக இது திகழ்கிறது.
இந்தத் துணி பல நூற்றாண்டுகளாகத் தொடப்பட்டு பல்வேறு சூழல்களுக்கு ஆளானதால், இதன் டி.என்.ஏ என்பது வெவ்வேறு காலக்கட்டங்களில் சேர்ந்த உயிரியல் பொருட்களின் கலவையாகும். எனவே, துணியின் அசல் டி.என்.ஏ எது, பின்னநாட்களில் படிந்த மரபணுத் தடயங்கள் எவை என்பதைத் தனியாகப் பிரிப்பது சாத்தியமற்றது. அதற்குப் பதிலாக, பாரம்பரிய முறைகள் தவறவிடக்கூடிய தகவல்களை நவீன தடயவியல் மரபியல் (Forensic genomics) மற்றும் புரோட்டியோமிக்ஸ் (Proteomics) முறைகள் எவ்வாறு வெளிப்படுத்த முடியும் என்பதை இந்த ஆராய்ச்சி நிரூபிக்கிறது.
வரலாற்றுத் தடயங்களை வெளிப்படுத்தும் நவீன தொழில்நுட்பம்
இந்த சர்வதேச ஆராய்ச்சியில் லங்காஷயர் பல்கலை.யின் தடயவியல் அறிவியல் பேராசிரியர் நோயமி புரோகோபியோ (Noemi Procopio) பங்களித்துள்ளார்.
இது குறித்து பேராசிரியர் நோயமி புரோகோபியோ கூறுகையில், துரின் துணி தொடர்ந்து வரலாற்றாசிரியர்கள், விஞ்ஞானிகள் மற்றும் பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறது. கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு முன்பு சேகரிக்கப்பட்ட மாதிரிகளுக்குப் புதிய நவீன தடயவியல் டி.என்.ஏ தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியதன் மூலம், அதில் பாதுகாக்கப்பட்ட புதிய உயிரியல் தகவல்களை வெளிப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
பல நூற்றாண்டுகால மனித தொடர்புகள் மற்றும் சுற்றுச்சூழல் வெளிப்பாடுகளால் திரட்டப்பட்ட மரபணு தகவல்களின் வளமான காப்பகமாக இந்த சவக்கச்சை திகழ்கிறது. இந்த டி.என்.ஏ ஆதாரங்களால் துணியின் வயது அல்லது நம்பகத்தன்மை பற்றிய அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க முடியாவிட்டாலும், இது அதன் உயிரியல் வரலாறு பற்றிய புதிய நுண்ணறிவுகளை வழங்குகிறது. மேலும் தடயவியல் அறிவியலின் வளர்ச்சி எவ்வாறு வரலாற்றுப் கலைப்பொருட்களிலிருந்து புதிய தகவல்களை வெளிக்கொண்டுவர முடியும் என்பதையும் இது நிரூபிக்கிறது, என்றார்.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.











