- Home
- டெக்னாலஜி
- எச்சரிக்கை! கோடிக்கணக்கான ஆண்ட்ராய்டு போன்கள் ஹேக்கிங் ஆபத்தில்! உடனே இதைச் சரிபாருங்கள்!
எச்சரிக்கை! கோடிக்கணக்கான ஆண்ட்ராய்டு போன்கள் ஹேக்கிங் ஆபத்தில்! உடனே இதைச் சரிபாருங்கள்!
இந்திய ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு CERT-In எச்சரிக்கை விடுத்துள்ளது. உங்கள் போனில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் அதை ஹேக்கர்களிடமிருந்து பாதுகாப்பது எப்படி என்பதைப் பற்றி அறியுங்கள்.

ஆண்ட்ராய்டு போன்கள் ஹேக்கிங் ஆபத்தில்: உடனே அப்டேட் செய்யுங்கள்!
இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் ஹேக்கர்களால் தாக்கப்படும் அபாயத்தில் உள்ளதாக மத்திய அரசின் சைபர் செக்யூரிட்டி அமைப்பான CERT-In (Indian Computer Emergency Response Team) எச்சரிக்கை விடுத்துள்ளது. CIVN-2025-0202 என்ற புதிய அறிக்கையில், ஆண்ட்ராய்டில் உள்ள பல பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து எச்சரித்துள்ளது.
என்னென்ன ஆபத்துகள் உள்ளன?
Android 13, 14, 15 மற்றும் சமீபத்திய Android 16 ஆகிய பதிப்புகள் இந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. இந்த குறைபாடுகளைப் பயன்படுத்தி ஹேக்கர்கள், பயனரின் அனுமதியின்றி மொபைலுக்குள் நுழைந்து, தனிப்பட்ட தகவல்களையும், நிதி சார்ந்த தரவுகளையும் திருட முடியும். மேலும், மொபைலில் உள்ள முக்கியமான கோப்புகளை அழிப்பது, வைரஸ் புரோகிராம்களை செயல்படுத்துவது அல்லது மொபைலை செயலிழக்கச் செய்வது போன்ற மோசமான தாக்குதல்களையும் நடத்த முடியும் என்று CERT-In தெரிவித்துள்ளது.
இந்த குறைபாடுகள் எங்கே உள்ளன?
இந்த பாதுகாப்பு குறைபாடுகள், ஆண்ட்ராய்டு ஃபிரேம்வொர்க், ஆண்ட்ராய்டு ரன்டைம், சிஸ்டம், வொயிட்வைன் DRM, மீடியாடெக் சிப்கள், குவால்காம் சிப்கள் மற்றும் அதன் மென்பொருள்கள் என பல இடங்களில் கண்டறியப்பட்டுள்ளன.
உங்களுக்கு ஏன் இது முக்கியம்?
இந்தியாவில் பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்குகின்றன. இதனால், பல கோடி பயனர்கள் நேரடியாக இந்த அச்சுறுத்தலுக்கு ஆளாகின்றனர். இந்த குறைபாடுகள் சிஸ்டம் மற்றும் சிப்செட் அளவில் இருப்பதால், சாம்சங், சியோமி, ஒன்பிளஸ், ரியல்மீ, விவோ, ஒப்போ, மோட்டோரோலா மற்றும் கூகுள் பிக்சல் போன்ற பல நிறுவனங்களின் போன்களும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
ஆண்ட்ராய்டு பயனர்கள் உடனடியாக தங்கள் போன் தயாரிப்பு நிறுவனங்கள் வெளியிடும் சமீபத்திய பாதுகாப்பு அப்டேட்டுகளை இன்ஸ்டால் செய்ய வேண்டும். உங்கள் போனின் செட்டிங்ஸ் சென்று, "Software Update" என்பதைத் தேர்வு செய்து, அப்டேட் உள்ளதா என்பதைச் சரிபார்க்கவும்.
மொபைலின் பாதுகாப்புப் பேட்ச்
உங்கள் மொபைலின் பாதுகாப்புப் பேட்ச் (security patch level) 2025-09-01 அல்லது 2025-09-05 என்று இருந்தால் நீங்கள் பாதுகாப்பாக உள்ளீர்கள். இல்லையென்றால் உடனடியாக அப்டேட் செய்வது நல்லது. மேலும், கூகுள் பிளே ப்ரொடக்ட் வசதியை ஆன் செய்து வைத்திருப்பது, தெரியாத தளங்களிலிருந்து செயலிகளை டவுன்லோட் செய்யாமல் இருப்பது, சந்தேகத்திற்குரிய இணைப்புகளைக் கிளிக் செய்யாமல் இருப்பது போன்றவை உங்கள் போனைப் பாதுகாக்க உதவும்.