Flipkart, Amazon இல் ஆர்டர் செய்தவுடன் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்?
பிளிப்கார்ட், அமேசானில் நாம் விரும்பும் பொருட்களை ஆர்டர் செய்யும் போது கவனிக்க வேண்டிய விஷயங்களை முந்தைய பதிவில் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக, பொருளை ஆர்டர் செய்தவுடன் கவனிக்க வேண்டிய முக்கியமான சில விஷயங்களை இங்குக் காணலாம்.
வாடிக்கையாளர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த தீபாவளி சிறப்பு தள்ளுபடி அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் செப்.23 ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. அமேசான் பிரைம் வாடிக்கையாளர்கள், பிளிப்கார்ட் பிளஸ் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நாள் முன்கூட்டியே தள்ளுபடி விற்பனை தொடங்குகிறது.
ஆன்லைன் ஷாப்பிங்கில் பொருட்களை ஆர்டர் செய்யும் போதும், ஆர்டர் செய்த பின்னரும் முக்கியமான சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் மோசடி ஏமாற்று வலையில் சிக்க நேரிடும். ஒரு பொருளை ஆர்டர் செய்வதற்கு முன்பு என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள இங்குக் கிளிக் செய்யவும்.
உஷாாாார்… Amazon, Flipkart எல்லாவற்றிலும் ஆஃபர் மழை! ஆர்டர் செய்யும் போது கவனம்!!
ஆர்டர் செய்த பிறகு, நீங்கள் ஆர்டர் செய்த தயாரிப்பு சரி தானா என்பதை பில் மூலம் சரிபார்த்துக் கொள்ளவும். அதாவது அந்த தயாரிப்பை விற்கும் விற்பனையாளர், விற்பனையாளரின் ஐடி, தயாரிப்பு தேதி, ஆர்டர் செய்த பொருள் எங்கு இருந்து வருகிறது, எப்போது வரும், டெலிவரி செய்யப்படும் தேதி, டெலிவரி கட்டணம் என அனைத்தையும் சரிபார்க்கவும்.
ஆர்டர் செய்த பொருள் டெலிவரி ஆனதும், அப்படியே பிரித்து விடக்கூடாது. எந்த ஒரு பொருளும் நமது கைக்கு கிடைத்தவுடன், முதலில் அதை வீடியோ எடுக்கவும். வீடியோ எடுத்துக் கொண்டே பேக்கேஜை பிரிக்கவும். கண்ணாடி, திரவப் பொருட்களாக இருந்தால் கவனமாக பிரிக்கவும்.
அதன்பிறகு, நீங்கள் ஆர்டர் செய்த பொருளை பயன்படுத்திப் பார்க்கவும். இதையும் அப்படியே வீடியோ எடுக்க வேண்டும். ஒருவேளை பேக்கேஜ் சரி இல்லை என்றாலோ, பழைய பொருள், தவறான பொருள் கிடைத்தாலோ, அதுகுறித்து நீங்கள் புகாரளிப்பதற்கு இந்த வீடியோ தான் சாட்சி. மேலும், உடனே அமேசான் அல்லது பிளிப்கார்ட் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு தொடர்புகொண்டு நடந்தவற்றை கூறி உடனே புகாரளிக்க வேண்டும்.
வீடியோ எடுப்பதற்கு மொபைல் இல்லை எனில், நெருங்கியவர்கள், பக்கத்து வீட்டுக்காரர்களிடம் வீடியோ எடுக்குமாறு கேட்கலாம். தவறில்லை. இவ்வாறு வீடியோ எடுப்பதற்கு வெறும் ஓரிரு நிமிடங்கள் மட்டுமே ஆகும். ஆனால், இந்த நிமிடங்கள் தான் நீங்கள் மோசடி வலையில் இருந்து தப்பிப்பதற்கு உங்களுக்கு உதவும்.