ஏர்டெல் தில்லு-முல்லு? வேண்டுமென்றே 4ஜி வேகத்தை குறைக்கிறதா??
ஏர்டெலில் கடந்த சில வாரங்களாக 4ஜி வேகம் குறைவாக இருப்பதாக புகார்கள் எழுந்த நிலையில், வாடிக்கையாளர்களை 5ஜிக்கு மாற்றுவதற்காக இதுபோல் 4ஜியின் வேகத்தை குறைப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்தியாவில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்டது. தொடக்கத்தில் ஏர்டெல் நிறுவனம் 5ஜி சேவையை சில நகரங்களில் கொண்டு வந்தது. ஏர்டெலுடன் ஒப்பிடுகையில் ஜியோ நிறுவனம் சில நாட்கள் தாமதமாக 5ஜியை கொண்டு வந்தாலும், அடுத்தடுத்த நாட்களில் பல மாநிலங்கள், பல நகரங்களில் 5ஜியை விரிவுபடுத்தியது.
ஏர்டெலைப் பொறுத்தவரையில் 5ஜி இன்டர்நெட்டுக்கான டேட்டா பேக் குறித்து முழுமையான விவரங்கள் வெளிவரவில்லை. 4ஜி கட்டணத்தில், 4ஜிக்கு எவ்வளவு ஜிபி டேட்டா வழங்கப்படுகிறதோ, அதையே 5ஜி வேகத்தில் பயனர்கள் பெறுகின்றனர். அதாவது, ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா பெறும் பயனர்கள், அதே 2ஜிபி டேட்டாவை தான் 5ஜி வேகத்தில் உபயோகிக்கின்றனர். இதனால் பல பயனர்கள் 5ஜி மாற்றும் போது, 2ஜிபி டேட்டாவை சட்டென்று காலியாகிவிடுவதாக கவலை தெரிவித்தனர்.
https://twitter.com/bhajanpreet86/status/1633738085061066752?s=20
இதன் காரணமாக 5ஜி தேவைப்படும் போது மட்டும் ஆன் செய்து பயன்படுத்திவிட்டு, மிச்ச நேரங்களில் 4ஜி நெட்வொர்க்கை தான் பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், கடந்த சில வாரங்களாக 4ஜியின் வேகம் மிகமிக மோசமாக இருப்பதாக பல வாடிக்கையாளர்கள் டுவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் குற்றம்சாட்டி வருகின்றனர். பலருக்கு வாட்ஸ்அப்பில் ஃபைல்கள், போட்டோக்களை கூட அனுப்ப முடியவில்லை. இன்னும் சிலருக்கு கூகுள் பக்கம் கூட ஓபன் செய்ய முடியவில்லை என்று கூறப்படுகிறது.
வாடிக்கையாளர்களை 5ஜி நெட்வொர்க்கிற்கு கொண்டு வருவதற்காக, வேண்டுமென்ற 4ஜி வேகத்தை குறைக்கும் மார்க்கெட்டிங் போக்கை ஏர்டெல் கையாண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. 4ஜி வேகம் குறைவாக இருப்பதாக ஏர்டெல் தரப்பில் புகார் அளித்தாலும், அதற்கான நடவடிக்கை மெதுவாகவே எடுக்கப்படுகிறது.
https://twitter.com/manigandan_s/status/1631510166947655680?s=20
கடந்த வாரம் இந்தியாவில் சுமார் 125 நகரங்களில் ஏர்டெல் தனது அல்ட்ராஃபாஸ்ட் 5ஜி சேவையை விரிவுபடுத்தியுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் சென்னை, கோயம்புத்தூர், ஓசூர், மதுரை, திருச்சி ஆகிய நகரங்களில் ஏற்கெனவே ஏர்டெல் 5ஜி இருந்தது. தற்போது கூடுதலாக, வேலூர், சேலம், திருப்பூர், திருநெல்வேலி ஆகிய இடங்களில் 5ஜி சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதனால் ஏர்டெல் 5ஜி பிளஸ் சேவையானது இந்தியாவில் இப்போது மொத்தம் 265 நகரங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கிறது.