ரூ.399-க்கே 10 மடங்கு அதிக வசதி.. ChatGPT Go இந்தியாவில் அறிமுகம்.. முழு விபரம் இங்கே
OpenAI நிறுவனம் இந்திய பயனர்களுக்காக மாதத்திற்கு ரூ.399-ல் புதிய ChatGPT Go சந்தா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. UPI கட்டண முறை மூலம் எளிதில் சந்தா செலுத்தலாம்.

சாட்ஜிபிடி கோ
OpenAI நிறுவனம் இந்திய பயனர்களுக்காக புதிய சாட்ஜிபிடி கோ (ChatGPT Go) சந்தா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. மாதத்திற்கு வெறும் ரூ.399-க்கே கிடைக்கும் இந்த திட்டம், இலவசப் பிளானை விட அதிக வசதிகளை வழங்குகிறது. மாணவர்கள், ஃப்ரீலான்சர்கள், தொழில்முனைவோர் ஆகியோருக்கு ஏற்றவாறு இருப்பதால், குறைந்த செலவில் அதிக பயன்பாடு பெறப்படுகிறது விரும்புவோருக்கு இது பெரிய நிம்மதியை கொடுக்கும்.
10 மடங்கு வேகம்
இந்த திட்டத்தில், பயனர்களுக்கு 10 மடங்கு அதிக மெசேஜ் வரம்பு, 10 மடங்கு அதிக பட உருவாக்கம், 10 மடங்கு அதிக கோப்பு அப்லோடு மற்றும் இரட்டை நினைவக திறன் வழங்கப்படுகிறது. இதனால் தினசரி வேலைகளில் இடையூறு இல்லாமல் பயன்படுத்த முடியும். பெரிய ஆவணங்களை எழுதுவதோ, படங்களை உருவாக்குவதோ, கோப்புகளை அப்லோடு செய்து பகுப்பாய்வு செய்வதோ எதுவாக இருந்தாலும், Go பிளான் போதுமான திறனை வழங்குகிறது.
OpenAI இந்தியா புதிய திட்டம்
OpenAI நிறுவனத்தின் துணைத் தலைவர் நிக் டர்லே இதுபற்றி கூறுவதாவது, “இந்திய பயனர்கள் கேட்ட மிகப் பெரிய தேவைகள் குறைந்த விலை மற்றும் உள்ளூர் கட்டண வசதி என்பதுதான். அதற்காகவே இந்த Go திட்டம் இந்தியாவில் முதலில் அறிமுகமாகி உள்ளது. முக்கியமாக, அனைத்து சந்தா திட்டங்களுக்கும் இனி விலை இந்திய ரூபாயில் காட்டப்படும். இதனால் டாலர் மாற்று குழப்பம் நீங்கும்.
யுபிஐ கட்டணமுறை
மேலும், இந்தியாவில் மிகவும் பிரபலமான யுபிஐ (UPI) கட்டண முறை ChatGPT சந்தாவில் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் Google Pay, PhonePe, Paytm போன்ற ஆப்ஸ்களைப் பயன்படுத்தி எளிதில் சந்தா செய்யலாம். இது, இந்திய பயனர்களை எளிதாக அணுகி, பெரிய அளவிலான மக்கள் ChatGPT-ஐ பயன்படுத்த உதவுகிறது” என்று கூறினார்.
ரூ.399 சந்தா
தற்போது ChatGPT நான்கு திட்டங்களை வழங்குகிறது. அவை பின்வருமாறு, இலவச பிளான், புதிய Go பிளான் (ரூ.399), பிளஸ் பிளான் (ரூ.1,999), Pro பிளான் (ரூ.19,999). இதில் Go பிளான் இலவசம் மற்றும் பிளஸ் இடைவெளியை நிரப்புகிறது. குறைந்த செலவில் அதிக வசதிகளைத் தரும் இந்த இந்தியா-முதல் முயற்சி, உலகளாவிய ChatGPT வளர்ச்சிக்கு வழிகாட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.