- Home
- டெக்னாலஜி
- டெக் டிப்ஸ்
- Howrah Bridge: பிடித்த பாடல்..பிடித்த நிறத்தில் ஜொலிக்கும் ஹவுரா பிரிட்ஜ்! ஆண்டுக்கு 10 நாட்கள் மக்களுக்கு ஸ்பெஷல் சாய்ஸ்
Howrah Bridge: பிடித்த பாடல்..பிடித்த நிறத்தில் ஜொலிக்கும் ஹவுரா பிரிட்ஜ்! ஆண்டுக்கு 10 நாட்கள் மக்களுக்கு ஸ்பெஷல் சாய்ஸ்
Howrah Bridge: கொல்கத்தாவில் உள்ள ஹவுரா பாலத்தை பொதுமக்கள் தங்களுக்கு பிடித்த நிறங்களில் ஒளிரச் செய்யும் புதிய திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 10 நாட்கள் நிறம், பாடல் தேர்வு செய்யும் வாய்ப்பு வழங்குவது குறித்த முழு தகவல்களை பார்க்கலாம்.

ஹவுரா பிரிட்ஜ்
கொல்கத்தா என்றாலே நினைவுக்கு வரும் காட்சிகளில் ஒன்று ஹவுரா பாலம். ஹூக்ளி நதியின் மீது பிரம்மாண்டமாக நிற்கும் இந்தப் பாலம், வெறும் போக்குவரத்துக்கான கட்டமைப்பு மட்டுமல்ல. கொல்கத்தாவின் வரலாறு, தொழில்நுட்பம், வர்த்தகம், மக்கள் வாழ்க்கை ஆகியவற்றுடன் இணைந்த ஒரு முக்கிய அடையாளமாகவே மாறிவிட்டது.
1943-ல் பயன்பாட்டுக்கு வந்த இந்தப் பாலம், முதலில் “New Howrah Bridge” என்று அழைக்கப்பட்டது. பின்னர் 14 ஜூன் 1965-ல் கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் நினைவாக "Rabindra Setu" என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இருந்தாலும் இன்று வரை பொதுமக்கள் மத்தியில் பழைய பெயரான ஹவுரா பாலம் (Howrah Bridge) தொடர்ந்து பிரபலமாகவே இருந்து வருகிறது
ஹவுரா பாலம் எங்கு உள்ளது?
மேற்கு வங்கத்தில் உள்ள ஹவுரா நகரையும், கொல்கத்தா நகரையும் ஹூக்ளி நதியின் குறுக்கே இந்தப் பாலம் இணைக்கிறது. இந்த பாலம் ஹவுரா ரயில் நிலையம் அருகே இருப்பதால், தினசரி பயணிகளுக்கும் நகரின் வர்த்தகப் போக்குவரத்துக்கும் இது முக்கியமான இணைப்பாக உள்ளது.
ஹவுரா பாலத்தின் மொத்த நீளம் சுமார் 705 மீட்டர். அதன் முக்கியமான central span சுமார் 457.2 மீட்டர். பாலத்தின் பிரதான எஃகு tower-கள் சுமார் 82 மீட்டர் உயரம் கொண்டதாக மேற்கு வங்க சுற்றுலாத்துறை குறிப்பிட்டுள்ளது.
தினமும் எத்தனை பேர் இந்தப் பாலத்தை கடக்கிறார்கள்?
இதுதான் ஹவுரா பாலத்தின் மிகப்பெரிய சுவாரஸ்யங்களில் ஒன்று. மேற்கு வங்க அரசின் சுற்றுலாத்துறை தகவலின்படி, தினசரி சுமார் 1 லட்சம் வாகனங்களும் 1.5 லட்சத்துக்கும் அதிகமான பொதுமக்களும் பாலத்தை பயன்படுத்துகின்றனர். இது ஒரு வரலாற்றுச் சின்னமாக இருந்தாலும், இன்றும் நகரத்தின் அன்றாட போக்குவரத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
புதிய தொழில்நுட்பம்
- ஹவுரா பாலத்தில் 3,825 நவீன LED விளக்குகள் (luminaires) பொருத்தப்பட்டுள்ளன. இவை அனைத்தும் சேர்ந்து 385 கிலோவாட் மின்திறனில் செயல்படும்.
- இந்த விளக்குகளை தேவைக்கேற்ப வெவ்வேறு நிறங்கள் மற்றும் ஒளி வடிவங்களில் இயக்க முடியும். இதன் மூலம் பாலத்தின் முக்கிய தூண்கள் (main pylons), கட்டமைப்பின் வெளிப்புற வடிவம் (structural profile) உள்ளிட்ட பகுதிகளை அழகாக ஒளிரச் செய்து, Dynamic Lighting காட்சிகளை உருவாக்க முடியும்.
- மேலும், இந்த ஒளிக் காட்சிகளை இசையுடன் ஒருங்கிணைத்து Synchronized Sound & Light Show நடத்தும் வகையிலும் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது, இசையின் வேகம் மற்றும் ஒலிக்கு ஏற்ப பாலத்தின் விளக்குகளும் மாறி மாறி ஒளிரும்.
- இந்த நவீன விளக்கு அமைப்பை ஏற்படுத்தும் திட்டத்திற்கான மதிப்பு சுமார் ரூ.22.35 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மேலும், பிறந்தநாள், திருமண நாள் உள்ளிட்ட தனிப்பட்ட வாழ்த்துச் செய்திகளை பாலத்தில் ஒளியாகக் காட்டும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்கான கட்டணம் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் விரும்பிய நிறத்தில் ஹவுரா பாலம்
ஹவுரா பாலத்தை நிர்வகிக்கும் சியாமா பிரசாத் முகர்கி துறைமுகம் (SMPK) தெரிவித்துள்ள சமீபத்திய தகவலின்படி,
- ஆண்டுக்கு 10 நாட்கள் பொதுமக்கள் தங்களுக்கு பிடித்த ஹவுரா பாலத்தை எந்த நிறங்களில் ஒளிரச் செய்ய வேண்டும் என்பதைத் தேர்வு செய்யலாம்.
- அதனுடன் ஒரு பாடல் அல்லது voice message-ஐயும் தேர்வு செய்யும் வாய்ப்பு இருக்கும்.
- அந்த ஒலி மில்லினியம் பூங்கா (Millennium Park) பகுதியில் ஒலிக்கச் செய்யப்படும். மொபைல் செயலி மூலமாகவும் அதை கேட்கும் வசதி திட்டமிடப்பட்டுள்ளது.
- இந்த 10 நாட்களில் சேவை இலவசமா அல்லது கட்டணத்துடனா என்பது விரைவில் முடிவு செய்யப்படும்.
- எந்த 10 நாட்கள் பொதுமக்களுக்கு ஒதுக்கப்படும், விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட கூடுதல் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்
- இந்த புதிய வசதி துர்கா பூஜையில் இருந்து தொடங்க திட்டமிட்டுள்ளதாக துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆண்டுக்கு 50 நாட்கள் ஸ்பெஷல்
இதுதவிர, ஆண்டுக்கு மேலும் 50 நாட்களில் துறைமுக நிர்வாகமே அந்த நாளின் முக்கியத்துவத்துக்கு ஏற்ப பாலத்தின் நிறங்களையும் ஒலி நிகழ்ச்சியையும் தேர்வு செய்யும். உதாரணமாக, சுதந்திர தினத்தில் தேசியக் கொடி வண்ணங்களில் பாலத்தை அலங்கரிப்பது போன்ற நிகழ்ச்சிகள் இடம்பெறலாம்.

