Savukku Shankar: யூடியூபர் சவுக்கு சங்கருக்கு திடீர் நெஞ்சுலி! உடல்நிலை எப்படி இருக்கு? பரபரப்பு தகவல்!
Savukku Shankar Admitted Hospital: சவுக்கு சங்கருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு, சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அரசியல் விமர்சகரும், யூடியூப்பருமான சவுக்கு சங்கர் சமூக வலைதளத்தில் அரசியல் கட்சி தலைவர்களை கடுமையாக விமர்சனம் செய்து வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். குறிப்பாக திமுக ஆட்சியையும், முதலமைச்சர் ஸ்டாலின், உதயநிதி, சபரீசன் மற்றும் திமுகவினருக்கு எதிராக தொடர்ந்து வீடியோ வெளியிட்டு வந்தார். இது மட்டுமில்லாமல் அரசு அதிகாரிகளையும், காவல் துறை அதிகாரிகளையும் ஒருமையில் பேசி வீடியோ வெளியிட்டார்.
இந்நிலையில் ரெட் பிக்ஸ் என்கின்ற யூடியூப் தொலைக்காட்சியில் பெண் காவல்துறையினரை பற்றி அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டிருந்தார். இது தொடர்பாக பெண் காவலர்கள் கொடுத்த புகாரின் பேரில் சவுக்கு சங்கரை தேனியில் வைத்து போலீசார் கைது செய்தனர். அப்போது அவரிடம் இருந்து கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதனையடுத்து சிறையில் அடைக்கப்பட்ட சவுக்கு சங்கர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் பெண் காவலர் கொடுத்த புகாரின் பேரில் அடுத்தடுத்து வழக்குகளில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதனால் சிறையில் இருந்து வெளியே வர முடியாத சூழ்நிலைக்கு சவுக்கு சங்கர் தள்ளப்பட்டார்.
குண்டர் சட்டத்திற்கு கீழ் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் என இரு நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் குண்டர் சட்டத்தை ரத்து செய்து சவுக்கு சங்கர் சமீபத்தில் விடுதலையானார்.
சிறையில் இருந்து வெளியே வந்த சவுக்கு சங்கர் அவ்வப்போது தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்து வந்தார். இந்நிலையில் சவுக்கு சங்கருக்கு திடீரென நெஞ்சுலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மருத்துவ அறிக்கை வெளி வந்த பிறகே உடல் நிலை எப்படி இருக்கிறது என்பது தெரியவரும்.