- Home
- Tamil Nadu News
- மகளிர் சுய உதவி குழுவிற்கு குஷி.! கொத்து கொத்தாக சலுகைகளை பெற புதிய அறிவிப்பு வெளியீடு
மகளிர் சுய உதவி குழுவிற்கு குஷி.! கொத்து கொத்தாக சலுகைகளை பெற புதிய அறிவிப்பு வெளியீடு
தமிழக அரசு மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்த அட்டை மூலம் பேருந்துகளில் பொருட்களை இலவசமாக எடுத்துச் செல்லவும், கோ-ஆப்டெக்ஸில் தள்ளுபடி பெறவும், கடனுதவி திட்டங்களில் முன்னுரிமை பெறவும் முடியும்.

மகளிர்களுக்கான தமிழக அரசு திட்டங்கள்
பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் கடனுதவி திட்டங்கள், மானிய திட்டங்கள், மகளிர் உரிமை தொகை போன்ற திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. மேலும் தமிழ்நாட்டில் ஊரகம் மற்றும் நகரப் பகுதிகளில் வசிக்கும் ஏழை மற்றும் விளிம்புநிலை மக்களின் வறுமையை ஒழிக்கவும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்படி, தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலமாக ஊரகப் பகுதிகளில் இதுவரை 3 லட்சத்து 29 ஆயிரத்து 39 சுயஉதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
மகளிர் சுய உதவி குழுவிற்கு அடையாள அட்டை
இந்தக் குழுக்களில் 37 லட்சத்து 76 ஆயிரத்து 575 பெண்கள் உள்ளனா். இதேபோல, நகரப் பகுதிகளில் 15 லட்சத்து 98 ஆயிரத்து 144 மகளிரைக் கொண்டு 1 லட்சத்து 47 ஆயிரத்து 430 சுயஉதவிக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மொத்தமாக 4.76 லட்சம் சுய உதவிக் குழுக்களில் சுமாா் 54 லட்சம் மகளிா் உள்ளனா். இந்நிலையில் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கிடும் வகையில் அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு தொடங்கி உள்ளது.
9 மாதங்களில் மகளிர்களுக்கு அடையாள அட்டை
இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள மகளிா் சுய உதவிக் குழுக்களில் இடம்பெற்றுள்ள சுமார் 60 லட்சம் மகளிருக்கு அடையாள அட்டை வழங்கும் பணியை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன் படி 9 மாதங்களில் அனைத்து மகளிர் சுய உதவி குழுவில் உள்ள பெண்களுக்கும் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, அரசால் உருவாக்கப்பட்ட சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த மகளிருக்கு முதல் கட்டமாகவும், தன்னாா்வ தொண்டு நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட குழுக்களின் உறுப்பினா்களுக்கு இரண்டாவது கட்டமாகவும் வழங்கப்பட உள்ளது.
மகளிர் சுய உதவி குழுவிற்கு புதிய சலுகை
இந்த அடையாள அட்டையில், உறுப்பினர் பெயர், மகளிர் சுய உதவிக் குழு பெயர், பிறந்த தேதி, ரேசன் அட்டை எண், முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்ட எண், இரத்த வகை, முகவரி, தொடர்பு எண் ஆகிய விவரங்களுடன் க்யூ ஆர் கோடு வசதியுடம் இது வழங்கப்பட உள்ளது.
மகளிர் சுய உதவி குழுவிற்கு அடையாள அட்டை பயன்கள்
மகளிர் சுய உதவிக்குழு அடையாள அட்டை வைத்திருக்கும் பெண்கள், ஏசி பேருந்துகளை தவிர்த்து அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் 25 கிலோ வரை தயாரிப்பு பொருட்களை கட்டணமின்றி எடுத்த செல்ல அனுமதிக்கப்படுவார்கள். மேலும், கோ-ஆப்டெக்ஸில் துணிகள் வாங்கும் போது 5 சதவீதம் கூடுதல் தள்ளுபடியும் வழங்கப்படும்.
சுயஉதவிக் குழு உறுப்பினா் அடையாள அட்டை வைத்துள்ள உறுப்பினா்களுக்கு கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை வழங்கக்கூடிய கடனுதவி திட்டங்களில் முன்னுரிமை அளிக்கப்படும்ஆவின் நிறுவன பொருள்களை சலுகை விலையில் பெறலாம். தமிழ்நாடு முழுவதும் உள்ள இணைய சேவை மய்யங்களின் சேவைகளைப் பெறும் போது, 10 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படும்