நாளை பஸ், ஆட்டோ ஓடுமா.? வெளியூர்களுக்கு பயணம் செய்யலாமா.? இதோ லேட்டஸ்ட் அப்டேட்
தமிழகத்தில் நாளை நடைபெறும் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தால் பேருந்துகள், கடைகள், ஆட்டோக்கள் இயங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தொழிற்சங்கங்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துப் போராட்டத்தில் ஈடுபடுகின்றன.

நாளை நாடு தழுவிய வேலை நிறுத்தம்
நாளை நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பேருந்துகள், கடைகள், ஆட்டோக்கள் இயங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தொழிற்சங்கங்கள் துறை நிறுவனங்களைதனியாருக்கு விற்க கூடாது. தொழிலாளர்களை வஞ்சிப்பதற்காக அமல்படுத்த உள்ள 4 சட்ட தொகுப்புகளை உடனே திரும்ப பெற வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்,
வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும், மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். மத்திய- மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 13 தொழிற்சங்கங்கள் நாளைய தினம் (9-ந்தேதி) நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து உள்ளது.
தமிழகத்தில் வேலை நிறுத்தப்போராட்டம்
தமிழ்நாட்டில் இந்த வேலை நிறுத்த போராட்டத்துக்கு தி.மு.க.வின் தொழிற்சங்கமான தொ.மு.ச மற்றும் அதன் கூட்டணி கட்சிகளாக உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தொழிற்சங்கமான சி.ஐ.டி.யு, இந்திய கம்யூனிஸ்டு தொழிற்சங்கமான ஏ.ஐ.டி.யு.சி., காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 13 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்து உள்ளன. இதனால் தமிழகத்தில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்தாக கூறப்படுகிறது.
அதற்கு ஏற்ப இந்த வேலை நிறுத்த போராட்டத்தை தமிழ் நாட்டில் வெற்றி பெறச் செய்வோம் என்று தொ.மு.ச. பேரவை பொதுச் செயலாளர் மு.சண்முகம், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட பலர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். எனவே இந்த வேலை நிறுத்த போராட்டத்தின் போது தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மறியல் போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் பஸ் இயங்குமா.?
அதே நேரம் தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள தி.மு.க.வின் தொழிற்சங்கமான தொ.மு.ச இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்பதால் பொதுமக்களின் முக்கிய தேவையான பேருந்துகள் இயங்குமா.? என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து கழக அரசு உயர் அதிகாரிகள் கூறுகையில், தமிழ்நாட்டில் வழக்கம் போல் நாளை பஸ்களை இயக்க நடவடிக்கை மேற்கொண்டு இருப்பதாக தெரிவித்தார்.
நாளைக்கு பணிக்கு வராத ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது. மேலும் திடீரென விடுப்பு எடுக்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். இது மட்டுமில்லாமல் பொது வேலைநிறுத்தத்தில் அரசு நிறுவனங்கள் பங்கேற்க கூடாது என்று உச்சநீதிமன்ற தீர்ப்பு வழங்கி உள்ளது. எனவே அதன் அடிப்படையில் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்க வாய்ப்பு குறைவு தான். அனைத்து போக்குவரத்து சேவைகளும் இயங்கும் என அவர் தெரிவித்தார்.
கடைகள் இயங்குமா.? ஆட்டோ ஓடுமா.?
மற்றோரு சாதக அம்சமாக அ.தி.மு.க.வின் தொழிற்சங்கமான அண்ணா தொழிற்சங்கம் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்கவில்லை. இதனால் இந்த தொழிற்சங்கத்தை சேர்ந்த ஊழியர்கள் வேலைக்கு வருவார்கள். இதனால் பேருந்துகள் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.
இதே போல தமிழகதித்ல கடைகள் அனைத்தும் வழக்கம் போல் திறந்திருக்கும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். தொழிற் சங்கத்தினிர் அழைப்பு விடுத்துள்ள போராட்டத்தில் வணிகர் சங்கம் பங்கேற்கவில்லை என்றும் அவர் கூறி உள்ளார்.
வங்கிகள் சேவை பாதிக்க வாய்ப்பு
அதே நேரம் சிஐடியூ உள்ளிட்ட தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்களின் ஆட்டோக்கள் மட்டும் ஓடாது என தகவல் வெளியாகியுள்ளது. மற்றபடி வங்கிகள் இந்த நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் வங்கித் துறை பங்கேற்கவுள்ளதால் நாளைய தினம் வங்கி சேவைகள் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.